இந்தியப் பெருமுதலாளிகள் கோடிகோடியாய்ச் செல்வத்தைக் குவித்து, உலகப் பெருமுதலாளிகளின் தர வரிசையில் முக்கிய இடத்தைப் பிடிக்குமளவுக்கு முன்னேறி விட்டார்கள்; ஆசியாவின் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நிறுவி அம்பானி சாதனை படைத்துள்ளார்; பிரிட்டனின் எஃகு ஆலையை டாடா கைப்பற்றி விட்டார்; இந்தியப் பெருமுதலாளிகளின் இந்த அபார வளர்ச்சிக்குக் காரணம் தனியார்மயம்  தாராளமயம்; அரசின் தலையீடுகள்  கட்டுப்பாடுகள் இல்லாமலிருந்தால் தனியார் முதலாளிகள் தமது தொழில் திறமையால் பெருமளவு முன்னேறிச் சாதிக்க முடியும்; தொழிலும் வர்த்தகமும் விரிவடைந்து இந்திய நாடு வல்லரசாக ஒளிரும்  இப்படி முதலாளித்துவப் பொருளாதாரவாதிகளும் பத்திரிகைகளும் அரசின் தலையீடற்ற தனியார்மயத்தை வியந்து துதிபாடுகின்றன.


 இல்லை; இது வளர்ச்சியில்லை; இது அப்பட்டமான சூறையாடல். பெருமுதலாளிகள் தமது தொழில் திறமையால் இவ்வளவு செல்வத்தை ஈட்டவில்லை. அரசின் தலையீடு கட்டுப்பாடு இல்லாததால்தான் அவர்களால் இவ்வளவு தூரம் முன்னேற முடிந்துள்ளது என்பது அப்பட்டமான பொய்.


 உண்மையில், அரசு தலையிட்டு பொதுச் சொத்துக்களை அடிமாட்டு விலைக்குத் தனியார் முதலாளிகளுக்குத் தாரைவார்த்துக் கொடுத்ததால்தான் அவர்களால் கோடிகோடியாய் செல்வத்தைக் குவிக்க முடிந்துள்ளது. இதுதவிர, அரசு தலையிட்டு இத்தனியார் முதலாளிகளுக்குக் கணக்கற்ற சலுகைகளையும் வரிவிலக்குகளையும் வாரியிறைத்ததால்தான் அவர்களால் கொழுக்க முடிந்தது. இந்த உண்மைகளை நிரூபிக்க மாபெரும் ஆராய்ச்சிகள் தேவையில்லை. ஆண்டுதோறும் இந்திய அரசின் தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரி வெளியிட்டு வரும் அறிக்கைகளே இந்த உண்மைகளை மெய்ப்பித்துக் காட்டுகின்றன.


 · பொதுத்துறை நிறுவனங்களில் அரசுப் பங்குகளை அவற்றின் உண்மை மதிப்பைவிடக் குறைந்த விலைக்கு தனியார் முதலாளிகளுக்கு விற்றதன் மூலம் தனியார்மயம்  தாராளமயம் தொடங்கப்பட்ட 199192ஆம் ஆண்டிலேயே அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.3,442 கோடிகள். ஆரம்பத்தில், நட்டத்தில் இயங்கும் அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதாகச் சொல்லி தொடங்கப்பட்ட இக்கொள்ளை, வாஜ்பாயியின் ஆட்சிக் காலத்தில், இலாபமீட்டும் அரசுத்துறை நிறுவனங்களையும் சூறையாடுவதாக மாறியது. பெருமுதலாளித்துவ நிறுவனங்களின் கூட்டமைப்பான சி.ஐ.ஐ. கோரியபடி, பா.ஜ.க. ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் (2004) அவசர அவசரமாக இலாபத்தில் இயங்கிக் கொண்டிருந்த எண்ணெய்  எரிவாயுக் கழகம் உள்ளிட்ட 6 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் அடிமாட்டு விலைக்கு (ஏறத்தாழ 15,000 கோடிக்கு) விற்கப்பட்டன.


 · 2000வது ஆண்டு முதல் 2002க்குள் பால்கோ, இந்துஸ்தான் துத்தநாக நிறுவனம், வி.எஸ்.என்.எல்; ஐ.பி.சி.எல். உட்பட 9 பொதுத்துறை நிறுவனங்களை அற்ப விலைக்கு பெருமுதலாளிகளிடம் அரசு தாரை வார்த்தது. அவ்வாறு விற்கும்போது அந்நிறுவனங்களின் உண்மையான சொத்து மதிப்பை வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டு, அதன் மூலம் பல்லாயிரம் கோடிகளை முதலாளிக்கு வாரிக் கொடுத்தது. அரசுத்துறை நிறுவனமான மாடர்ன் புட்ஸ்ஐ இந்துஸ்தான் லீவர் என்ற பன்னாட்டு ஏகபோக நிறுவனத்துக்கு விற்றதற்குக் காரணம், அதன் விலை மதிப்புள்ள நிலங்களைத் தாரை வார்ப்பதற்குத்தான் என்று அரசின் தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரியின் அறிக்கையே பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.


 · தொலைத் தொடர்புத் துறையில் தனியார்மயம் திணிக்கப்பட்டபோது, கொழுத்த இலாபம் தரக்கூடிய நகர்ப்புற சேவையைத் தனியாருக்கும், குறைந்த இலாபம் தரும் கிராமப்புற சேவையை பொதுத்துறைக்கும் அரசு ஒதுக்கியது. கிராமப்புறங்களில் தரைவழித் தொலைத் தொடர்பை உருவாக்கும்போது ஏற்படும் கூடுதல் செலவீனத்தை ஈடுசெய்ய "பொதுச்சேவை பொறுப்பு நிதியை' பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு வழங்க அரசு உறுதியளித்தது. ஆனாலும் பல ஆண்டுகளாக அந்த நிதி வழங்கப்படாமல், அது ஏறத்தாழ ரூ. 15,000 கோடிக்கும் மேலாக நிலுவையில் உள்ளது. பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.க்கு மறுக்கப்பட்ட அந்த நிதியை தற்போது கிராமப்புறங்களில் செல்போன் சேவையைத் தொடங்கியுள்ள தனியார் தொலைபேசி நிறுவனங்களுக்கு விசுவாசமாக வாரிக் கொடுத்து வருகிறது, இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்.


 · தனியார் மின்சார நிறுவனங்கள், அரசின் மின் பகிர்மாணத் தொகுப்பில் இணைக்கப்படாமல், தாங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை கொள்ளை இலாபத்துக்கு விற்றுக் கொள்வதற்கென்றே அரசு, திருத்தப்பட்ட மின்சார சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. மேலும், 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில் ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான நாட்டின் உள்கட்டுமானப் பணிகளில் ""பொதுத்துறை  தனியார்துறை கூட்டுத் திட்டம்'' மூலம் தனியார் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி, இதுவரை ரூ. 13 லட்சம் கோடி மதிப்பிலான 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, விமான நிலையங்கள், துறைமுகங்கள், இருப்புப் பாதைகள் முதலான துறைகளில் இலாப உத்தரவாதத்துடன் தனியார் முதலாளிகள் நுழைந்துள்ளனர். இத்திட்டங்களில்கூட முதலாளிகள் தமது சொந்தப் பணத்தைப் போடப் போவதில்லை. 75 சதவீத நிதியை அவர்கள் வட்டியில்லாக் கடனாகப் பெறுவதற்கென்றே அரசு ஒரு புதிய நிதிநிறுவனத்தை உருவாக்கப் போகிறது. இதுவும் போதாதென்று, இத்திட்டங்களில் முதலீடு செய்யும் முதலாளிகளுக்கு நீண்டகால வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இத்துறைகள் மட்டுமின்றி, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து ஆகியவற்றிலிருந்தும் விரைவில் அரசு விலகிக் கொண்டு, அவற்றைத் தனியாருக்குக் கையளிக்கவும் 11வது ஐந்தாண்டுத் திட்டம் தீர்மானித்துள்ளது.


 · இப்படி பொதுத்துறைகளை ஏப்பம் விட்டு கொழுத்துவரும் தனியார் பெருமுதலாளிகளில் 11 ஆயிரம் பேர் வங்கிகளுக்குத் திருப்பிச் செலுத்தாத வாராக் கடன் மட்டும் 200102 கணக்குப்படி ரூ. 40 ஆயிரம் கோடிகள். இக்கடனாளிகளில் ரூ. 5 கோடிக்கு மேல் கடன் வாங்கி ஏய்த்தவர்கள் 1,741 பேர்.


 · தரகுப் பெருமுதலாளிகள் அரசுக்குச் செலுத்த வேண்டிய பெருந்தொழில் நிறுவன வரி பாக்கி ரூ. 39 ஆயிரம் கோடி. கலால்வரி, சுங்கவரி, சேவை வரிகளாகச் செலுத்த வேண்டிய பாக்கி மட்டும் ரூ. 20 ஆயிரம் கோடி. இருப்பினும், இம்மோசடி கும்பலுக்கு அரசு வழங்கியுள்ள வரிச் சலுகைகளோ ரூ. 2.36 லட்சம் கோடிக்கும் மேல்.


 · கோடிக்கணக்கான மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அரசுப் பேருந்து  பொதுப் போக்குவரத்துத் துறைகளை ஒழித்துக் கட்ட மானியங்களை வெட்டிவரும் அரசு, அதேசமயம் தனியார் கார் தொழிற்சாலைகளுக்கு எல்லையற்ற சலுகைகளை நமது வரிப்பணத்திலிருந்து வாரியிறைத்து, கார்களைப் பரவலாக்க சேவை செய்து வருகிறது. உதாரணமாக, மும்பையில், கார் வைத்திருப்பவர் வாழ்நாளில் ஒரேயொரு முறை 4% வரி செலுத்தினால் போதும். ஆனால் பொது பேருந்துகள் ஒவ்வொன்றும் ஆண்டுக்கு 17.4% வீதம் வரி கட்ட வேண்டும்.


 உள்நாட்டு  வெளிநாட்டு பெரு முதலாளித்துவ நிறுவனங்களில் உருவாகும் கார்களின் விற்பனையை விரைவுபடுத்துவதற்கென்றே, கார் வைத்திருப்பவர்கள் அதை நிறுத்தி வைப்பதற்கான இடவசதியையும் மலிவு விலையில் அரசு ஏற்பாடு செய்து தருகிறது. மும்பை நகரில் ஒரு காரை நிறுத்தி வைப்பதற்கான 23 சதுர மீட்டர் இடத்துக்கு மாதம் ரூ. 600 மட்டும் கட்டணமாகச் செலுத்த மாநகராட்சி ஏற்பாடு செய்து தருகிறது. அதே மும்பையில் காருக்கான இடத்தைவிட குறைவாக, 21 சதுர மீட்டர் பரப்பளவில் குடிசை மாற்று வீடுகளை அரசு கட்டியிருக்கிறது. அத்தகைய வீடுகள் பல ஆண்டுகளாகப் பராமரிப்பின்றிக் கிடக்கும்போது, கார்கள் சாலைகளில் போக்குவரத்து நெரிசலின்றி விரைந்து செல்ல, மக்கள் வரிப்பணத்தை வாரியிறைத்து பல கோடி ரூபாய் செலவில் மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன. 2005ஆம் ஆண்டில் மட்டும் டெல்லியில் சராசரியாக ரூ. 40 கோடி செலவில் 50 மேம்பாலங்கள் கட்டப்பட்டன. இவைதவிர, சுற்றுச் சாலைகள், நான்கு வழிச் சாலைகள், ஆறுவழிச் சாலைகள் என ஒவ்வொரு நகரத்திலும் உருவாக்கப்படுகின்றன.


 இதுவும் போதாதென கார்களின் நெரிசலற்ற போக்குவரத்துக்காக, தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் மூன்றாம் கட்டமாக 80 ஆயிரம் கோடி ரூபாயைக் கொட்ட அரசு தீர்மானித்துள்ளது. மும்பையில் பந்த்ரா  வொர்லி கடல்வழி இணைப்பு விரைவுச் சாலையை ரூ. 1,300 கோடி செலவில் அமைத்து வருகிறது.


 · கோடிகோடியாய்க் கொட்டப்படும் இத்தகைய திட்டங்களுக்காக, கார் மற்றும் பிற மோட்டார் வாகனங்கள் வைத்திருப்பவர்களிடம் சாலை வரியாக குறைந்தபட்சம் ரூ. 55 ஆயிரம் அரசு வசூலித்திருக்க வேண்டும். அப்படிச் செய்தால் மோட்டார் வாகன விற்பனை படுத்துவிடும். வாகன உற்பத்தி செய்யும் உள்நாட்டுவெளிநாட்டு முதலாளிகளுக்கு நட்டம் ஏற்பட்டுவிடும். எனவே, அவர்களின் ஆலோசனைப்படி வாகனம் ஒன்றுக்கு சாலை வரியாக ரூ. 300500 மட்டுமே அரசு வசூலிக்கிறது.


 · கார் மற்றும் மோட்டார் வாகன உற்பத்தி செய்யும் உள்நாட்டு  வெளிநாட்டு முதலாளிகளுக்கு இப்படி மறைமுகமாக கோடிக்கணக்கில் சலுகைகளை வாரியிறைப்பது போதாதென்று, நேரடியாகவும் கோடிகோடியாய் சலுகைகளை அள்ளிக் கொடுக்கிறது. சிறுமுதலாளிகள் உற்பத்தி செய்யும் உள்ளூர் சோப்புக் கட்டிகளுக்கு 16% கலால் வரி விதிக்கும் அரசு, மோட்டார் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 24% வரியை இப்போது 12% ஆகக் குறைத்துவிட்டது. மோட்டார் வாகன உற்பத்திக்கான கச்சாப் பொருட்களை — உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்ய விதிக்கப்படும் சுங்கவரி 5% முதல் 7.5% மட்டுமே! மோட்டார் வாகன உற்பத்தி ஆலைகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கென 150% வரிகுறைப்பு சலுகைகள் பெறுகின்றன.


 · கார் முதலான மோட்டார் வாகன உற்பத்தித் தொழிலில் ரூ. 500 கோடிக்கு மேல் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு அரசு, முற்றாக வரிவிலக்கு  பொருளாதாரவாதிகளின் மொழியில் வரி விடுமுறை  அளிக்கிறது. ஏற்றுமதி மூலம் கிடைக்கும் இலாபத்துக்கு 100% வரிக் குறைப்பு அளிக்கிறது; புதிதாகத் தொடங்கப்படும் இத்தகைய ஆலைகளுக்கு ஒட்டுமொத்த வருவாய் மீதான வரியில் 30%ஐ பத்தாண்டுகளுக்குத் தள்ளுபடி செய்கிறது. "இந்தியாவில் தயாரானது' என்ற முத்திரை இருந்தால்போதும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் கலால் வரிச் சலுகை அளிக்கிறது.


 · டாடா தயாரிக்கும் ஒரு லட்ச ரூபாய் ""நானோ'' காருக்காக மே.வங்க போலி கம்யூனிச அரசு, விவசாயிகளிடமிருந்து பிடுங்கப்பட்ட 1000 ஏக்கர் நிலத்தை 90 ஆண்டுகளுக்கு மிக அற்பத் தொகைக்கு குத்தகையாகக் கொடுத்துள்ளது. வெறும் ஒரு சதவீத வட்டியில் அம்மாநில அரசு


ரூ. 200 கோடியைக் கடனாகக் கொடுத்துள்ளது. (ஆனால் நாம் கடன் வாங்கினால் வங்கிகள் ஏறத்தாழ 10% வட்டியை விதிக்கின்றன) ""நானோ காருக்காக மே.வங்க அரசு டாடாவுக்கு அளித்துள்ள மானியமோ ரூ. 850 கோடி. தொழிற்சாலை நிர்மாணம் உள்ளிட்டு ""நானோ'' காரை உற்பத்தி செய்ய டாடாவுக்கு ஆகும் மொத்த செலவு ஏறத்தாழரூ. 1700 கோடி. இதில் 60% அளவுக்கு போலி கம்யூனிச அரசு மானியமாகவும் கடனாகவும் கொடுத்துள்ளது.


 · கணினி மென்பொருள் பெருநிறுவனங்கள் அனுபவித்து வரும் சலுகைகளும் மானியங்களும் இதைவிட அதிகம். அந்நிறுவனங்களுக்கு நில ஒதுக்கீட்டில் முன்னுரிமை, முதல் ஐந்தாண்டுகளுக்கு மின்சார கட்டணத்தில் சலுகை, ஏற்றுமதி வரிக்குறைப்பு, தொழில்நுட்பப் பரிமாற்றங்களுக்கு வரிவிலக்கு, மானியங்கள் எனக் கோடிகோடியாய் சலுகைகளை அள்ளி இறைக்கிறது அரசு.


 இவையெல்லாம் வகை மாதிரிக்குச் சில உதாரணங்கள்தான். இந்தியத் தரகுப் பெருமுதலாளிகளுக்கும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களும் துறைவாரியாக இந்திய அரசு கோடிகோடியாய் வாரியிறைக்கும் சலுகைகளைப் பட்டியலிடப் பக்கங்கள் போதாது. அரசு தலையிட்டு இம்முதலாளிகளுக்கு சலுகைக்கு மேல் சலுகைகளை அள்ளிக் கொடுத்து, பொதுத்துறையை தடையின்றிச் சூறையாட தாராளமாக அனுமதித்துள்ளதால்தான், இம்முதலாளிகள் கொழுத்து "வளர்ச்சி' அடைந்துள்ளார்களே தவிர, அவர்களது தொழில் திறமையால் அல்ல.


 அரசு தலையிட்டு கோடிகோடியாய் சலுகைகளை வாரியிறைத்து, பொதுத்துறையை தாரை வார்த்துக் கொடுத்ததால் பிரம்மாண்டமான வளர்ச்சி பெற்றுள்ள இப்பெருமுதலாளிகள், சிமெண்ட் விலையைக் கட்டுப்படுத்துவது, தொழிலாளர் உரிமை முதலானவற்றில் அரசு தலையிடக் கூடாது என்று கொழுப்பும் திமிரும் தலைக்கேறி அரசை மிரட்டுகிறார்கள். அவர்களின் ""கோட்'டுப் பையிலுள்ள அரசோ கைகட்டிப் பணிந்து நிற்கிறது. இதுதான் அரசு தலையீடற்ற தனியார்மயத்தின் மகிமை!


· மனோகரன்