09_2005.jpgஒரிசா மாநிலம் தாது வளமும் கனிம வளமும் நிறைந்த பூமி. நாட்டின் மூலவளத்தில் இரும்புத்தாது 32.9 சதவீகிதம், பாக்சைட் 49.95மூ, செறிவான குரோமியம் 98.4சதவீகிதம், நிலக்கரி 24.8 சதவீகிதம ; சுண்ணாம்புக் கல் 28 சதவீகிதம், அலுமினியத் தாது 52 சதவீகிதம் என தாது வளமும் கனிம வளமும் செறிந்த பூமி. இம்மூலவளங்களைத் தனியார் முதலாளிகள் சூறையாடுவதற்காகவே, அம்மாநில அரசு இதுநாள்வரையில் தனது மூலவளத்தை முறைப்படுத்தும் கொள்கையோ சுரங்கத் தொழில் கொள்கையோ வகுக்கவில்லை. இம்மூலவளங்களைச் சூறையாடும்

 தொழிற்சாலைகளால் வெளியேற்றப்படும் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்கு வீடும் நிலமும் நிவாரணமும் வேலைவாய்ப்பும் தருவதற்கான கொள்கையும் இதுவரை வகுக்கப்படவில்லை. பல லட்சக்கணக்கான மக்கள் ஏற்கெனவே இத்தகைய தொழிற்சாலைகளால் வெளியேற்றப்பட்டு வாழ்வுரிமை இழந்து பரிதவிக்கிறார்கள்.

 

இப்போது மாநிலத்தைத் தொழில்மயமாக்கி முன்னேற்றுவது என்ற பெயரால், அந்நிய தொழிற்கழகங்களின் சூறையாடலுக்கு தாராள அனுமதியளித்து பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வுரிமையைப் பறித்து வருகிறது, ஒரிசா அரசு. ""போஸ்கோ''வின் சூறையாடலுக்கு அனுமதித்திருப்பது மட்டுமின்றி, இதுபோல 37 அன்னியக் கம்பெனிகளுடன் ஒரிசா அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. நாட்டின் தற்போதைய மொத்த எஃகு உற்பத்தியை விஞ்சும் வண்ணம் ஒரிசாவில் மட்டும் 4.77 கோடி டன் அளவுக்கு இந்த ஆலைகள் எஃகு உற்பத்தி செய்து குவிக்கும். மாநிலத்தைத் தொழில்மயமாக்குவது என்ற பெயரால் நிறுவப்படும் இந்த ஆலைகளால் லட்சக்கணக்கான மக்கள் தமது சொந்த மண்ணையும் வாழ்வையும் இழந்து வெளியேற்றப்படவுள்ளனர்.

 

எஃகு ஆலைகள் மட்டுமின்றி அலுமினிய சுத்திகரிப்பு ஆலைகள், பாக்சைட் சுரங்கத் தொழிற்சாலைகள் முதலானவற்றை நிறுவ அம்மாநில அரசு பல்வேறு தனியார் அந்நிய நிறுவனங்களுடன் அண்மையில் ஒப்பந்தம் போட்டுள்ளது. ஸ்டெர்லைட் நிறுவனத்தின் துணை நிறுவனமான வேதாந்தா அலுமினியம் கம்பெனி பாக்சைட் சுரங்கத் தொழிலிலும், குரோமைட் சுரங்கத் தொழிலில் ஜிண்டால் நிறுவனமும் வந்திறங்கியுள்ளன. நார்வேயின் ஹைட்ரோ அலுமினியம், கனடாவின் அல்கான் முதலான அந்நிய நிறுவனங்கள் பாக்சைட், மாங்கனீசு, டோலோமைட் முதலானவற்றைப் பிரித்தெடுக்கும் சுரங்கத் தொழிலில் நுழைந்துள்ளன.

 

இத்தொழில் நிறுவனங்கள் அனைத்தும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் வாழும் காலாகந்தி, ரயாகடா, கோரபுட், சுந்தர்கார், கியோன்ஜார், தங்கர்படா முதலான மாவட்டங்களில்தான் குவிந்துள்ளன. இந்த ஆலைகளுக்காக அடுத்தடுத்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கிராமம் கிராமமாக விரட்டியடிக்கப்படுகிறார்கள். வாழ்வுரிமை பறிக்கப்படுவதை எதிர்த்து இம்மக்கள் போராடினால், அவர்கள் மீது பொய்வழக்கு, தடியடி, கைது செய்தல் மட்டுமின்றி துப்பாக்கிச் சூடும் நடத்தி அடக்குமுறையை ஏவி வருகிறது ஒரிசா அரசு. கடந்த 2000வது ஆண்டில் தமது வாழ்வுரிமையைப் பறிக்கும் பாக்சைட் தொழில் திட்டத்தை எதிர்த்து ரயகடா மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியினர் போராடியபோது போலீசார் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தி 3 பேரைக் கொன்று 50க்கும் மேற்பட்டோரைப் படுகாயப்படுத்தினர்.

 

இத்தகைய அடக்குமுறைகள் ஒருபுறமிருக்க, இந்த ஆலைகளிலிருந்து வெளியேறும் நச்சுக் கழிவுகள் மனித உயிர்களையும் சுற்றுச் சூழலையும் பல பத்தாண்டுகளுக்கு நாசமாக்கிவிடும். ஏற்கெனவே அரசுத் துறை நிறுவனமான ""நால்கோ'' வெளியேற்றும் அலுமினியச் சாம்பல் கழிவுகளால் அங்குல், தல்சார் வட்டாரங்களில் விவசாய நிலங்கள் நாசமாக்கப்பட்டு விட்டன. அங்கு புல் பூண்டு கூட முளைக்காமல் விவசாயமும் விவசாயிகளும் முடமாக்கப்பட்டுள்ளனர்.