09_2005.jpgசென்னையில் இருந்து கோவைக்குச் செல்லும் சேரன் விரைவுத் தொடர் வண்டியில், கடந்த ஜூலை மாதம் ஒரு இளைஞர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்ட செய்தியைப் பத்திரிகைகள் அனைத்தும் பரபரப்போடு வெளியிட்டன. அதேசமயம், அந்த இளைஞர் ஓடும் ரயிலில் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணத்தை எவ்விதப் பரபரப்பும் இன்றி, அடக்கியே வெளியிட்டன.

 

சேரன் விரைவுத் தொடர்வண்டியில் தற்கொலை செய்து கொண்ட ரவிக்குமார் என்ற அந்த இளைஞர் கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர். இயந்திரவியலில் பட்டயப் படிப்பு முடித்திருந்த அவர், சென்னைக்கு அருகில் உள்ள திருப்பெரும் புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் 5,500 ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்து வந்திருக்கிறார். திடீரென அந்நிறுவனத்தில் வேலையிழப்பு ஏற்பட்டதையடுத்து, வேலை தேடி அலைந்த அவருக்கு, வெறும் 3,500ஃ ரூபாய் சம்பளத்திற்குத் தான் வேலை கிடைத்தது. தனது படிப்புக்கு ஏற்றபடி நிறைவான, உத்தரவாதமான வேலை கிடைக்காத அவலம்தான் ரவிக்குமாரைத் தற்கொலைக்குத் தள்ளிவிட்டிருக்கிறது.

 

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக, அவர் போலீசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ""நான் வேலையில்லாத காரணத்தினாலும், இந்த உலகில் உயிர் வாழப் பிடிக்காத காரணத்தினாலும் தற்கொலை செய்து கொள்கின்றேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

மு இந்தியாவிலுள்ள மிகவும் செழுமையான விவசாயப் பகுதிகளுள் ஆந்திராவின் குண்டூர் மாவட்டமும் ஒன்று; இம்மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயக் கூலியான ஜெயலெட்சுமிக்கு கடந்த அறுவடைக் காலத்தின்பொழுது வெறும் ஆறு நாட்களுக்குத்தான் வேலை கிடைத்தது. அவருக்குக் கிடைத்த ஒருநாள் கூலியோ வெறும் இருபத்தைந்து ரூபாய்தான். இதை வைத்துக் கொண்டுதான் ஜெயலெட்சுமியின் இரண்டு குழந்தைகள், அவரது மாமியார் உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட குடும்பம் காலத்தை ஓட்டியாக வேண்டும். வேலை தேடிப் போவதாகக் கூறிவிட்டுச் சென்ற ஜெயலெட்சுமியின் கணவர், இப்பொழுது எங்கே இருக்கிறாரென்று கூட அவருக்குத் தெரியவில்லை. கடந்த முறை போல, நானுறோ, ஐநூறோ சம்பாதித்துக் கொண்டு திரும்புவார் என்ற நம்பிக்கைதான் அவரிடம் இப்பொழுது ஒட்டிக் கொண்டுள்ளது.

 

மு இந்திய ரெயில்வே நிர்வாகம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2,000 காலியடங்களை நிரப்ப விளம்பரம் செய்தபொழுது, அதற்கு 74 இலட்சம் பேர் விண்ணப்பம் போட்டுள்ளனர். வெறும் எட்டாவது படித்திருந்தால் போதும் என்ற தகுதியினைக் கொண்ட அந்த வேலைக்கு, பொறியியல் பட்டதாரிகள் 20,000 பேரும்; வர்த்தக மேலாண்மை முதுகலை (ஆ.ஆ.அ.) பட்டப்படிப்பு படித்தவர்கள் 3,000 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

 

படித்தவன், படிக்காதவன்; நகரம், கிராமம் என்ற வேறுபாடு எதுவுமின்றி ஒரு சாபக்கேடு போல வேலையில்லாத் திண்டாட்டம் இந்திய உழைக்கும் மக்களைப் பிடித்தாட்டி வருவதற்கு இவை போன்ற பல உதாரணங்களைத் தர முடியும். தனியார்மயம் தாராளமயம் நடைமுறைக்கு வந்த பின், வேலையில்லாத் திண்டாட்டம் பல்கிப் பெருகியிருப்பதோடு, அப்பிரச்சினையைத் தனியார்மயத்தால் தீர்க்க முடியாது என்று ஆளும் கும்பல் ஒத்துக் கொள்ள வேண்டிய கட்டாயமும் தோன்றிவிட்டது.

 

புள்ளி விவர மோசடி

 

இந்திய அரசின் திட்டக் கமிசன் வெளியிட்டுள்ள 200203 ஆம் ஆண்டுக்கான பொருளாதார அறிக்கையில், ""199394 ஆம் ஆண்டில் 2 கோடியாக இருந்த வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை, 19992000இல் 2.6 கோடியாக அதிகரித்திருப்பதாக''க் குறிப்பிட்டுள்ளது. 2000 ஆண்டிற்குப் பிறகு, வேலையில்லாதவர்கள் பற்றிய கணக்கு எடுப்பதில் கூட அரசு அக்கறை காட்டவில்லை.

 

வேலையில்லாத் திண்டாட்டம் பற்றி அரசாங்கம் வெளியிட்டுள்ள இந்தப் புள்ளி விவரம், முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் மோசடி என அம்பலப்படுத்தியிருக்கிறது, மும்பையைச் சேர்ந்த அரசியல் பொருளாதாரத்திற்கான ஆய்வுக் குழு. உழைக்கின்ற வயதினை வந்தடைந்துவிட்ட, எந்த வேலை கிடைத்தாலும் அதைச் செய்யத் தயாராக உள்ள உழைப்பாளிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதன் மூலம், வேலையில்லாத் திண்டாட்டத்தின் அபாயத்தை இந்திய அரசு குறைத்து மதிப்பிட்டு வெளியிட்டிருப்பதாக இக்குழு குற்றஞ்சுமத்துகிறது.

 

இக்குழுவினரின் மதிப்பீட்டின்படி 2000ஆம் ஆண்டில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 24 கோடி; 2004இல் உழைக்கக் கூடிய திறன் பெற்றவர்களில் சரி பாதிபேர் அதாவது, 31 கோடி பேர் வேலையில்லாமல் திண்டாடுவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளது. (இந்தியப் பொருளாதாரத்தின் கூறுகள், இதழ் எண்: 36, 37)

 

அரசாங்கம் வேலையில்லா பட்டாளத்தின் எண்ணிக்கையை இப்படி குறைத்துக் காட்டுமா எனச் சந்தேகிப்பவர்களுக்காக இன்னொரு ஆதாரத்தைத் தருவோம். வேலையில்லாத் திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்ட ரவிக்குமார் சேரன் விரைவுத் தொடர் வண்டியில் தற்கொலை செய்து கொண்ட அதே ஜூலை மாதத்தின் இறுதியில், சி.ஐ.ஐ. என்ற தரகு முதலாளிகள் சங்கம் சென்னையில் நடத்திய கருத்தரங்கில், 2012ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் 40 கோடி பேர் வேலை தேடி அலைவார்கள் என்ற அதிர்ச்சி தரும் புள்ளி விவரம் வெளியிடப்பட்டது. வேலையில்லாத் திண்டாட்டம், தரகு முதலாளிகளே ஒப்புக் கொண்டுள்ள இப்புள்ளி விவரத்திற்கு மேலே போகலாமே தவிர, கீழே விழுவதற்கு வாய்ப்பே இல்லை.

 

வேலையில்லாமல் திண்டாடுபவர்களின் அவல நிலைமை ஒருபுறமிருக்கட்டும்; வேலையில் இருப்பவர்களின் வாழ்க்கை நிலைமையும் கூட ஒளிமயமானதாக இருக்கவில்லை என்பதே உண்மை. இந்தியா கணினி யுகத்தில் நுழைந்த பின்னும் கூட, விவசாயம்தான் வேலை வாய்ப்பு வழங்குவதில் முதலிடத்தில் இருக்கிறது. 1999 2000க்கான பொருளாதார அறிக்கையின் படி, வேலைவாய்ப்பு வழங்குவதில் விவசாயம் 56.7 சதவீதப் பங்கையும்; தொழிற்துறை 17.9 சதவீதப் பங்கையும்; சேவைத்துறை 25.7 சதவீதப் பங்கையும் கொண்டிருந்தன.

 

இப்புள்ளி விவரத்தின் படி, விவசாயத்தின் மூலம் வேலை வாய்ப்புப் பெற்ற 21.58 கோடி பேரில், 21.26 கோடி பேர் சிறு, நடுத்தர விவசாயிகள் மற்றும் கூலி விவசாயிகள். இவர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை; நாளுக்கு நாள் நசிவடைந்து கொண்டே போகும் விவசாயத்தில் இருந்து இவர்களுக்குப் போதிய வருமானமும் கிடைக்கப் போவதில்லை. எனினும் வருமானம் ஈட்டித்தரத்தக்க இலாபகரமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களாக இவர்களை வகைப் பிரித்து வைத்திருக்கிறது, மைய அரசு.


சேவைத்துறையின் மூலம் வேலை வாய்ப்புப் பெற்றுள்ள 25.7 சதவீதப் பேரில், வெறும் 0.2 சதவீதப் பேர்தான் இன்ஃபோஸிஸ், விப்ரோ, டி.சி.எஸ்., போலாரிஸ் போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். மீதிப் பேரெல்லாம், பணக்காரர்களின் வீடுகளையும், குடியிருப்புகளையும் காவல் காக்கும் செக்யூரிட்டிகள்; ஹோட்டல் சர்வர்கள்; கூரியர் நிறுவனங்களில் தபால் பட்டுவாடா செய்யும் ஊழியர்கள்; பெட்டிக் கடை நடத்துபவர்கள் போன்ற தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்கள்தான்.

 

சுருக்கமாகச் சொன்னால், இந்தியாவில் வேலை வாய்ப்பு கிடைக்கப் பெற்றவர்களில் வெறும் 8 சதவீதப் பேர்தான் ""அதிர்ஷ்டசாலிகள்''. இவர்கள்தான் வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் போன்ற அரசுத் துறையிலும்; பொதுத்துறை ஆலைகளிலும், பெரும் தனியார் நிறுவனங்களிலும் வேலை பார்ப்பவர்கள்; ஒப்பீட்டு அளவில் நல்ல வருமானமும், உத்தரவாதமுமான வேலை வாய்ப்பும் கொண்டவர்கள்.

 

மீதமுள்ள 92 சதவீத உழைப்பாளிகள், விவசாயம், நெசவு, கைத்தொழில், சிறு நடுத்தர தொழில்கள், வணிக நிறுவனங்கள் போன்ற தொழில்களை நம்பி வாழும் அத்தக் கூலிகள்தான்! இத்தொழில்கள் மூலம் இவர்களுக்குக் கிடைக்கும் சம்பளமோ, கூலியோ, வருமானமோ, இவர்கள் குடும்பங்க ளின் அடிப்படைத் தேவைகளை வீடு, உணவு, கல்வி, மருத்துவம் போன்றவற்றை ஈடு செய்யப் போதுமானதாக இருக்குமா என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. ஆனாலும், இந்த 92 சதவீதப் பேரையும் நிரந்தர வேலையும் வருமானமும் கொண்டவர்களைப் போல வகைப் பிரித்து மோசடி செய்து வருகிறது, இந்திய அரசு.

 

தாராளமயம் முழுங்கிய வேலைவாய்ப்புகள்

 

தாராளமயத்திற்கு முன்பு, 198384 ஆம் ஆண்டுகளில், மொத்த வேலை வாய்ப்பில் 63.2 சதவீதமாக இருந்த விவசாயத் துறையின் பங்கு, 19992000 ஆண்டுகளில் 56.7 சதவீதமாகக் குறைந்துவிட்டது. தனியார்மய தாராளமயத் தாக்குதலினால் விவசாயம் உருக்குலைந்து போனதால், விவசாயத் துறையில் ஏறத்தாழ 2.7 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாகாமல் ஒழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.

 

இதேகால கட்டத்தில், அந்நிய மூலதனம் நுழைவதற்கு வசதியாக, எல்லாத் "தடைகளையும்' தகர்த்து எரிந்த பின்னும், தொழிற்துறை வேலைவாய்ப்புகளில் புதிய பாய்ச்சல் எதுவும் ஏற்படவில்லை. உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணா என்ற கதைதான் உருவாகியிருக்கிறது. பெரும் தொழிற்துறையைப் பொருத்தவரையில் 1997 தொடங்கி 2001 வரையில் ஐந்தே ஆண்டுகளில் மூன்று இலட்சம் தொழிலாளர்கள் வேலையில் இருந்து துரத்தப்பட்டுள்ளனர். 2003ஆம் ஆண்டில் மட்டும் இத்துறையில் 10 இலட்சம் தொழிலாளர்களின் வேலை பறிக்கப்பட்டிருப்பதாக திட்டக் கமிசன் கூறியிருக்கிறது.

 

இப்படி ஒருபுறம் ஏற்கெனவே ஏதாவதொரு வேலையில் இருந்த தொழிலாளர்களின் வாழ்க்கை அலங்கோலமாக்கப்பட்ட பொழுது, இந்தியப் பொருளாதாரமோ, தாராளமயத்தின் பின் ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து கொண்டே செல்வதாக ஆட்சியாளர்கள் பீற்றிக் கொண்டார்கள்.

 

பொருளாதார வளர்ச்சி வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்திருக்க வேண்டும். ஆனால், தாராளமயத்தின் பின் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் வளர்ச்சியோ, இருப்பதையும் தட்டிப் பறிக்கிறது. இந்த முரண்பாட்டுக்கு விடை சொல்ல முடியாமல் குழம்பிப் போகிறார்கள், முதலாளித்துவ அறிஞர்கள்.

 

ஆனால், இது முரண்பாடல்ல் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் விதியே இதுதான் என்று தனது மூலதனம் நூலில் இப்புதிருக்கு விடையளித்திருக்கிறார், காரல் மார்க்ஸ்.


முதலாளிகள் கோரும் சுதந்திரம்

 

வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க வேண்டும் என்றால், மூலதனத்திற்குச் சுதந்திரம் வேண்டும் என்கிறார்கள் முதலாளிகள். சாதாரண மக்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஆகஸ்டு 15 "சுதந்திரம்' தான்! மூலதனத்திற்குச் சுதந்திரம் என்றால், ""தொழிலாளிக்கு குறைந்தபட்ச கூலி கொடுக்க வேண்டும் என்ற சட்டமெல்லாம் இருக்கக் கூடாது; தேவைப்பட்டால் வேலையில் வைத்துக் கொள்ளவும், இல்லையென்றால் வேலை நீக்கம் செய்யவும் முதலாளிக்கு உரிமை வேண்டும். அதாவது நவீன பாட்டாளிகளை, நவீனக் கொத்தடிமைகளாக நடத்தும் உரிமையைத்தான் முதலாளிகள் நாசூக்காக, தொழிலாளர் நலச் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும்'' எனக் கோருகிறார்கள். அப்படிச் செய்தால், வேலை வாய்ப்பு பெருகும் என நமது காதில் பூ சுற்றுகிறார்கள்.

 

நாம் ஏற்கெனவே குறிப்பிட்டபடி இந்தியாவில் 8 சதவீதத் தொழிலாளர்கள்தான், அமைப்பு ரீதியாகத் திரட்டப்பட்ட துறைகளில் வேலை பார்ப்பவர்கள். மீதி 92 சதவீத தொழிலாளர்கள் அத்தக் கூலிகள்தான். விவசாயம், கைத்தொழில், வணிக நிறுவனங்கள், சிறு நடுத்தரத் தொழிற்சாலைகள் போன்ற துறைகளில் வேலை பார்க்கும் இந்த 92 சதவீதத் தொழிலாளர்கள் குறைந்தபட்ச கூலி, பணி பாதுகாப்பு போன்ற சட்டப்பூர்வமான உரிமைகளை எதிர்பார்க்க முடியாது. அதாவது, தாராளமயத்திற்கு முன்பே, முதலாளிகள் கோரும் "சுதந்திரம்' இந்தியாவில் இருந்தது என்பதே உண்மை நிலை. தாராளமயத்தின் பின்பு தொழிலாளர் நலச் சட்டம் என்பது காகிதத்தில் கூட இருக்கக் கூடாது என அவர்கள் கோருகிறார்கள்.

 

தொழிலாளர் நலச் சட்டத்தை கழிப்பறை காகிதமாக்கும் நடவடிக்கைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. இந்தியாவெங்கும் பல இடங்களில் அமைந்துள்ள சிறப்புப் பொருளாதார மையங்களில், தொழிலாளர் நலச் சட்டம் மட்டுமல்ல் இந்திய அரசியல் சாசனச் சட்டம் கூட செல்லாது போலிருக்கிறது. குர்கானில் நடந்தது போன்ற ஒரு தாக்குதல் சம்பவம் ஜப்பானில் நடந்திருந்தால், ஹோண்டா நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கம்பி எண்ணிக் கொண்டிருப்பார்கள் என முதலாளித்துவ பத்திரிகைகளே எழுதும் அளவிற்கு, சிறப்புப் பொருளாதார வளையங்களில் முதலாளிகளுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

 

""நீண்ட காலமாக வேலை பார்த்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களின் பணியை நிரந்தரம் செய்ய வேண்டியதில்லை'' என்ற "சுதந்திரத்தை', உச்சநீதி மன்றம் தனது தீர்ப்பின் மூலம் முதலாளிகளுக்கு வழங்கியிருக்கிறது.

 

100 தொழிலாளர்கள் ஃ ஊழியர்களுக்கு மேல் வேலை பார்க்கும் தொழில் நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்ய வேண்டுமானால், முன் அனுமதி பெற வேண்டும் என்ற சட்டத்தை ரத்து செய்து, 1000 பேர் வரை வேலை பார்க்கும் தொழில் நிறுவனங்களில் கூட நினைத்த மாத்திரத்தில் தொழிலாளியை வேலை நீக்கும் செய்யும் உரிமையை மைய அரசு, தொழிலாளர் நலச் சட்டத் திருத்தத்தின் மூலம் முதலாளிகளுக்கு வழங்கியிருக்கிறது.

 

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச கூலி கொடுக்கக் கூடத் தேவையில்லை என்ற முன்னுதாரணத்தையும் மைய அரசே ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்திரவாதச் சட்டத்தின் கீழ் வேலைக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்களின் கூலி 60 ரூபாய்தான். இது, பல்வேறு மாநிலங்களில், விவசாயத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சட்டபூர்வ குறைந்தபட்ச கூலியை விட மிகக் குறைவானது.

 

இவ்வளவு தூரம் மூலதனத்திற்குச் சுதந்திரம் இருந்தும், முதலாளிகள் எவ்வளவு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறார்கள்? 199394க்கும், 19992000க்கும் இடைபட்ட ஏழு ஆண்டுகளில், மிகப் பெரும் நிறுவனங்கள் வெறும் இரண்டு இலட்சம் புதிய வேலை வாய்ப்புகளைத்தான் உருவாக்கியுள்ளன. அதேசமயம், இதே காலகட்டத்தில் ஏழு இலட்சம் ஆலைத் தொழிலாளர்கள் வேலையில் இருந்து துரத்தப்பட்டுள்ளனர். இதேகால கட்டத்தில், சிறு நடுத்தர தொழில்களையும் உள்ளிட்ட உற்பத்தி சார்ந்த தொழிற்துறை 92 இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியதாகக் கூறப்பட்டாலும், விவசாயம் நசிந்து வேலையிழந்தவர்களின் எண்ணிக்கையை (2.7 கோடி பேர்) ஒப்பிடும் பொழுது சுண்டைக்காய்தான்.

 

எவ்வித உரிமைகளும் இன்றி, எவ்வளவு கூலி கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு உழைக்க மக்கள் தயாராக இருந்தாலும், ""மலிவான கூலி'' மட்டுமே வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழித்து விடாது என்பதும்; எவ்வளவுக்கு எவ்வளவு பன்னாட்டு மூலதனமும், உயர் தொழில் நுட்பமும் உள்ளே நுழைகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு வேலையில்லாத் திண்டாட்டம் பல்கிப் பெருகும் என்பதும்தான் இதிலிருந்து நிரூபணமாகிறது.


ஆளும் கும்பலின் அச்சம்

 

எனினும், நகர்ப்புறத்தைச் சேர்ந்த படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு சேவைத்துறையும்; கிராமப்புற ஏழை மக்களுக்கு மைய அரசு கொண்டு வந்துள்ள வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்டமும் வேலைகளை வழங்கிவிடும் என ஊதிப் பெருக்குகிறார்கள்.


சேவைத்துறையில் வேலை வாய்ப்பு என்றவுடன் தொலைபேசி, ரயில்வே, போக்குவரத்து, மின்சாரம், வங்கி போன்ற சேவைத்துறைகளில் வேலைவாய்ப்பு பெருகப் போவதாகக் கனவு காண வேண்டாம். தனியார்மயம் தாராளமயத்தால் ஆட்குறைப்பு நடந்து கொண்டிருக்கும் துறைகள் இவை.

 

இதே போல பட்டப்படிப்பு முடித்த அனைவருக்கும் கணினி மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் வேலை கிடைக்கப் போவதில்லை. கால் சென்டர்கள், மென்பொருள் வளர்ச்சி எனப் பல பிரிவுகளைக் கொண்ட இத்தகவல் தொழில்நுட்பத் துறை அமெரிக்க ஐரோப்பிய சந்தைகளைச் சார்ந்தே இயங்குகிறது. 2003ஆம் ஆண்டு நிலவரப்படி இத்துறை வெறும் 6.5 இலட்சம் பேருக்குத்தான் வேலை வாய்ப்பை வழங்கியிருக்கிறது. 2015ஆம் ஆண்டு வாக்கில் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த 33 இலட்சம் வேலை வாய்ப்புகள், அமெரிக்காவில் இருந்து ஏழை நாடுகளுக்கு இடம் பெயரும் எனக் கூறப்படுகிறது. 2010இல் இந்தியாவில் வேலை தேடி அலையும் மக்கள் தொகை 40 கோடி எனும் பொழுது, இந்த 33 இலட்சம் வேலை வாய்ப்புகளும் இந்தியாவிற்குக் கிடைத்தாலும், அதனால் என்ன பயன் ஏற்பட்டு விடும்?

 

பங்குச் சந்தை வளர்ச்சியால், ஆலைத் தொழிலாளிக்கும், கிராமத்து விவசாயிக்கும் ஏதாவது நன்மை உண்டா? அதைப் போன்றுதான், இந்தத் தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியால் விவசாயத்திற்கும், உற்பத்தி சார்ந்த உள்நாட்டுத் தொழிற்துறைக்கும் எவ்விதப் பலனும் கிடையாது. பிரிட்டிஷ் காலனி ஆட்சியின் பொது, ""உடலால் இந்தியர்களாகவும், எண்ணத்தால் ஆங்கிலேயர்களாகவும்'' இருக்கும் ஒரு புதிய படித்த நடுத்தர வர்க்கம் உருவாக்கப்பட்டதைப் போல, இந்தத் தகவல் தொழில்நுட்பத் துறை ""உடலால் இந்தியர்களாகவும், எண்ணத்தால் அமெரிக்கர்களாகவும்'' இருக்கும் அமெரிக்க மோகம் கொண்ட புதுப் பணக்கார கும்பலைத்தான் உருவாக்கிவிட்டுள்ளது.

 

மைய அரசு அறிவித்துள்ள ""தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாதச் சட்டம்'' கிராமப்புற மக்களை ஏய்க்க வந்துள்ள இன்னுமொரு மோசடி. மைய அரசால் தேர்ந்தெடுக்கப்படும் 200 மாவட்டங்களில் மட்டும்தான் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தப் போகிறார்கள். இந்த 200 மாவட்டங்களில், ஏற்கெனவே வேலைக்கு உணவு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் 150 மாவட்டங்களில், அத்திட்டத்தை ஒதுக்கி வைத்து விட்டு, இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போகிறார்கள்.

 

இந்த 200 மாவட்டங்களைச் சேர்ந்த நகர்ப்புறங்களில் வாழும் வேலையில்லாத பட்டாளம் இச்சட்டத்தின்படி வேலை கோர முடியாது. இந்த 200 மாவட்டங்களைச் சேர்ந்த கிராமப்புறங்களில் வாழும் வேலையில்லாதவர்கள் அனைவருக்கும் இச்சட்டத்தின்படி வேலை கிடைக்கும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் கிடையாது. அதனால்தான், இச்சட்டத்தின்படி வேலை கிடைக்காதவர்களுக்கு ""உத வித் தொகை'' வழங்கப்படும் என்ற ஒரு ஓட்டையை சட்டத்திலேயே உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

 

இச்சட்டத்தின்படி, வருடத்தில் 100 நாட்களுக்கு மட்டும்தான் வேலை கிடைக்கும். மீதி 265 நாட்களுக்கு வயிற்றில் ஈரத்துணியைக் கட்டிக் கொள்வதா என்பதை இச்சட்டத்தை இயற்றியவர்களிடம்தான் கேட்க வேண்டும். மேலும், 100 நாட்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக் கும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் கிடையாது. மைய அரசு நினைத்தால், ஏதாவதொரு நொண்டி சாக்கைச் சொல்லி, இத்திட்டத்தைப் பாதியிலேயே நிறுத்தி விடலாம்.

 

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, வேலை செய்பவர்களுக்குச் சட்டப்ப டியான குறைந்தபட்ச கூலி தரவேண்டும் என்ற அடிப்படை உரிமையையே இச்சட்டம் செல்லாக் காசாக்கி விட்டது. உண்மை இப்படியிருக்க, போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்டு அனைத்து ஓட்டுக் கட்சிகளும், வேலைக்கான உரி மையை, இச்சட்டம் அடிப்படை உரிமை ஆக்கிவிட்டதைப் போல புகழ்ந்து தள்ளி பித்தலாட்டம் செய்கின்றன.

 

தனியார்மயம் தாராளமயத்தால் விவசாயம் நாசமாக்கப்பட்டு, அரைப்பட்டினி நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ள கிராமப்புற விவசாயிகள், கலகத்தில் இறங்கி விடுவார்களோ என அஞ்சி நடுங்குகிறது, இந்திய ஆளும் கும்பல். அதனால்தான், அவர்களின் கோபத்திற்கு வடிகால் வெட்டும் விதமாக இம்மோசடி சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது.

 

""அனைவருக்கும் வேலை வழங்க முடியாது; வேலை செய்பவனுக்கும் குறைந்தபட்ச கூலி தர முடியாது'' என்பதை இச்சட்டத்தின் மூலம் ஆளுங்கும்பல் மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளது. இனி, வேலை தேடி அலையும் பட்டாளம் என்ன செய்யப் போகிறது என்பதுதான் கேள்வி. வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என வாழப் போகிறோமா? இல்லை, ஆளும் வர்க்கம் அஞ்சுவதைப் போல, மறுகாலனியாக்கத்திற்கு எதிராகக் கலகத்தில் இறங்கப் போகிறோமா?


மு ரஹீம்