book _4.jpgஅரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்தநிறுத்தம் நடைமுறைக்கு வந்த முதல் ஒன்றரை வருட காலத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் படைகளை விட்டு ஓடியுள்ளனர். யுத்தத்தைச் செய்ய விரும்பாத ஒரு இராணுவம், எந்த தார்மிகப்பலமும் அற்ற நிலையில் ஆக்கிரமிப்பை விசித்திரமாகவே தக்கவைக்கின்றது. உண்மையில் இராணுவத்தை, புலிகள் திறந்தவெளிச் சிறையில் சிறை வகைப்பட்ட நிலையில் தான், இராணுவம் எதிர்ப்பு ஆற்றலைப் பெற்று, எதிர்த்து நிற்கின்றது. இலங்கை இராணுவத்தைச் சுற்றி இராணுவம் தப்பியோடாத வகையில் புலிகள் இருப்பதால், இராணுவம் கலைந்து செல்வதை தடுக்கின்றது. கலைந்து செல்லும் போதும் சரி, தப்பியோடும் போதும் சரி, புலிகள் அவர்களுக்கு மரணதண்டனை வழங்குவதால் இலங்கை இராணுவம் தற்காப்புக் கருதி எதிர்த்துப் போராடுகின்றதே ஒழிய, சிங்கள இனவாத உணர்வு பெற்றுப் போராடவில்லை. யுத்த நிறுத்தத்தின் பின்பு தப்பியோடக் கூடிய வழிகள் அனைத்திலும், இராணுவம் அன்றாடம் தப்பி ஓடுகின்றது. அமைதி, சமாதானம் பற்றிய பேச்சு வார்த்தை தொடங்கி பின்பு, நாள் ஒன்றுக்கு அண்ணளவாக 20 இராணுவத்தினர் படையை விட்டே ஒடுகின்றனர்.


 இனவாத அரசு இராணுவத்தில் இருந்து இராணுவத்தினர் தப்பி ஒடுவதைத் தடுக்கவும், ஆள் பற்றாக்குறையைத் தவிர்க்கவும், சமாதானம் அமைதியின் பெயரில் முகாம்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளனர். வடக்கு கிழக்கில் இருந்த முப்படைகளினதும் பொலீஸாரினதும் முகாம்கள், பொலீஸ் நிலையங்கள், காவலரண்கள், வீதிச் சோதனைச் சாவடிகள், பதுங்குகுழிகள் என 1454 பாதுகாப்பு நிலைகள் இருந்தன. இவற்றில் 56 பாதுகாப்பு நிலைகளை உடன் அகற்றினர். இதன் மூலம் சொந்த நெருக்கடியை தவிர்த்துக் கொண்டனர். மேலும் இராணுவத்தில் சம்பளத்தை 30 சதவீதம் அதிகரித்ததன் மூலம், இராணுவத்தை விட்டு சிப்பாய்கள் ஓடுவதைத் தடுக்க முனைந்தனர். இராணுவத்தினரின்  சம்பளத்தை 9,725 ரூபாவாக அதிகரித்தனர்.


 ஆனால் இலங்கை இராணுவத்தின் கட்டமைப்பு நீண்ட நெடுங்காலமாகவே சிதைந்தே வந்தது. எதிரி பற்றிய புலிகளின் அரசியல் வக்கிரம்தான், இலங்கை இராணுவத்தைப் பாதுகாத்து வந்தது. இலங்கைப் படையில் இருந்து 60,000-க்கும் மேற்பட்டோர் கடந்த காலத்தில் தப்பியோடினர். தப்பியோடியவர்களில் 600 பேர் இராணுவ அதிகாரிகளாவர் இதன் மூலம் அரசுக்கு 390 கோடி ரூபா நேரடியான இழப்பாகியது. ஒரு இராணுவ சிப்பாயின் ஆரம்ப உடுப்புகள் மற்றும் அடிப்படையான செலவு மட்டும் 19,650 ரூபா. இராணுவப் பயிற்சிக்கு 15,000 முதல் 20,000 ரூபா செலவு செய்யப்பட்டது. அடிப்படையாக இராணுவ வீரனை உருவாக்க 69,903 ரூபா செலவு செய்யப்படுகின்றது. ஒவ்வொரு இராணுவ வீரனும் ஓடும் போது, இராணுவக் கட்டமைப்பு முழுமையாகவே சிதறுகின்றது. ஒப்பீட்டு அளவில் இதன் அழிவு எல்லையற்றது.


 அரசின் அறிக்கையானது 1995-ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டு வரையான காலத்தில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட இராணுவ வீரர்கள் உயிர் இழந்துள்ளனர். அத்துடன் இக்காலத்தில் சுமார் 3 ஆயிரம் படையினர் காணாமற் போயிருக்கின்றனர் எனவும், 28 ஆயிரத்து 500 படையினர் அங்கவீனர்களாகியிருக்கின்றனர் எனவும்  தெரிவிக்கின்றது. 1993-1996-க்கு இடைப்பட்ட காலத்தில் 1,800 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 1000 கோடி ரூபா பெறுமதியான ஆயுதங்களைப் புலிகளிடம் இழந்தனர். ஒருபுறம் மரணம், தப்பியோடுதல், அங்கவீனமாதல் என்ற கட்டமைப்பு மிகப் பெரியது. அதாவது இலங்கை மொத்த இராணுவத்தின் பலத்தின் அளவுக்கு இணையான ஒரு இலங்கை இராணுவம் முற்றாக ஏதோ ஒரு விதத்தில் அழிந்துள்ளது. ஆனால் தமிழ் மண்ணை ஆக்கிரமித்து தொடர்ந்தும் தக்க வைத்துள்ளது என்றால், அதற்கான அடிப்படை எதிர்த்தரப்பின் அரசியல், இராணுவ வழிகள் தான்  காரணமாகும்.