பாசிசப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட மகேஸ்வரியை வைத்து, தமது துரோகத்தையும் நியாயப்படுத்த முனைகின்றது புலியெதிர்ப்பு "ஜனநாயகம்". புலியெதிர்ப்பையே தனது அரசியலாக செய்பவர்களில் ஒருவரான ராகவன், 'சொல்லுங்கள் மகேஸ்வரி துரோகியென்று!" என்று கேட்டு, எழுதுகின்றார். இதன் மூலம் தமது துரோகத்துக்கு, நியாயம் கற்பிக்க முனைகின்றனர்.

  

'சொல்லுங்கள் மகேஸ்வரி துரோகியென்று!" என்ற தர்க்கம் மிகக் கவனமாக சில விடையத்தை விட்டுவிடுகின்றது. மகேஸ்வரி ஈ.பி.டி.பி யுடன் இருந்ததையும் மிகக் கவனமாக தவிர்க்கின்றது. அதை நியாயப்படுத்த 'ஏதோ தனக்கு தெரிந்த வழியில் எவர் காலில் விழுந்தெனினும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்தார்" என்கின்றது. மக்களின் எதிரி புலிகள் மட்டுமல்ல, ஈ.பி.டி.பியும், அரசும் கூடத்தான். எதிரியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, எதிரியுடன் சேர்ந்து எப்படி உதவமுடியும். அதுவோ துரோகம்.

 

துரோகம் என்பதால், புலிகள் வழங்கும் மரண தண்டனையை சரியென்று நாம் கூறமுற்படவில்லை. புலிகளே மக்களுக்கு எதிராக இயங்கும் போது, அவர்களே துரோகிகளாகத் தான் உள்ளனர். புலிகளின் படுகொலை அரசியல், அதன் மக்கள் விரோத அரசியலில் இருந்து தான் முகிழ்கின்றது. மகேஸ்வரியும் சரி, புலியும் சரி, மக்களுக்கு எதிராக இயங்குகின்ற, ஒரு புள்ளியில் சந்திக்கின்றனர்.

 

கணிதத்தில் இரண்டு எதிர்மறைகள் நேராவது போல், இரண்டு மக்கள் விரோதிகள் தம்மைத் தாம் நியாயப்படுத்தி தம்மை நேராக்க முனைகின்றனர்.

 

மக்களை இட்டு அக்கறையற்ற புலியெதிர்ப்பு 'ஜனநாயக" அரசியலை நியாயப்படுத்த, இங்கும் இவர்களுக்கு பாசிசப் புலிகளின் அரசியல் நடத்தைகள் தான் உதவுகின்றது. வேடிக்கை என்னவென்றால் மகேஸ்வரியின் அரசியலோ, தங்கள் சொந்த அரசியலோ, படுகொலையின் பின்னுள்ள புலியின் மக்கள் விரோத அரசியலை கேள்வி கேட்க உதவவில்லை. அவற்றில் அவர்களுக்கு அக்கறையுமில்லை.

 

இப்படி தம்மை துரோகியல்ல என்று நியாயப்படுத்த, புலிகளின் பாசிச நடத்தைகள் தான், இங்கு அவர்களுக்கு உதவுகின்றது. எந்தவிதமான மக்கள் அரசியலுமில்லை.

 

புலிகளின் நடத்தைகளா, தாம் 'துரோகியல்ல" என்று கூறும் ஒரு சமூக அளவுகோல்?

 

புலிகளின் நடத்தையைக் கொண்டு, தியாகத்தையும் துரோகத்தையும் யாரும் அரசியல் ரீதியாக வரையறுக்க முடியாது. புலிகள் ஒரு பாசிச மாபியா இயக்கம். அது தனது இருப்புக்கேற்ற வகையில், தனது சொந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது. இதன் பின் எந்த மக்கள் நலன் சார்ந்த அரசியலும் கிடையாது.

 

புலிகள் துரோகம் என்பதும், தியாகம் என்பதும், மக்களின் அடிப்படையான சமூக பொருளாதார நலன்களில் இருந்தல்ல. மாறாக சொந்த நடத்தைக்கு ஏற்ப அதைச் சொல்லுகின்றது. அதை செய்கின்றது. இதை வைத்துக்கொண்டு, புலியெதிர்ப்பு 'ஜனநாயக" வாதிகள் தமது துரோகத்தை 'ஜனநாயகமாக" கூறி, பாசிசத்தில் மிதக்கின்றனர்.

 

மக்களை சார்ந்திராத, சார்ந்து நிற்காத, மக்களின் சமூக பொருளாதார அரசியல் பிரச்சனையூடாக மக்களை அணுகாத, எந்த நடவடிக்கையும், மக்களுக்கு எதிரான துரோகம் தான். இப்படி மக்களின் எதிரிகளுடன் கூடி செய்வது, மக்கள் விரோத அரசியல் தான். இது துரோகம் தாண்டா.

 

மக்களின் எதிரிகளுடன் கூடுகின்ற துரோகிகள், மக்களை நோக்கி எலும்புகளை எறிவதால் அது தியாகமாகிவிடாது. எலும்பை கவ்விக்கொண்டு குலைப்பதா, மக்கள் சேவை? இதற்கு வெளியில் மக்களுக்காக போராட முடியாதோ!

 

மக்களின் எதிரிகள் எப்போதும் துப்பாக்கி முனையில் மக்களை அடக்கியாள்வதில்லை. மாறாக அறிவிலும், அரசியல் கோசங்களாலும், சமூக சேவைகள் ஊடாகவும் கூட, மக்களை நாயிலும் கீழாக ஒடுக்குகின்றனர்.

 

இன்று உலகளவிலான தன்னார்வ நிறுவனங்கள் கூட, சமூக சேவை பெயரில் தான் மனித இனத்தை சூறையாடும் நோக்குடன் இயக்கப்படுகின்றது. இதற்கு பணம் கொடுப்பவன் வேறு யாருமல்ல, வெளிப்டையான அடக்குமுறையை ஏவும் அதே ஏகாதிபத்தியங்கள் தான். இப்படி தன்னார்வ நிறுவனங்களின் நோக்கம் மிகத் தெளிவாக, மக்களுக்கு எதிராகவே உள்ளது. இதை இலகுவாகப் புரிந்துகொள்ள, ஒரு அமெரிக்கப் பொருளாதார அடியாளின் வாக்குமூலம், சுயசரிதை வடிவில் தமிழிலும் வந்துள்ளது. அது இன்றைய எரியும் உலகப் பிரச்சனைகளில், எப்படி எந்த வகையில் தலையிடப்பட்டது என்பதை, ஆதாரமாக அம்பலமாக்குகின்றது. சமூக சேவைகளின் பின், இப்படி உள்நோக்கம் கொண்ட, மனித முகங்கள் உண்டு.

 

பல வேஷத்தில் துரோகிகள்

 

மக்களுக்கு எதிரான துரோகிகள் பலவேஷத்தில் உள்ளனர். புலியெதிர்ப்பு வேஷத்திலோ, இது புளுத்துக் கிடக்கின்றது. புலியெதிர்ப்பில் தன்னை 'முற்போக்குவாதியாக" 'ஜனநாயகவாதியாக" 'பெண்ணியல்வாதியாக", 'தலித்தியவாதியாக" காட்டும், எத்தனை எத்தனை வேஷங்கள்.

 

இதை பேசிக்கொள்ளும் இவர்களும், இவர்களின் செயல்பாடுகளும் மக்களைச் சார்ந்து நிற்பதில்லை. மக்களின் எதிரிகள் யாரோ, அவர்களைச் சார்ந்து இவர்கள் நிற்கின்றனர். மக்களின் எதிரி போடும் எலும்பைக் கொண்டு, சமூக சேவை செய்யப்போவதாக பசப்புகின்றனர்.

 

இதைத் தவிர வேறு அரசியல் எதுவும், இவர்களிடம் கிடையாது. மக்களின் எதிரிகளுடன் கூடி நிற்பவர்கள் துரோகிகள் அல்லாமல் தியாகிகளா!

 

எதிரியுடன் கூடி நிற்பவன் தியாகியா?

 

துரோகிகள் தம்மை தியாகிகள் என்கின்றனர். ஏதோ ஒரு காரணத்தைக் காட்டிக் கொண்டு, மக்களின் எதிரிகளின் பின்னால் (புலி மற்றும் அரசு) நிற்பவன், தன் செயலை தியாகச் செயல் என்கின்றான். அரசியல் வேடிக்கை தான். இப்படி புலியெதிர்ப்பு 'ஜனநாயக" கோஸ்டி மகேஸ்வரியை, தியாகி என்கின்றது. அதற்கு அது கையாண்ட அளவு கோல், புலிகள் அவரைக் கொன்றதால் அவர் தியாகி. விபச்சாரத்தையே மனித ஒழுக்கமாக காட்டக் கூடியவர்கள் தான், இவர்கள்.

 

மகேஸ்வரி முந்தைய செயல்பாடுகளை காட்டி புகழ்வது, தர்க்கிப்பது அபத்தம். அப்படிப் பார்த்தால், இந்த ராகவன் பாசிசப் புலியின் கொலைகளுக்கு உடந்தையானவர் என்றல்லவா தூற்றி விவாதிக்க வேண்டும். இப்படி தூற்றுவதும், புகழ்வதும் சந்தர்ப்பவாத அரசியலாகின்றது.

 

புலிகள் ஏன் கொன்றனர். அதன் சரி பிழைக்கு அப்பால், ஈ.பி.டி.பியில் இருந்ததால் தான், அவர் கொல்லப்பட்டார். புலியெதிர்ப்பு சந்தர்ப்பவாதிகள் பட்டியலிட்ட விடையங்களுக்காகவல்ல. ஈ.பி.டி.பி யுடன் செயல்பட்டது சரியென்றால், அதை வைத்து 'சொல்லுங்கள் மகேஸ்வரி துரோகியென்று!" விவாதிக்க வேண்டியது தானே. அதைவிட்டு விட்டு மற்றையவற்றை தூக்கி போடுவதே, அரசியல் சதி தான். இங்கு திட்டமிட்டு மோசடி செய்வது புலியெதிர்ப்பு 'ஜனநாயக' அரசியலாகின்றது.

 

மகேஸ்வரி மக்கள் சேவையை, மக்களுக்காக செய்ய வேண்டும் என்றால், எதற்காக மக்களின் எதிரிகளுடன் கூடி நிற்க வேண்டும். உண்மையான மக்கள் சேவை எதிரியில்லாத தளத்தில், எதிரிக்கு எதிராக மலை போல் தேங்கி கிடக்கின்றது. இப்படி இருக்க, எதிரியுடன் சேர்ந்து செய்தது எதை?

 

மக்களின் எதிரிகள் தான், மக்களின் அவலத்துக்கு காரணம். இப்படி இருக்க எதிரியுடன் கூடித் திரிகின்றவர்கள், எதிரியின் கைக்கூலிகள் தானே. இப்படி மனித அவலத்தை வைத்து, எதிரியுடன் அரசியல் விபச்சாரம் செய்கின்றனர். மக்களின் எதிரிகள் ஏற்படுத்தும் மனித அவலத்தை, எதிரிகளுடன் கூடி நின்று போக்குவதாக கூறுவதே அபத்தம். அதை தியாகம் என்பது அதை விட அபத்தம். இதுவோ துரோகம், துரோகம் தான்டா.

 

துரோகத்துக்கு வழங்கிய தண்டனையா?

இல்லை. மாறாக மக்களை அடக்கியொடுக்கும் பாசிசப் புலிகள், தமது சொந்தத் துரோகத்தை பாதுகாக்க வழங்கும் தண்டனைகள் தான் இவை. மக்களின் முதுகில் குத்திய புலித்துரோகிகள், வாரி வழங்கும் தண்டனைகள் மனித குலத்துக்கே எதிரானது. புலியின் அரசியல் பினனால், மக்களுக்கான எந்த அரசியலும் கிடையாது. புலியெதிர்ப்பு 'ஜனநாயகம்" பேசி அரசுக்கு பின்னால் நிற்பது போல் தான், புலிக்கு பின்னால் நிற்பதும். அரசியல் ரீதியாக இரண்டும் ஒன்று தான். இரண்டும் மக்களுக்கு எதிரானது.

 

புலிகள் தமது பாசிச மாபியா அரசியலைக் கையாள்வதால், அது மொத்த மக்களுக்கும் எதிராக மாறிவிட்டது. இதுவோ புலித் தேசியமாகிவிட்டது. இதனால் மக்களை அடக்கியொடுக்கி நிற்கின்றனர். தொடர்ச்சியாகவே புலிகளின் அரசியல், தமக்கு எதிராக எதிரிகளை உருவாக்குகின்றது.

 

மக்களோ தப்பிப் பிழைக்க முனைகின்றனர். புலிப் பிரதேசத்தில் வாழ முடியாது தப்பி ஒடுகின்றனர். பொருளாதார ரீதியாக, புதிய பிரதேசத்தில் தாக்குப் பிடிக்க முடியாது, பலர் சிதைகின்றனர். இங்கு தான் அரசும், அரச கூலிப்படைகளும் ஆள் பிடிக்கின்றனர்.

 

இப்படிப்பட்டவர்களை நாம் துரோகி என்று கருதுவது கிடையாது. சந்தர்ப்பமும், சூழலும் இதைத் தூண்டுகின்றது. இவர்கள் சரியான வழிக்கு வர, சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டியது அவசியமானது. இது அடிமட்டத்தில் உள்ளவர்களின் நிலை. இது தன்னார்வக் குழுக்களில் உள்ளவர்களுக்கும் பொருந்தும். புலியின் அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கும் பொருந்தும்.

 

அப்படியாயின் யாருக்கு பொருந்தாது? புலித் தலைவர்களுக்கு பொருந்தாது. புலியெதிர்ப்புத் தலைவர்களுக்குப் பொருந்தாது. அரசியல் ரீதியாக வழிகாட்டுபவர்களுக்கு பொருந்தாது. இவர்கள் திட்டமிட்டே மக்களுக்கு எதிராக செயல்படுபவர்கள்.

 

இப்படி புலியிலும் சரி, புலியல்லாத தளத்திலும் சரி, தன்னார்வக் குழுவிலும் சரி, இது பொதுவானதே. அவர்களின் ஒவ்வொரு மக்கள் விரோத செயலும், மக்களுக்கு எதிரானது. மக்களுக்கு எதிரானது என்பதால், அது துரோகத்தை அடிப்படையாகக் கொண்டது.

 

மக்களுக்கு எதிரான அரசியலைக் கொண்டு, அவர்கள் எங்கு எந்த அணியில் நின்றாலும், அவர்கள் எதைச் செய்தாலும் அது மக்களுக்கு எதிரான நோக்கில் செய்யப்படுகின்றது. அது துரோகத்தன்மை வாய்ந்தது. அது நன்மையாக இருந்தாலும் சரி, தீமையாக இருந்தாலும் சரி,

 

புலிகள் சில எலும்புத் துண்டுகளைப் போட்டு, சில மக்கள் நல சேவைகளை செய்கின்றனர். அதனால் அது மக்கள் போராட்டமாகிவிடுமா? இல்லை. அதுபோல் தான், பேரினவாத மக்கள் விரோத அரசின் பின் நக்குகின்றவர்களின் சேவையும் கூட.

 

அரசியல் ரீதியாக மக்கள் நலனை அடிப்படையாக கொண்டு, மக்களைச் சார்ந்து நிற்காத அனைத்தும் மக்களுக்கு எதிரானது. அதுவெல்லாம் மக்களுக்கு எதிரான துரோகம் தாண்டா?

 

பி.இரயாகரன்
16.05.2008