04_2005.jpg"விதி'ப்படி சொல்லி வைத்தது போல் இயங்குகிறது தமிழக சட்டமன்றம். பெரும் ரகளை; அதன் நடுவே வழக்கமான கவர்னர் உரை வழக்கமான "பட்ஜெட்' விவாதம் கடைசியில் "சட்டசபையில் ஜனநாயகம் இல்லை' என்ற எதிர்க்கட்சிகளின் வழக்கமான கூட்டு ஒப்பாரி!

 

கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசிய தமிழகத்து எதிர்க்கட்சிகளின் கூற்றுப்படியே தமிழகத்தின் இன்றைய நிலைமை இதுதான்:

 

· சுனாமி பேரழிவால் தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இலட்சக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளன. இவற்றுக்கான நிரந்தர நிவாரணம் எதுவும் கவர்னர் உரையில் இல்லை.

 

· தமிழகத்தில் இலட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை எதுவும் இல்லாமல் தவிக்கிறார்கள். குறிப்பாக 50 இலட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டுக் காத்திருக்கிறார்கள். இதில் 17 இலட்சம் பேர் பெண்கள்.

 

· அரசு அலுவலகங்களில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கின்றன.

 

· விவசாயம் தொழில் துறை கல்வி வேலை வாய்ப்பு சுகாதாரம் போன்ற 12 சமூக நல திட்டங்களில் ""அரசின் எதிர்காலத் திட்டங்கள் எதுவும் இல்லை.''

 

· தமிழகத்தின் உயிராதாரமான காவிரி நதிநீர் பிரச்சினை சென்னையைப் போலவே தமிழகம் முழுக்க நிலவும் குடிநீர் தட்டுப்பாடு எந்த பிரச்சினையையும் தீர்க்கும் திட்டம் கவர்னர் உரையிலோ நிதிநிலை அறிக்கையிலோ இல்லை.

 

ஆனால் இந்த வெற்று உரைதான் கவர்னர் உரையாக ஆங்கிலத்திலும் தமிழிலும் சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்டது. உடனே ""எங்கள் கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றி'' என்று தி.மு.க. உள்ளிட்டு அனைத்து எதிர்க்கட்சிகளும் தமிழ் உரைக்காக ஜெயலலிதா அரசுக்கு ""நன்றி'' தெரிவித்தன.

 

பிறகு பேச்சுப் போட்டியில் ஆர்வமாகக் கலந்துக் கொள்ளும் பள்ளி மாணவர்கள் போல் கவர்னர் உரை பட்ஜெட் விவாதம் என்ற தலைப்புகளின் கீழ் வரிசையாகப் பேச ஆரம்பித்தார்கள் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்.

 

பேசும் தலைப்புப் பற்றி எந்த விபரமும் தெரியாத அ.தி.மு.க. உறுப்பினர்கள் ""அம்மாவைப் போற்றி'' என்ற மனப்பாடச் செய்யுளை மட்டும் பாடிவிட்டு அமர்ந்துவிட்டனர்.

 

காங்கிரசுக் கட்சியின் சட்டமன்றத் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் அவருக்கு பிடித்த சோனியா அம்மாவை போற்றி பாடினார். கொதிப்படைந்த ஜெயலலிதா ""காலி டப்பா'' என்று அவரைத் திட்டியவுடன் அவர் அவசரமாக ""சுனாமி'' பற்றி பேச ஆரம்பித்தார். தமிழகத்தில் சுனாமி நிவாரணப் பணிகள் தாமதமாக நடப்பதாக ஜெயலலிதா அரசு மீது குற்றம் சாட்டினார். அதற்குப் புள்ளி விவரங்களுடன் பதிலளித்த ஜெயலலிதா ""சுனாமி நிவாரண பணி தாமதத்திற்கு மத்திய அரசுதான் காரணம்'' என்று எதிர் குற்றம் சாட்டினார். தமிழக அரசு மத்திய அரசிடம் சுனாமி நிவாரண உதவி திட்ட மதிப்பீடு ரூ. 4800 கோடி என்று முழுமையான அறிக்கை கொடுத்த பிறகும் வெறும் 983 கோடியே 68 லட்சம் மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியது. அதிலும் முதல் கட்டமாக வழங்கிய ரூ. 250 கோடியை அதில் கழித்துக் கொண்டது'' என்றார்.

 

""அதுமட்டுமல்ல சென்னைக்கு கடல்நீரைக் குடிநீராக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் சிதம்பரம் அறிவித்தாரே தவிர அதை எவ்வாறு நிறைவேற்றுவது? அதற்கு எவ்வளவு நிதி? என்று அறிவிக்கவில்லை. அவர் 1000 கோடி ரூபாய் என்று அறிவித்தது தமிழ் நாட்டுக்கு மட்டும் அல்ல; ஒட்டு மொத்த இந்தியாவுக்கு! அதுகூட ஒதுக்கீடு அல்ல மதிப்பீடு! இத்தலைப்பில் அவர் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய பணம் வெறும் 50 கோடிதான்! சென்னைக்கு ஒருநாள் குடிநீர் தேவை 840 மில்லியன் லிட்டர்! அவர் ஒதுக்கிய பணத்தில் 100 மில்லியன் லிட்டர் தண்ணீர் கூட வராது!'' என்றார். உங்கள் தலைவர் சிதம்பரம் அறிவித்த தொகையை வழங்காத ""நாணயம் அற்றவர்'' அறிவித்த தொகையை கொடுக்க ""வக்கற்றவர்'' என்று சாடினார்கள் அ.தி.மு.க. உறுப்பினர்கள்.

 

மறுபுறம் தி.மு.க. உறுப்பினர்கள் தாங்கள் பிரதான பதவிகள் வகிக்கும் காங்கிரசு தலைமையிலான மத்திய கூட்டணி ஆட்சியை ஆதாரத்துடன் விமர்சித்த ஜெயலலிதாவிற்குப் பதில்தர வக்கற்று பிரச்சினையை வேறு திசைக்கு இழுத்தனர்.

""இந்திய ராணுவத்தை ஜெயலலிதா அவமதித்து விட்டார். "சுனாமியால் ஒதுங்கிய அழுகிய பிணங்களை இராணுவம் தொட மறுத்துவிட்டது' என்று அவதூறு பரப்பினார்'' என்று தேசபக்த நாடகமாடினார்.

 

உடனே ஜெயலலிதா கோப்புகளை அவர்கள் முகத்தில் வீசினார். ""மேஜர் ஜெனரல் பரம்வீர்சிங் தலைமையிலான இராணுவத்தினர் ஒரு பிணத்தைக் கூட எடுக்கவில்லை'' என்று தமிழகத்தின் வருவாய் ஆணையர் சந்தானம் எழுதிய அரசு குறிப்பின் மேல் தலைமைச் செயலர் ஒப்புதல் கையொப்பம் இருப்பதை பகிரங்கப்படுத்தினார்.

 

பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல சக பிழைப்புவாத அரசியலின் பிதாமகன்களான தி.மு.க.வினரை விடாமல் தோலுரித்து தொங்க விட்டார் ஜெயா. "வெளிநடப்பு' செய்வதாக அலறிக் கொண்டு ஓடிய தி.மு.க.வினரோடு பதுங்கி ஓடிய "காம்ரேடு'களை மடக்கிப் பிடித்தார் ஜெயலலிதா.

 

தமிழகத்தின் ""போக்குவரத்து கழகங்களை நடத்துவது சிரமமாக இருக்கிறது. மக்கள் நலன் கருதி மத்திய அரசு டீசல் விலையை குறைக்க கம்யூனிஸ்டு கட்சிகள் மத்தியில் வலியுறுத்த வேண்டும்'' என்றார். ""உள்நாட்டு வேளாண்மை மற்றும் ஊரகத் தொழில்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் வகையில் வேளாண் இறக்குமதி பொருட்களுக்கு வரியை மத்திய அரசு குறைத்து விட்டது ஏன்?'' என்று கம்யூனிஸ்டு கட்சிகளைக் குடைந்தார்.

 

"ஆளும் மத்திய அரசில் அமர்ந்து கொண்டு வறுமையையும் வேலையில்லா திண்டாட்டத்தையும் இந்தியா முழுக்க திணித்துக் கொண்டு என்னிடமே கேள்வியா?' என்று எதிர்க்கட்சிகளை எகிறிப் பந்தாடினார் ஜெயலலிதா! சவாலுக்குப் பயந்து வெளியில் ஓடிய எதிர்க்கட்சியினர் "சட்டசபையில் ஜனநாயகமே இல்லை' என்று நடுத்தெருவில் ஆர்ப்பாட்டம் செய்து சென்னையின் பிரதான போக்குவரத்தை மறித்தனர். அரை மணி நேரத்தில் அங்கு சென்ற கருணாநிதி நாற்காலியில் சாலை நடுவில் அமர்ந்து கொண்டு ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

 

காங்கிரசுத் தலைவர்கள் "காலி டப்பாக்கள்' அல்ல! கருணாநிதி ரயில் வராத தண்டவாளத்தில் தலை வைத்த கோழை அல்ல! அவர் "அய்யய்யோ கொல்றாங்களே' என்று அலறியது இழுக்கல்ல! என்று நிரூபிக்க உடனே தெருவுக்கு வரத் தயங்காத இவர்கள் இவ்வாறு எத்தனை மக்கள் பிரச்சினைகளுக்காக தெருவில் உடனே மறியலில் இறங்கினார்கள்? தங்களை விமர்சித்த உடனேயே சட்டசபைக்குள்ளேயே ""மிரட்டும் பாணியில் தாக்கும் தோரணையில்'' ஆளும் கட்சியினருக்குப் பதிலடிக் கொடுக்கும் இவர்கள் மக்களின் கோரிக்கைகளுக்காக இவ்வாறு கோபப்பட்டிருக்கிறார்களா? தாங்களுக்குப் பேச வாய்ப்பளிக்கவில்லை என்றவுடன் சட்டமன்றத்தின் தலைவரான சபாநாயகரை ஆவேசமாக நோக்கிப் பாயும் இவர்கள் ""அடுத்து என்ன நடக்குமோ? ஏது நடக்குமோ?'' என்று அரைநொடியில் சட்டமன்றத்தையே பதற்றத்தில் ஆழ்த்தும் இவர்கள் ஒரே ஒரு தடவை மக்கள் பிரச்சினைகளுக்காக சட்டசபையை இப்படி முடக்கி இருக்கிறார்களா?

 

கந்துவட்டிக் கடனைக் கட்ட முடியாமல் மானம் இழந்து விவசாயிகளும் தொழிலாளர்களும் தற்கொலைசெய்து கொண்டு மடியும்போதும் அலட்டிக் கொள்ளாமல் அப்போதும் ஆளுங்கட்சியிடம் வேண்டுகோள் விடுப்பதும் மனுக்கொடுப்பதுமான "பண்பட்ட அரசியல்' பண்ணும் இவர்கள் தங்கள் மானம் போனதற்கு மட்டும் மல்லுக் கட்டுகிறார்களே ஏன்? அடிதடியில் மோதிக் கொள்கிறார்களே ஏன்? இழந்த தங்கள் மானத்தையும் மனுக்கொடுத்து காப்பாற்றிக் கொள்ள வேண்டியது தானே?

 

சுனாமி நிவாரண பணிகள் தாமதம் காவிரி பிரச்சினை போன்ற மக்களின் உயிராதாரமான கோரிக்கைகளுக்கு சாலை மறியலோ சட்டமன்றத்திற்கு வெளியிலோ போராடாத எதிரிணியினர் தங்கள் தானைத் தலைவர்களின் தனிப்பட்ட "புகழுக்கு' களங்கம் கற்பித்தால் மட்டும் சட்டத்திற்கு வெளியில் சென்று மிரட்டுகிறார்கள்.

 

மையத்தை ஆளும் கட்சிகள் மாநிலத்தை ஆளும் கட்சிகள் என்று ஒரே திசையில் ஒரே கப்பலில் பயணம் போகும் ஓட்டுப் பொறுக்கிகள் தாங்கள் எதிர்க்கட்சிகள்தான் என்ற மயக்கத்தை மக்களிடம் உருவாக்க ஓயாமல் நிழல் யுத்தத்தை நடத்துகிறார்கள்; மக்களை தொடர்ந்து மடையர்களாக்குகிறார்கள். ""ஜனநாயக விரோத ஜெயலலிதாவும் ஜனநாயக மீட்பு எதிர்க்கட்சிகளும்'' என்ற நையாண்டி நாடகத்தை வீர காவியமாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.

 

அந்தோ பரிதாபம்! நாடகத்தின் இடையில் நாடகத்தின் கோமாளியே பாடும் ""நாடாளுமன்ற ஜனநாயகம்'' என்ற கண்ணீர் ததும்பும் பாடலை கொஞ்சம் கேளுங்கள்! 8.9.2004 தேதி துக்ளக் தலையங்கத்தில் வந்த "தீம்' சாங் இது!

 

""பாராளுமன்றம் ஏதோ கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு ஜனநாயகக் கோவில் போலவும் அங்கே எல்லாமே புனிதமாக இருந்து வந்து இப்போது திடீரென்று கெட்டு விட்டது போலவும் பேசுவது படிப்பதற்கு சுவையாக இருக்கலாம்; ஆனால் அது நடைமுறை உண்மை அல்ல. நமது பாராளுமன்றமும் நமது அரசியலின் ஒரு அங்கமே; நமது அரசியலில் உள்ள வறட்டுத்தனம் அங்கேயும் இருக்கத்தான் செய்யும். இதற்கு மேல் அந்த அமைப்பிடம் எதிர்பார்ப்பது தகாது'' நாடாளுமன்ற சட்டமன்ற ஜனநாயகக் கதையின் முடிவை இதைவிடத் துல்லியமாக சோகமாக வேறு யாரால் சொல்ல முடியும்?


· பச்சையப்பன்