06_2005.jpg"விடுதலை'', ""ஜனநாயகம்'' என்பதற்கு அமெரிக்க மேலாதிக்கவாதிகளின் அகராதியில் உள்ள பொருள் என்ன என்பதை ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு நிரூபித்துக் காட்டிவிட்டது. அமெரிக்க ஆக்கிரமிப்பின் கொடூரத்தையும் ஈராக்கிய மக்களின் வாழ்க்கை எப்படி உருக்குலைந்து கிடக்கிறது என்பதையும், பாக்தாத் நகரைச் சேர்ந்த பொறியாளர் காஸ்வான் அல் முக்தார், அமெரிக்க அதிபர் புஷ்ஷûக்கு எழுதியுள்ள இப்பகிரங்கக் கடிதம் படம் பிடித்துக் காட்டுகிறது. குமுறிக் கொண்டிருக்கும் ஈராக்கிய மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள இக்கடிதம் ""மூன்றாம் உலக மறுமலர்ச்சி'' என்ற ஆங்கில இதழில் வெளிவந்தது. அக்கடிதத்தைச் சுருக்கமாக வெளியிட்டுள்ளோம். — ஆசிரியர் குழு.

 

 

பெறுநர்: ஜார்ஜ் டபிள்யு. புஷ்,

அமெரிக்காவின் மேதகு அதிபர்.
அன்பார்ந்த அதிபர் அவர்களே,

அமெரிக்கா தானே உருவாக்கிக் கொண்டு நடத்திய ஈராக்கிய ஆக்கிரமிப்பினால் அல்லற்படும் மக்களின் அவலத்தை, ஒரு சாமானிய ஈராக்கிய குடிமகன் என்ற முறையில் எனது கருத்துக்களை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

 

"சித்திரவதைக் கூடங்களும் இரகசிய போலீசும் முற்றாகவும் நிரந்தரமாகவும் ஒழிக்கப்பட்டு விட்டது' என்று ஈராக்கிய மக்களிடம் நீங்கள் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு அடித்துச் சொன்னீர்கள். நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கக் கூடும் என்று அப்போது நான் நேர்மையாக நம்பினேன். ஆனால், 2003ஆம் ஆண்டின் மே மாதம் முதற்கொண்டே உங்கள் படையினர் ஈராக்கிய மக்களைச் சித்திரவதை செய்து வருகின்றனர் என்பதைப் பின்னர்தான் நான் அறிந்தேன். இத்தகைய மனித உரிமை அத்துமீறல்களும் அட்டூழியங்களும் நடப்பது உங்களுடைய தளபதிகளுக்குத் தெரியும் என்பதையும், தமது உயரதிகாரிகளுக்கு அவர்கள் இது குறித்து அறிக்கைகள் அனுப்பியுள்ளனர் என்பதையும் பின்னர் நான் அறிந்தேன்.

 

ஈராக்கியர்கள் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களால் சித்திரவதை செய்யப்படுவதைப் பற்றிய உண்மைகளை அறிந்திருந்த போதிலும், நீங்கள் சித்திரவதைக்கு ஆளானவர்களிடம் மன்னிப்புக் கோரவில்லை. மாறாக, "சில கறுப்பு ஆடுகள்' மீது பழிபோட்டுவிட்டு அலட்சியமாகவே நீங்கள் நடந்து கொண்டீர்கள். நீங்கள் இவ்வாறு சில கறுப்பு ஆடுகள் மீது குற்றம் சாட்டி கருத்து தெரிவித்த போதிலும், உங்கள் படைகள் ஈராக்கில் நடத்தும் சித்திரவதைகளோ அல்லது மனித உரிமை அத்துமீறல்களோ நின்றுவிடவில்லை. ஈராக்கில் உள்ள அமெரிக்க சிறைச் சாலைகளில் ஈராக்கியர்கள் வதைக்கப்படும் செய்திகள் இன்றும் கூட வந்தவண்ணமே உள்ளன. ஈராக்கிலிருந்து பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் அமெரிக்கா இருந்த போதிலும், அமெரிக்காவின் பாதுகாப்புக்கு இவ்வாறு சித்திரவதைகள் செய்வது அவசியமானது என்று உங்கள் ஆலோசகர்கள் கூறுவார்கள் என நான் உறுதியாகச் சொல்ல முடியும்.

 

உங்களுடைய "விருப்பப்பூர்வமான கூட்டணி'யின் இதர பங்காளிகளது நடத்தையும் கூட எந்த விதத்திலும் மேலானதாக இல்லை. பிரிட்டிஷ் படைகளும் டேனிஷ் படைகளும் சிறைபிடிக்கப்பட்ட ஈராக்கியர்களைச் சித்திரவதை செய்து கொண்டுதான் இருக்கின்றன. உங்கள் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு பயிற்றுவிக்கப்பட்ட "புதிய ஈராக்கிய படை'யினரும் தமது சகோதரர்களான ஈராக்கியர்களை வதைப்பதை, மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகளிலிருந்து நாங்கள் நன்கறிய முடிகிறது. மேதகு அதிபர் அவர்களே, ஒரு விசயம் எனக்குத் தெளிவாக தெரிகிறது. உங்களது "விடுதலை'க்கு முன்னர் ஒரு தீய சக்தியால் வதைக்கப்பட்ட நாங்கள், இப்போது நான்கு தீய சக்திகளால் வதைக்கப்படுகிறோம். நீங்கள் அறிவித்ததற்கு மாறாக, சித்திரவதைக் கூடங்கள் எப்போதைக்கும் நிரந்தரமாகவே நீடித்திருக்கும் என்றே தோன்றுகிறது.

 

நடவடிக்கைகள், அவற்றின் விளைவுகளைக் கொண்டுதான் மதிப்பிடப்படுகின்றன. ஆரவாரங்கள் சவடால்களால் மதிப்பிடப்படுவதில்லை. உங்கள் படைவீரர்களைப் போலவே சாமானிய ஈராக்கியர்களின் உயிர்களும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளன. ஈராக்கை நீங்கள் கைப்பற்றியிருப்பதன் விளைவாகத் தோன்றியுள்ள பொதுவான அராஜகத்தினால் ஈராக்கியர்களின் வாழ்வு துன்பதுயரமிக்கதாகி விட்டது. நாங்கள் வெளியில் நடமாடவே அஞ்சுகிறோம்.

 

சாமானிய ஈராக்கிய மக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள கவச வண்டிகளிலோ, குண்டு துளைக்காத கார்களிலோ செல்வதில்லை. கிரிமினல் கும்பல்களால் கொல்லப்படும் ஈராக்கியர்களை விட, அமெரிக்கப் படைகளால்தான் அப்பாவி ஈராக்கியர்கள் அதிகமாகக் கொல்லப்படுகின்றனர். வெறிபிடித்த உங்கள் படையினர் சட்டத்தின் முன் பதில் சொல்ல வேண்டிய எவ்விதப் பொறுப்புமின்றி, இச்சட்ட விரோதக் கொலைக் குற்றங்களிலிருந்து தப்பி சர்வ சுதந்திரமாக இருக்கிறார்கள். இது நீங்கள் நன்கறிந்த விசயம்தான். தமது நடவடிக்கைகளுக்கு இந்தக் கொலைகாரர்கள் "வருத்தம்' தெரிவிப்பதுகூட இல்லை என்பதை நான் நேரிலே கண்டிருக்கிறேன்.

 

பண்பார்ந்த வாழ்க்கைத் தரங்களிலிருந்து ஈராக்கியர்களுக்கு "விடுதலை'!

 

மேதகு அதிபர் அவர்களே, மீண்டும் ஒரு விசயத்தை உங்களுக்கு நான் நினைவூட்ட விரும்புகிறேன். உங்களது "விடுவிக்கப்பட்ட' ஈராக்கில் இன்று 60மூக்கும் மேலானோர் வேலையின்றிப் பரிதவிக்கின்றனர். ஆனால், "விடுதலை'க்கு முன்பு ஏறத்தாழ 30மூ பேர்தான் வேலையின்றி இருந்தனர். கௌரவமாக வேலை செய்து சம்பாதிக்க முடியாமல் போனவர்களின் எண்ணிக்கையை உங்களது நடவடிக்கை இரட்டிப்பாக்கி விட்டது.*

 

2004ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் உங்களது அமெரிக்க நாடாளுமன்றம், ஈராக் நிலவரம் பற்றிய அறிக்கையை வெளியிட்டது. அதில், 2003ஆம் ஆண்டு மே மாதத்தில் அதாவது, உங்களது படையெடுப்புக்கு அடுத்த சில மாதங்களில், ஈராக்கின் மொத்தமுள்ள 18 மாநிலங்களில், 7 மாநிலங்களுக்கு ஒரு நாளைக்கு 16 மணிநேரம் மின்சாரம் கிடைத்தது. ஆனால், ஓராண்டுக்குப் பின்னர் ஒரேயொரு மாநிலத்தில்தான் அந்தளவுக்கு மின்சாரம் கிடைத்தது. இப்போதைய நிலவரப்படி, 50 இலட்சம் மக்கள் வாழும் பாக்தாத் நகரத்தில் ஒரு நாளைக்கு 6 மணிநேரம் மின்சாரம் கிடைத்தால், அது எங்களுக்கு அதிர்ஷ்டம்தான்.

 

கடந்த 22 மாதகாலம் உங்களது ஆக்கிரமிக்கப்பட்ட ஆட்சியில் மருத்துவ சுகாதாரச் சேவைகள் படுமோசமாக சீரழிந்து விட்டன. இன்னமும் கூட மருத்துவமனைகளில் மிகச் சாதாரணமான மருந்துப் பொருட்களுக்குப் பஞ்சம் நீடிக்கிறது. வெளியில் கூட மருந்துகள் கிடைப்பதில்லை. பாதுகாப்பு என்ற பெயரிலான தடாலடி நடவடிக்கைகளாலும் தெருக்கள் அடைபட்டுக் கிடப்பதாலும் மிகமிகக் குறைவான எண்ணிக்கையிலேயே சாமானிய ஈராக்கியர்கள் மருத்துவமனைக்கு வரமுடிகிறது. மருத்துவமனைகளிலோ மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. மருந்து இல்லாமல் எரிச்சலடையும் நோயாளிகளின் உறவினர்கள் ஏதும் செய்ய இயலாத நிலையில் உள்ள மருத்துவர்களைத் திட்டித் தீர்க்கின்றனர்; ஏன், சில சமயங்களில் அவர்களைத் தாக்கவும் செய்கின்றனர்.

 

பாதுகாப்பின்மையாலும், கையாலாகாத நிலையில் போலீசுத் துறை இருப்பதாலும், பெரும் பிணைத் தொகை கேட்டு நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் கிரிமினல் குற்றக் கும்பல்களால் கடத்தப்பட்டுள்ளனர். கடத்தப்படுவீர்கள் என்று சிலர் அச்சுறுத்தப்படுகின்றனர். இதன் விளைவாக, நூற்றுக்கணக்கான திறமையான மருத்துவர்கள் நாட்டை விட்டே ஓடிவிட்டனர்; மருத்துவ சுகாதாரச் சேவைகள் இதனால் மேலும் மோசமாகச் சீரழிந்து விட்டது. மேதகு அதிபர் அவர்களே, இந்தத் திறமையான மருத்துவர்கள் ஈராக்கிய "சர்வாதிகாரி'யின் ஆட்சியின்போது நாட்டை விட்டு ஓடவில்லை. ஆனால், உங்களது "விடுதலை செய்யப்பட்ட' ஈராக்கில் நிலவும் அராஜக குழப்ப நிலைமையாலும், காட்டாட்சியினாலும்தான் நாட்டை விட்டே ஓடுகின்றனர்.

 

உங்கள் ஆளுகையின் கீழுள்ள ஈராக்கிலிருந்து ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பீப்பாய் சுத்திகரிக்கப்பட்ட டீசல் துருக்கி வழியாகக் கடத்தப்பட்டு வருவதை பதிவேடுகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. உங்கள் அமெரிக்க அரசாங்கத்துக்கும் இது நன்றாகத் தெரியும். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை மிகையாக ஏற்றுமதி செய்யுமளவுக்கு ஈராக் திறன் பெற்றுள்ள நாடு என்பதையே இந்த விவரங்கள் காட்டுகின்றன.

 

1991ஆம் ஆண்டில் நடந்த போரைப் போல, தற்போது ஈராக் "விடுதலை'யின்போது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்குதல் இலக்காக்கப்படவில்லை. தற்போதைய அமெரிக்கப் படையெடுப்பில் அவற்றுக்கு ஏற்பட்ட சேதம் குறைவானதுதான் என்றே யாவரும் கருதுவர். எனினும், ஈராக் "விடுதலை' செய்யப்பட்டு 22 மாதங்களாகியும், சுத்திகரிப்பு நிலையங்கள் ஏன் சீர்செய்யப்பட்டு இயக்கப்படவில்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது. துருக்கி, குவைத், சவூதி அரேபியா ஆகிய நாடுகளிலிருந்து மட்டுமல்லாமல், இசுரேலிலிருந்தும் கூட சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஏன் தொடர்ந்து இறக்குமதி செய்யப்படுகிறது? எரிவாயுவை ஏற்றுமதி செய்யும் நாடான எமது நாட்டிற்குள் ஏன் எரிவாயு தொடர்ந்து இறக்குமதி செய்யப்படுகிறது? எங்கள் நாட்டின் பணம் ஏன் இப்படிக் கேட்பாரின்றிச் சூறையாடப்படுகிறது?

 

1991ஆம் ஆண்டில் அமெரிக்கக் குண்டு வீச்சால் சேதமடைந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை ஒரு சில மாதங்களிலேயே நாங்கள் சீர் செய்து இயக்கினோம். உங்களது பொருளாதாரத் தடைகள், மேலை நாடுகளின் உதவி மறுப்பு ஆகிய பல்வேறு இடர்ப்பாடுகளினூடே நாங்கள் இதைச் சாதித்தோம். 13 ஆண்டுகளாக நாங்கள் அவற்றைத் தொடர்ந்து இயக்கி எண்ணெய் ஏற்றுமதி செய்தோம். இதுபோலவே, மின்சார விநியோகத்தை ஒரு சில மாதங்களிலேயே பழைய நிலைமைக்கு ஈராக்கிய மக்கள் கொண்டு வந்தனர். 1991ஆம் ஆண்டின் குண்டு வீச்சில் சேதமடைந்த அனைத்து கட்டிடங்களையும் ஒரே ஆண்டிற்குள் ஈராக்கிய மக்கள் சீரமைத்து மீண்டும் கட்டியெழுப்பினர். ஆனால், ஈராக் "விடுதலை' அடைந்து 22 மாதங்களுக்குப் பின்னரும், மறுகட்டுமான வேலை எதுவும் செய்யப்படாததைக் கண்டு என்மனம் மிகவும் வேதனைப்படுகிறது.

 

1991ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட குண்டு வீச்சுத் தாக்குதலின் போது, தொழில் யுகத்துக்கு முந்தைய பின்தங்கிய நிலைக்கு ஈராக் தள்ளப்படும் என்று அமெரிக்கா அறிவித்ததை தாங்கள் நன்கறிவீர்கள். கண்ணில் பட்டதையெல்லாம் குண்டு வீசி அழித்து நீங்கள் உங்களது வல்லாண்மையைக் காட்டினீர்கள். ஆனால், எவையெல்லாம் குண்டு வீச்சில் அழிக்கப்பட்டனவோ, அவையனைத்தையும் ஈராக்கிய மக்கள் ஆச்சரியப்படத்தக்க வகையில் மீண்டும் கட்டியெழுப்பினர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, உங்களது பொருளாதாரத் தடைகளினூடே எமது நாடு புதிய கட்டுமானத் திட்டங்களை வகுத்து இலக்கை நிறைவேற்றியது. ஒரு ஈராக்கியன் என்ற முறையில் இந்தச் சாதனைகளுக்காக நான் பெருமைப்படுகிறேன். ஈராக்கியர்களாகிய நாங்கள் மறுகட்டுமான வேலைகளில் ஒரு புதிய சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளோம். ஆனால், நீங்கள் "விடுதலை'யைச் சாதித்து 22 மாதங்களுக்குப் பின்னரும் உருப்படியாக கண்ணுக்குப் புலப்படும்படியாக எந்தவொரு மறுகட்டுமான வேலையும் நடைபெறவில்லை. சாதனைகள் ஈட்டுவதில் அமெரிக்கா படுமோசமாகத் தோல்வியடைந்து விட்டதையே இவையனைத்தும் காட்டுகின்றன.

 

1991இலிருந்து 13 ஆண்டுகளாக எமது அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட ரேசன் உணவைக் கொண்டுதான் ஈராக்கியர்கள் வாழ்ந்து வந்தனர். ஈராக்கின் சர்வாதிகார அரசாங்கம் எங்களைக் கொள்ளையடிப்பதாகவும் ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு நபருக்கு 2200 கலோரி அளவுக்கு மட்டுமே உணவளிப்பதாகவும் நீங்கள் அப்போது பிரச்சாரம் செய்தீர்கள். உங்களால் "விடுவிக்கப்பட்டுள்ள' ஈராக்கின் உங்களது அரசாங்கமும் இன்னமும் அதே 2200 கலோரி அளவுக்கான உணவையே ரேசனில் தருகிறது.

 

உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யவும் ரேசனில் அவற்றை வழங்கவும் எமது ஈராக் அரசாங்கம் மாதந்தோறும் 15 கோடி டாலர்தான் செலவிடுவது வழக்கம். உங்களது "விடுவிக்கப்பட்ட' ஈராக்கிய அரசாங்கத்தின் கணக்குதணிக்கை அதிகாரியின் கூற்றுப்படியே, ஒரே ஆண்டில் 880 கோடி டாலர் தொகை கணக்கில் வராமல் களவாடப்பட்டுள்ளது. மேதகு அதிபர் அவர்களே, இந்தத் தொகையைக் கொண்டு 60 மாதங்களுக்கு எம் நாட்டு மக்களுக்கு ரேசனில் உணவளிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? எங்கள் பணத்தைச் செலவிடுவதில் நிதிரீதியாகப் பொறுப்பின்மையும் நேர்மையின்மையும் வெளிப்படையாகவே தெரிகிறது. இதுதான் ஈராக் விடுவிக்கப்பட்டதன் நோக்கமா என்ற ஐயம் எனக்கு ஏற்படுகிறது. ஈராக்கிய மக்கள் வகை தொகையின்றி சூறையாடப்படுகிறார்கள் என்று வெளிப்படையாகச் சொல்வதற்காக நான் வருந்துகிறேன். மேலும், எங்கள் நாட்டின் வளமான செல்வங்களிலிருந்து நாங்கள் பிய்த்தெறியப்பட்டு "விடுதலை' செய்யப்பட்டுள்ளோம்.

 

மேதகு அதிபர் அவர்களே, உங்களது "விடுதலை' நடவடிக்கையால் எமது குழந்தைகள் அஞ்சி பீதியில் உறைந்து விட்டன. உங்களது நடவடிக்கையால் அவர்களுடைய எதிர்காலம் நாசமாக்கப்பட்டுள்ளதை அவர்கள் ஒருபோதும் மறக்கவே மாட்டார்கள். பீதிக்குள்ளாக்கப்பட்ட எமது குழந்தைகளை உங்கள் நாட்டின் குழந்தைகள் எதிர்கொண்டே தீரவேண்டியிருக்கும் என்பதை நான் உறுதியாகச் சொல்ல முடியும். எங்கள் குழந்தைகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காகவும் அட்டூழியங்களுக்காகவும் உங்கள் குழந்தைகள் கட்டாயம் பதில் சொல்ல வேண்டியிருக்கும். எங்களிடமிருந்து களவாடப்பட்ட பணத்தை உங்கள் குழந்தைகள் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும். அவர்கள் இவற்றுக்காகக் கொடுக்க வேண்டிய விலை பிரம்மாண்டமானதாக இருக்கும் என்பதை நான் அறுதியிட்டுக் கூற முடியும்.

 

உங்களுடைய ஆலோசகர்களைப் போல வண்ணமயமான சித்திரத்தை வரைந்து காட்ட எனக்கு விருப்பமில்லை. பேரழிவு ஆயுதங்கள் ஈராக்கில் குவிந்துள்ளன, அல்கொய்தாவுடன் ஈராக்குக்குத் தொடர்புள்ளது, அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் (உலக வர்த்தக மையக் கட்டிடங்கள்) தகர்த்தெறியப்பட்டதில் ஈராக்குக்குத் தொடர்புள்ளது, ஈராக்கிய மக்கள் அமெரிக்கப் படைகளை "விடுதலையை வழங்கிய இரட்சகர்களாக'க் கருதி வரவேற்கின்றனர் - என்றெல்லாம் அவர்கள் உங்களிடம் சொன்னார்கள். அவர்கள் சொன்னதெல்லாம் அப்பட்டமான பொய்கள் என்று நிரூபணமாகிவிட்டன. மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்பதற்கான தருணம் இப்போது உங்களுக்கு வந்துள்ளது.

 

அமெரிக்கா உபதேசிக்கும் "சுதந்திரம் அல்லது ஜனநாயகத்திற்காக' நாங்கள் அமெரிக்க மக்களை வெறுக்கவில்லை. அமெரிக்க நாட்டை வெறுக்கவில்லை. எமது நாட்டின் அப்பாவி மக்களுக்கு எதிரான உங்களது படைகளின் கொடுங்குற்றங்களையே, பெருந்தீங்குகளையே நாங்கள் வெறுக்கிறோம். உங்கள் படைகள் ஏற்படுத்தியுள்ள பேரழிவுகளையே சீர்குலைவையே நாங்கள் வெறுக்கிறோம்.

 

வணக்கங்களுடன் காஸ்வான் அல் முக்தார், பாக்தாத், ஆக்கிரமிக்கப்பட்ட ஈராக்.

Tom Dispatch.com website
www.tomdispatch.com
(Third world resurgence, No. 175,
Mar.05; www.twnside.org.sg).