Mon04222019

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் இமய மலையில் செங்கொடி ஏற்றிய மாவோயிஸ்டுகள்

இமய மலையில் செங்கொடி ஏற்றிய மாவோயிஸ்டுகள்

  • PDF

இன்னும் சில நாட்களில் நேபாளம் குடியரசாகி விடும். மன்னர் கியேன்த்ரா, கத்மண்டு அரண்மனையை விட்டு செல்ல மூட்டை முடிச்சுகளை கட்டிகொண்டிருக்கிறார். கடந்த ஏப்ரல் பத்தாம் திகதி நடந்த அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல், நேபாளத்தின் அரசியல் வரைபடத்தையே மாற்றி விட்டது. தெற்கு ஆசிய வரலாற்றில் ஒரு திருப்பு முனை, அந்த தேர்தல். 1996 ம் ஆண்டில் இருந்து, வெற்றிகரமான ஆயுதமேந்திய மக்கள் புரட்சியை நடத்தி, நேபாளத்தின் 80 % நிலப்பரப்பை, தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த மாவோயிஸ்டுகள், தேர்தலில் அறுதிப்பெரும்பான்மை பெரும் அளவிற்கு மக்கள் செல்வாக்கு இருப்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக ஆளும்வர்க்கம், இந்தியா, அமெரிக்கா,பிரிட்டன் ஆகியன அதிர்ச்சியில் உறைந்து போயின. தேர்தல் கண்காணிக்க போன முன்னாள் அமெரிக்கா ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர்,

 அமெரிக்கா அரசாங்கம் மாவோயிஸ்டுகளுடன் பேச வேண்டிய தருணம் இது என்றார். (மாவோயிஸ்ட் கட்சி அமெரிக்காவின் பயங்கரவாத பட்டியலில் உள்ளது) தேர்தல் முடிவுகளை அறிவிக்க தொடங்கிய பி.பி.சி. செய்தியாளர், நேபாள காங்கிரஸ் கட்சி முதல் இடத்திலும், மாவோயிஸ்டுகள் மூன்றாம் இடத்திலும் வருவார்கள், என்று தனது எதிர்பார்ப்பை செய்தியாக கூறினார். ஆனால் அடுத்த நாளே, மாவோயிஸ்டுகள் மற்ற கட்சிகளை பின்னுக்கு தள்ளி விட்டு, பெருமளவு வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் நிற்கின்றனர் என்ற உண்மையை சொல்ல வேண்டியேற்பட்டது. அவ்வளவு தான், பி.பி.சி. அதற்கு பிறகு நேபாள பக்கம் எட்டிப்பார்க்கவில்லை. (வாழ்க நடுநிலமை)

 

தொன்னூருகளின் மத்தியில் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த நேபாள கம்யூனிஸ்ட் கட்சி, மக்களின் பிரச்சினைகளை மறந்து, முடியாட்சிக்கு முண்டு கொடுக்கும் சாதாரண அரசியல் கட்சியாக இருப்பதாக குறை சொல்லி, "பிரச்சந்தா தலைமையில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) அமைத்த நாளில் இருந்து தலைமறைவாக இயங்க வேண்டியேற்பட்டது. இமய மலைக் கிராமங்களை தமது தளமாக கொண்டு மக்கள் யுத்தம் ஆரம்பித்தனர். நேபாளம் உலகிலேயே வறுமையான நாடுகளில் ஒன்று. குறிப்பாக நாட்டுப்புறங்களில் வாழும் மக்கள், ஒன்றில் பின்தங்கிய இனங்களை சேர்ந்த, அல்லது தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த வறிய மக்கள், மாவோயிஸ்டுகளின் அரசியல் கோரிக்கைகள்,தமது நலன்களுக்கானவை என்று கண்டு கொண்டதால், பெருமளவு இளைஞர்கள் ஈர்க்கப்பட்டனர். அவர்களில் கணிசமான அளவு பெண் போராளிகளும் இருந்தனர்.

கம்யூனிசம் இறந்து சமாதிக்குள் உறங்குகிறது, அது இந்தக்கால கட்டத்திற்கு ஒவ்வாது, என்று உலகம் முழுவதும் பிரச்சாரம் நடந்து, எல்லோரும் அதை நம்பிய நேரத்தில், மாவோ வழியில் ஒரு இயக்கம், நேபாளத்தில் மக்களை திரட்டி, வெற்றியும் பெற்றது. அதன் வெற்றியை ஆராய்ந்த மேற்குலக அரசியல் அறிஞர்கள் , இன்றும் பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதை ஒப்புக்கொண்டனர். தெற்காசிய நாடுகளுக்கே உரிய "சிறப்பம்சமான" சாதிய பாகுபாடு, பெண் அடக்குமுறை ; இவற்றுடன் ஈவிரக்கமின்றி உழைப்பு சுரண்டப்படுவதால் வறுமையில் வாடும் மக்கள், கடன் சுமையால் கஷ்டப்படும் நிலமற்ற விவசாயிகள், போன்ற இன்னோரன்ன பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு, ஒடுக்கப்பட்ட மக்கள் ஆயுதமேந்துவது தான், என்று மாவோயிஸ்டுகள் கூறிய போது, யாரும் மறுக்கவில்லை. மேலும் அதன் பலாபலன்கள் உடனுக்கு உடனே தெரிய ஆரம்பித்தன. முடிக்குரிய நேபாள் இராணுவம், போலிசுடன் போராடி கைப்பற்றிய பிரதேசங்களை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்த மாவோவாதிகள், "உழுபவனுக்கே நிலம்" என்ற கோஷத்தின் கீழ், அங்கிருந்த நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் வழங்கினார். அவர்களின் அவல வாழ்வுக்கு காரணமான, கடன்பத்திரங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. சாதி அடக்குமுறை தடுத்து நிறுத்தப்பட்டு, சாதிக்கலப்பு திருமணங்கள் ஊக்குவிக்கப்பட்டன. குறிப்பாக மக்கள் விடுதலை இராணுவத்தில் இருந்த போராளிகள் இவ்வாறு கலப்பு திருமணம் செய்து கொண்டனர். பெண்கள் ஆண்களுக்கு நிகரான சம அந்தஸ்து பெற்றனர். சீதனம் கொடுப்பது/வாங்குவது குற்றமாக்கப்பட்டது. இவற்றை விட தொழிற்சங்க நடவடிக்கை மூலம், நகரங்களில் கூட தொழிலாளரின் சம்பளம் இரண்டு மடங்காக உயர்ந்தது. நேபாள சரித்திரத்தில் முதன் முறையாக, ஆதிக்க சாதியினர், அநியாய வட்டிக்கு கடன்கொடுப்போர், பெரும் முதலாளிகள் ஆகியோர், ஒடுக்கப்பட்ட மக்களின் உத்தரவுகளுக்கு கீழ்படிந்தனர். இந்த மாற்றங்கள் யாவும் மாவோயிஸ்டுகளின் போராட்டம் இல்லையேல் சாத்தியமாகியிருக்காது.

நேபாள இராணுவம் மாவோயிஸ்டுகளுடன் நீண்ட காலம் போரிட்டு வெல்ல முடியாத போது, அதற்கு பாராளுமன்றத்தை குற்றம் சாட்டிய மன்னர், அதிகாரம் முழுவதையும் தன் கையில் எடுத்தார். அது ஒரு முட்டாள்தனமான முடிவாக அமைந்து, "பூமராங்" போன்று மன்னரையே திருப்பி தாக்கியது. மன்னரின் சர்வாதிகாரத்திற்கு எதிராக போது மக்கள், கிளர்ந்தெழுந்தனர். இந்தியாவும் அதனை விரும்பாததால், அழுத்தங்களுக்கு கட்டுபட்ட மன்னர் ஒதுங்கிக்கொண்டார். ஜனநாயகம் மீண்ட போது, பாரளுமன்ற கட்சிகள், மாவோயிஸ்டுகளுடன் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது கண்ட உடன்பாட்டின் படி, முடியாட்சி ஒழிக்கப்பட்டு, குடியரசு பிரகடனம் செய்வதென்றும், புதிய அரசியல் நிர்ணய சபை அமைத்து, புதிய சட்டங்கள் எழுதுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன் படி இதுவரை இருந்த பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்பட்டு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் மிக விரைவில் நேபாளத்தின் சட்டங்களை மாற்றியமைப்பார்கள். நிச்சயமாக இதனால் மாவோயிஸ்டுகளின் பிரேரணைகள் நடைமுறைக்கு வரும்.

புதிய அரசியல் நிர்ணய சட்டத்தின் படி, நேபாளம் ஒரு குடியரசாக மாறும். அதற்கு பதிலாக, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி உருவாகும். நேபாளம் பல்வேறு மொழிகள் பேசும், பல்லின மக்கள் வாழும் நாடாக இருந்தாலும், அது ஒற்றையாட்சி அலகை கொண்டிருந்தது. புதிய அரசியல் நிர்ணய சட்டத்தின் படி, நேபாளம் ஒரு சமஷ்டிக் குடியரசாகும். அதிலே ஒவ்வொரு மொழி பேசும் இனங்களுக்கும், தனித்தனியாக பதினொரு மாநிலங்கள் உருவாக்கப்படும். அதிலேயும் சிறுபான்மையாக இருக்கும் இனங்களுக்கு தனியான நான்கு நிர்வாக அலகுகள் கிடைக்கும். நேபாளத்தில் வட இந்திய இனங்களே(அதிலும் பிராமண, சத்திரியர்கள் ) ஆதிக்கம் செலுத்தி வந்தன. பூர்வகுடிகளான திபெதோ-இந்திய இனக்குழுக்கள் அதிகாரமற்று இருந்தனர். அவர்கள் தங்களை ஆளும் மாநில அரசு கிடைத்தால் நன்மையடைவர். மேலும் ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் மேம்பாட்டிற்கு அரச சலுகைகள் கிடைக்கும். தற்போது தெரிவு செய்ய பட்ட மாவோயிஸ்ட் பாராளுமன்ற உறுப்பினர்களில், கணிசமான அளவு தலித் மக்களும், பெண்களும் இருப்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். பிற கட்சிகளில் இவர்களின் பங்கு மிகக்குறைவு. ஊனமுற்றவர்களுக்கும், வயோதிபர்களுக்கும், வேலையற்றவர்களுக்கும் உதவிதொகை வழங்கப்படும். (இந்த திட்டம் ஐரோப்பாவின் நலன்புரி அரசை ஒத்தது) மக்கள் விடுதலைப் படை போராளிகளின் குடும்பத்தினருக்கு விசேஷ சலுகைகள். மேலும் மாவோயிஸ்டுகள் தமது இராணுவப்பிரிவை(மக்கள் விடுதலை படை), முடிக்குரிய நேபளிய இராணுவத்துடன் இணைக்குமாறு கோரி வருகின்றனர். அதனை இராணுவ உயர் அதிகாரிகள் எதிர்க்கின்றனர். பொருளாதாரம்: தனியார் நிறுவனங்கள் , மற்றும் அரச நிறுவனங்கள் ஆகியன சமாந்தரமாக இயங்கும். அதே நேரம் நிலசீர்திருத்தம் நடைமுறை படுத்தப் படும். கூட்டுறவு பண்ணைகள் உருவாக்கப்படும். வெளிவிவகாரம்: நவீன தொழில்நுட்ப அறிவு, மற்றும் பாரிய கட்டுமானப்பணிகள் போன்றவற்றை அன்னிய நிறுவனங்களின் உதவியுடனேயே நடைமுறைப்படுத்த முடியும். இதன் நிமித்தம் சர்வதேச நாடுகளுடன் சுமுகமான உறவு பேணப்படும்.

மாவோயிஸ்டுகளின் "புதிய ஜனநாயக புரட்சி" சரியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதுவரை ஆண்ட கட்சிகள் வாய்ச்சொல் வீரர்கள் என்பதை நன்றாக அறிந்து கொண்ட மக்கள், மாவோயிஸ்டுகள் மாற்றத்தை கொண்டு வருவர், என நம்புகின்றனர். மக்களின் வாக்குகளை உத்தரவாக கருதி, நேபாளத்தை முன்னேற்ற பாதையில் இட்டு சென்று, அதனை இமாலய சொர்க்கமாக்குவது, மாவோயிஸ்டுகளின் கைகளில் உள்ளது. நேபாளின் மன்னர், இராணுவம், ஆண்ட வர்க்கம், முதலாளிகள், மற்றும் அமெரிக்கா ஆகியன; இந்த முன்னேற்றத்தை தடுக்க நினைக்கலாம். எதிர்பாராத சதிப்புரட்சி ஏற்படலாம். அந்த நேரத்தில், என்ன செய்ய வேண்டுமோ, அதனை மாவோயிஸ்டுகள் செய்வார்கள்.

http://kalaiy.blogspot.com/2008/04/blog-post_17.html

Last Updated on Thursday, 05 June 2008 19:35