10_2005.jpg'தண்ணீர் தனியார்மயத்துக்கு எதிரான ஒரிசாவின் போராட்ட அனுபவத்தை, நான், தமிழகத்திலும், இந்தியாவெங்கிலுமே காண்கிறேன்" எனக் குறிப்பிட்ட ராஜேந்திர சாரங்கி, உலக வங்கியின் கட்டளைப்படி நீர் ஆதாரங்களைத் தனியார்மயமாக்கும் முதல் கட்டமாக, ஒரிசாவில் 'பாணி (தண்ணீர்) பஞ்சாயத்துக்கள்" கட்டப்பட்ட வரலாற்றையும், தண்ணீரைத் தனியார்மயமாக்க தமிழக அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகளையும் ஒப்பிட்டு விவரித்தார்.

 

'1995ஆம் ஆண்டு ஒரிசாவில், " "ஒரிசா தண்ணீர் ஒருங்கிணைப்புத் திட்டம்' உருவாக்கப்பட்டது. இதே திட்டம், அப்பொழுதே தமிழகத்திலும் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு 2,500 கோடி ரூபாய் கடனாகக் கொடுத்த உலக வங்கி, இதற்கு நிபந்தனையாக ஒரிசாவில் பாணி பஞ்சாயத்துக்களை உருவாக்க வேண்டும் எனக் கட்டளையிட்டது."

 

'நீர் நிலைகளைப் பராமரிப்பது; பாசனத்திற்கு நீரை விநியோகிப்பது; பாசன நீருக்கு கட்டணம் நிர்ணயித்து, அதை விவசாயிகளிடம் வசூலிப்பது ஆகிய பணிகள் பாணி பஞ்சாயத்து அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டன. இதை வேறு மாதிரியாகச் சொன்னால், அரசாங்கத்திடம் இருந்து வந்த பாசனத்துறை இழுத்து மூடப்பட்டு, அது கிராமப்புற பணக்கார விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட்டது;"

 

'நிலமற்ற கூலி விவசாயிகள், குத்தகை விவசாயிகள் இப்பாணி பஞ்சாயத்துக்களில் உறுப்பினராகச் சேர முடியாது என்ற விதியின் மூலம், பாசன நீரின் மீது அவர்களுக்கு இருந்துவந்த உரிமை மறுக்கப்பட்டு, பாசன நீர் பணக்கார விவசாயிகளின் தனிச் சொத்தாக்கப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரிசாவில் பாணி பஞ்சாயத்து சட்டம் இரண்டு கம்யூனிஸ்டு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேறியது."

 

'ஒரிசா மாநிலத்தில் 12,000 பாணி பஞ்சாயத்துக்கள் செயல்படுவதாக அம்மாநில அரசு கூறினாலும், அவையெல்லாம் வெறும் காகிதத்தில்தான் இருக்கின்றன. சமீபத்தில் கூட, 1996லேயே உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகக் கூறப்பட்ட 25 பாணி பஞ்சாயத்துக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஒட்டு மொத்தமாக பதவி விலகி விட்டனர். எனினும், இந்த பாணி பஞ்சாயத்துக்கள்தான் தண்ணீர் தனியார்மயமாக்கலின் முதல் அடி என்பதால், இந்தத் திட்டத்திற்கு உயிரூட்ட ஒரிசா அரசு பல வழிகளிலும் முயன்று வருகிறது."

 

'2002ஆம் ஆண்டு ஒரிசா வறட்சியால் பாதிக்கப்பட்டதைப் பயன்படுத்திக் கொண்டு நீர் இறைப்பு பாசனக் கழகத்தை மூடிய ஒரிசா அரசு, விவசாயிகளைப் பாணி பஞ்சாயத்துக்களை உருவாக்கிக் கொள்ள கட்டாயப்படுத்தியது. நீர் இறைப்புப் பாசனக் கழகம் மூடப்பட்டதால், 5 இலட்சம் ஹெக்டேர் விளைநிலங்களைச் சொந்தமாகக் கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன விவசாயிகள், விவசாயத்தில் இருந்தே பிடுங்கி எறியப்பட்டனர்."

 

'பாணி பஞ்சாயத்துக்களை உருவாக்காவிட்டால், விவசாயம், பாசனம், கிராமப்புற மேம்பாடு ஆகிய திட்டங்களுக்கு மைய அரசு தரும் நிதியுதவியை ஒரிசாவிற்குத் தராமல் நிறுத்தி விடுவோம் என மிரட்டினார், பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் அமைச்சராக இருந்த அர்ஜுன் ஷெட்டி."

 

'இந்த மிரட்டல்கள் ஒருபுறமிருக்க, பாணி பஞ்சாயத்துக்கள், தங்களின் அலுவலகத்தைக் கட்டிக் கொள்ள மாநில அரசு 50,000 ரூபாய் நிதியுதவி அளிக்கும்; பாணி பஞ்சாயத்துக்களில் சேரும் விவசாயிகளுக்கு, நெல்லின் ஆதார விலை கூட்டித் தரப்படும்; ஒவ்வொரு பாணி பஞ்சாயத்துக்கும் ஒரு டிராக்டர் இலவசமாகத் தரப்படும்; பாணி பஞ்சாயத்துக்கள் உரக் கடைகளைத் திறந்து கொள்ள உதவி வழங்கப்படும் எனப் பலவிதமான சலுகைகள் வீசி எறியப்பட்டன. இதன் மூலம் ஒரிசாவில் 600 பாணி பஞ்சாயத்துக்கள் உருவாக்கப்பட்டன. இதுதான் ஒரிசாவில் பாணி பஞ்சாயத்துகள் உருவாக்கப்பட்ட கதை" என ஒரிசாவின் அனுபவத்தை விவரித்த அவர், '1998இல் உலக வங்கியின் உதவியோடு இந்திய அரசு தயாரித்த இந்திய நீர்க் கொள்கை நாடெங்கிலும் அமலுக்கு வந்தால், தாமிரவருணி மட்டுமல்ல, கங்கை, காவிரி போன்ற ஜீவநதிகள், ஏரிகள், கண்மாய்கள் ஆகிய அனைத்து நீர்நிலைகளும் தனியார்மயமாகிவிடும்" என எச்சரித்தார்.

 

'இந்த இந்திய நீர் கொள்கை, தண்ணீரை வாங்குவதற்கும் 'விற்பதற்கும்" அடமானம் வைப்பதற்கும், வாடகைக்கு விடுவதற்கும் ஏற்றபடியான பண்டமாக மாற்ற வேண்டும் என்கிறது. உலக வங்கியால் இந்த கொள்கை அமலாக்கப்பட்ட சிலி நாட்டில், இப்பொழுது அந்நாட்டின் 70 சதவீத நீர் ஆதாரங்கள் 4 தனியார் நிறுவனங்களுக்கும், ஒரு தனிநபருக்கும் சொந்தமாகி விட்ட அபாயத்தை உதாரணமாக" எடுத்துக் கூறினார்.

 

'பாணி பஞ்சாயத்துக்களை உருவாக்குவது; பாசனத்துறையை இழுத்து மூடுவது; தண்ணீர் சேவை ஏஜென்சிகளை ஏற்படுத்துவது; தனியாரைப் பங்கெடுக்க வைப்பது; தண்ணீர் சந்தையை உருவாக்குவது - எனப் பச்சையாகவே தண்ணீரைத் தனியார்மயமாக்கும் இந்தத் திட்டத்தை இந்திய அரசு 'தண்ணீர்க் கொள்கை சீர்திருத்தம்" எனப் பூசி மெழுகுகிறது"

 

'நிலத்தடி நீர் ஆதாரங்களைப் பயன்படுத்துவது பற்றிக் கூறும் இக்கொள்கை, சென்னைக்கு வீராணம் ஏரியில் இருந்தும்; கிருஷ்ணாவில் இருந்தும் தண்ணீர் கொண்டு வருவதற்கு 200 கோடி ரூபாய் செலவாகிறது. இதற்குப் பதிலாக, சென்னைக்கு அடுத்துள்ள கிராமப்புறங்களில் உள்ள நீலத்தடி நீரை கொண்டு வந்தால், 20 கோடிதான் செலவாகும். இதற்கு, சென்னையைச் சுற்றியுள்ள கிராமப்புற விவசாயிகளை, நெற் பயிர் போட வேண்டாம் எனக் கட்டாயப்படுத்த வேண்டும் என ஆலோசனை கூறுகிறது."

 

'நகர்ப்புறக் குடிநீர் திட்டத்தைத் தனியார்மயமாக்க இக்கொள்கை முன்வைக்கும் ஆலோசனைகளுள் முக்கியமானவை 'நகராட்சி, மாநகராட்சிகளை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து, தனியார் முதலாளித்துவ நிறுவனங்கள் போல மாற்ற வேண்டும்; அவற்றுக்கு, சர்வதேச நிதி நிறுவனங்களிடம் இருந்து நேரடியாகக் கடன் வாங்கிக் கொள்ளும் சுதந்திரம் தரப்பட வேண்டும்' என்பதாகும். ஒரிசாவில் நகர்ப்புற குடிநீர் வழங்குவது 'கார்ப்பரெட்" நிறுவனங்கள் போல் மாற்றியமைக்கப்பட்ட பிறகு, கட்டணம் ஐந்து முறை உயர்த்தப்பட்டிருப்பதோடு, தற்பொழுது மாதாந்திர குடிநீர் கட்டணத்தை 2,000 ரூபாயாக உயர்த்த அரசு ஆலோசித்து வருகிறது" என தண்ணீர் தனியார்மயமாவதின் அபாய விளைவைச் சுட்டிக் காட்டினார்.

 

'கிராமப்புற மக்களுக்குக் குடிநீர் வழங்குவதில் கூட, தேவையுள்ளவர்களுக்கு மட்டுமே குடிநீர் வழங்க வேண்டும் என்றும்; குடிநீர் திட்டங்களில் எவ்வளவு முதலீடு செய்யப்படுகிறதோ, அம்முதலீடு இலாபத்துடன் திரும்பக் கிடைக்கும்படி தண்ணீர் கட்டணங்கள் உயர்த்தப்பட வேண்டும் என்றும் ஆலோசனைகளை முன் வைக்கிறது, இக்கொள்கை."

 

'தண்ணீர் கட்டணம் தாறுமாறாக உயர்த்தப்பட்டால், பணக்காரர்களும், கோக் போன்ற முதலாளித்துவ நிறுவனங்களும்தான் தண்ணீரை வாங்குவார்கள். எனவே, அவர்கள் 'தேவையுள்ளவர்கள்"; ஏழைகளால் வாங்க முடியாது; எனவே அவர்கள் தேவையற்றவர்கள்."

 

'தண்ணீர் என்பது வாழ்வின் ஆதாரம்; ஏழைகளுக்குத் தண்ணீர் வழங்குவதை மறுப்பதன் மூலம், தண்ணீர் மீதான அவர்களின் உரிமையை மறுப்பதன் மூலம், அவர்கள் வாழ்வதற்கான உரிமையையே தட்டிப் பறிக்கிறது, இந்தக் கொள்கை"

 

'உலக வங்கியின் திட்டங்கள்தான் அரசின் சட்டங்களாக மாறுகின்றன. எனவே, அந்தத் திட்டங்களின் பின்னே மறைந்துள்ள சதி வலைப் பின்னலை மக்கள் முன் விரிவாக நாம் அம்பலப்படுத்த வேண்டும்" எனச் சுட்டிக் காட்டிய அவர், 'இந்த மறுகாலனி ஆதிக்கத்துக்கு எதிராகப் போராட நாம் அனைத்துத் தரப்பு உழைக்கும் மக்களையும் அணிதிரட்ட வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டார்.