11_2005.jpgநாடு முழுவதும் ரேசன் கடைகளை நம்பி வாழும் ஏழை மக்கள் புழுத்த அரிசிக்கும் மண்ணெண்ணெய்க்கும் அடிதடியில் சாலை மறியலில் இறங்கித்தான் தமது ஒதுக்கீட்டைப் பெற வேண்டிய அவலம் தொடர்கிறது. கிராமப்புறங்களில் உள்ள ரேசன் கடைகள் பகுதி நேரமாக இயங்குவதோடு, ஒரு விற்பனையாளருக்கு 5,6 ஊர்களில் உள்ள கடைகளுக்குப் பொறுப்பும் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் பல ஊர்களில் ரேசன் கடைகள் மூடிக் கிடப்பதும் திடீரென திறக்கப்படுவதும், இதனால் பெரும்பான்மையானோருக்கு அரிசியும்

மண்ணெண்ணெயும் கிடைக்காமல் தவிப்பதும் தொடர்கின்றன. புதிய ரேசன் கார்டுகளுக்கு விண்ணப்பம் கொடுத்தும் பலருக்கு இன்னமும் கார்டுகள் கிடைக்கவில்லை. கிடைத்த கார்டுகளிலும் பெயர், முகவரிகளில் தவறுகளும் குழப்பங்களும் நீடிக்கின்றன. ரேசன் கார்டுகளுக்கு 20 கிலோ அரிசி வழங்கப்படாமல், ஏழைகளின் வயிற்றிலடித்து உணவுப் பொருட்கள் பதுக்கப்பட்டு கள்ளச் சந்தையில் விற்கப்படுகின்றன. ஓட்டுக் கட்சி குண்டர்களும் அதிகாரிகளும் லஞ்சத்தில் மஞ்சள் குளிக்கின்றனர்.

 

""ரேசன் கடைகளை இழுத்து மூடு!'' என்று உத்தரவிட்டுள்ளது உலக வங்கி. அதன்படி விசுவாசமாகச் செயல்படும் ஆட்சியாளர்கள், ரேசன் கடைகள் மூலம் விநியோகித்து வந்த 11 வகையான பொருட்களை மூன்றாகக் குறைத்து விட்டனர். உணவு மானியங்கள் படிப்படியாகக் குறைக்கப்பட்டுள்ளதோடு, வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்கள் என்று சொல்லி பல ஏழைகளுக்கு ரேசன் பொருட்கள் மறுக்கப்படுகின்றன. மறுகாலனியத் தாக்குதல் ஏழைகளின் வயிற்றிலடித்து மரணக் குழியில் தள்ளி வருகிறது.

 

உலக வங்கி உத்தரவுக்கு அடிபணிந்து ரேசன் கடைகளை இழுத்து மூடும் ஆட்சியாளர்களின் சதிகளை எதிர்த்தும், அனைத்து நியாய விலைக் கடைகளிலும் முறையாக அரிசி, மண்ணெண்ணெய் வழங்கக் கோரியும், ரேசன் கார்டுகளையும் உணவு தானியங்களையும் பதுக்கி கள்ளச் சந்தையில் விற்கும் அதிகாரிகள் ஓட்டுக் கட்சி குண்டர்களைக் கைது செய்து சிறையிலடைக்கக் கோரியும் விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக, இப்பகுதியில் இயங்கும் பு.மா.இ.மு; வி.வி.மு. ஆகிய அமைப்புகள் இணைந்து 17.10.05 அன்று எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தின. தோழர் அம்பேத்கர் (வி.வி.மு.) தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டம், உழைக்கும் மக்களிடையே புதிய நம்பிக்கையை விதைத்து, போராட அறைகூவுவதாக அமைந்தது.

 

தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி; விவசாயிகள் விடுதலை முன்னணி; விழுப்புரம் மாவட்டம்.