04_2006.gif

இந்த ஆண்டிற்கான மைய அரசின் வரவுசெலவு அறிக்கையை, ""உண்மையான இந்தியாவிற்கான பட்ஜெட்'' எனக் குறிப்பிட்டுள்ளார், நிதியமைச்சர் ப.சிதம்பரம். தாராளமயத்தை மிகத் தீவிரமாக ஆதரித்து எழுதிவரும் ""இந்தியாடுடே'' வார இதழுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில், ""நகர்ப்புறத்தைச் சேர்ந்த ஆங்கிலம் பேசும் மேல்தட்டு நடுத்தர வர்க்கம் மட்டும் இந்தியா அல்ல... இந்த பட்ஜெட் விவசாயிகளின் பிரச்சினைகளில் அக்கறை காட்டுகிறது'' எனக் கூறியிருக்கிறார்.

 

            விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் வழங்கும் கடனை 1,75,000 கோடி ரூபாயாக அதிகரித்திருப்பது; விவசாயக் கடனுக்கான வட்டியைக் குறைத்திருப்பது; கிராமப்புற மேம்பாட்டுக்காக கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பாரத் நிர்மாண் திட்டத்துக்கு 54% கூடுதலாக நிதி ஒதுக்கியிருப்பது  என்ற இந்த அம்சங்களைக் காட்டித்தான், 200607ஆம் ஆண்டிற்கான வரவு  செலவு அறிக்கையை, ""மக்களுக்கான பட்ஜெட்'' என ஆளும் கட்சிக் கூட்டணி போற்றுகிறது. இந்தக் கவர்ச்சித் திரையைக் கிழித்துப் பார்த்தால்தான், இது, மக்களை முட்டாளாக்கும் பட்ஜெட் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

            காங்கிரசு தலைமையில் அமைந்துள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, விவசாயிகளின் தற்கொலைச் சாவுகளைக் காட்டித்தான் ஆட்சியைப் பிடித்தது. போலி கம்யூனிஸ்டுகள் தாங்கிப் பிடிக்கும் இந்த ""முற்போக்கு'' ஆட்சியிலும், விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் நின்றுவிடவில்லை. குறிப்பாக, காங்கிரசு கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் மட்டும் கடந்த ஓராண்டிற்குள் 300க்கும் மேற்பட்ட பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு விட்டனர்.

            இந்த நிலையில், பன்னாட்டு நிறுவனங்களுக்கு மிகவும் நெருக்கமான விவசாய விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையில், விவசாயிகளின் பிரச்சினையை ஆராய குழுவொன்றை அமைத்தது, மைய அரசு. இந்தியாவெங்குமே விவசாயிகளின் வாழ்க்கையை நாசப்படுத்தி வருவது தாராளமயம்தான் என்பது கைப் புண்ணைப் போலத் தெரிந்திருந்தும், சுவாமிநாதன் குழு தாராளமயத்தை நிறுத்துமாறு பரிந்துரைக்கவில்லை. மாறாக, ""விவசாயிகளுக்குக் குறைந்த வட்டியில் வங்கிக் கடன் கொடுப்பது; பயிர் காப்பீடு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது; விவசாய விளைபொருட்களின் விலை சந்தையில் வீழ்ந்தால், அதனை ஈடுகட்ட நிதி ஒதுக்குவது'' எனச் சில சில்லறை சீர்திருத்தங்களைச் செய்யுமாறு அரசுக்குப் பரிந்துரைத்தது.

            விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்திருப்பதாகக் கூறும் ப.சிதம்பரம், இந்த அற்ப சலுகைகளைக் கூட பட்ஜெட்டில் முழுமையாக அமலாக்கவில்லை. சுவாமிநாதன் குழு விவசாயிகளுக்கு 4 சதவீத வட்டிக்குக் கடன் கொடுக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்திருந்தது. ஆனால், ப.சிதம்பரமோ 7 சதவீத வட்டியை விவசாயிகளின் தலையில் கட்டிவிட்டார்.

            விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்குவதற்கு, 200405 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 1,25,309 கோடி ரூபாயும்; 200506 பட்ஜெட்டில் 1,41,500 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டன. இந்த ஒதுக்கீடு, கடந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனை விவசாயிகளைத் தற்கொலைச் சாவில் இருந்து தடுத்திருக்கிறது? எத்தனை விவசாயிகளை ஓட்டாண்டியாகி விடாமல் தடுத்திருக்கிறது?

 

            ஏற்கெனவே வாங்கிய கடனை கட்டாமல், புதிதாகக் கடன் பெற முடியாது என்ற நிபந்தனை இருக்கும் பொழுது, ""குறைந்த வட்டிக்குக் கடன்'' என்ற ப.சிதம்பரத்தின் திட்டத்தை காகிதத்தில் எழுதி நக்கிக் கொள்ள வேண்டியதுதான் எனச் சாதாரண விவசாயிகளே அம்பலப்படுத்துகிறார்கள். பெரும்பாலான ஏழை, நடுத்தர விவசாயிகளுக்கு இந்தத் திட்டத்தால் பலன் கிடைக்காது என்றால், இந்த 1,75,000 கோடி கடன் திட்டத்தால் ஆதாயம் அடையப் போகும் விவசாயிகள் யார்?

 

             ஏற்றுமதி பயிர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பணக்கார விவசாயிகள்; ஒப்பந்த விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பெப்சி, ஐ.டி.சி. போன்ற முதலாளித்துவ நிறுவனங்கள்; விவசாய உபதொழில் என்ற பெயரில் இறால் பண்ணைகளையும் உணவு பதப்படுத்தும் தொழில்களையும் நடத்தும் முதலாளிகள்; காபி, தேயிலை தோட்ட நிறுவனங்களை நடத்தும் டாடா, இந்துஸ்தான் லீவர் போன்ற நிறுவனங்கள்; கிராமப்புறங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்களை நடத்தும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்  இந்தக் கும்பல்தான் விவசாயிகள் என்ற போர்வையில், இந்தத் திட்டத்தை ஏப்பம்விடக் காத்திருக்கின்றன.

            கிராமப்புற மேம்பாட்டுக்காக இந்த பட்ஜெட்டில், கடந்த பட்ஜெட்டைவிட 43.2 சதவீதம் அதிகம் நிதி ஒதுக்கியிருப்பதாக ப.சிதம்பரம் தம்பட்டம் அடிப்பது ஒரு புள்ளி விவர மோசடி. குறிப்பாக, 200 மாவட்டங்களில் மட்டும் செயல்படுத்தப்படும் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு 10,170 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்காக, கடந்த பட்ஜெட்டில் 4,050 கோடி ரூபாய் செலவில் அமல்படுத்தப்பட்ட வேலைக்கு உணவு திட்டம் தற்பொழுது முற்றிலும் கைகழுவப்பட்டு விட்டது. சம்பூர்ண கிராமப்புற வேலை திட்டத்திற்கு இந்த பட்ஜெட்டில் கடந்த பட்ஜெட்டை விட 4,950 கோடி ரூபாய் குறைவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

            கிராமப்புறங்களில் விவசாயம் நொடித்துப் போய், வேலையில்லாமல் விவசாயிகள் அல்லாடும் வேளையில், கிராமப்புற வேலை வாய்ப்புக்காக ஒதுக்கப்படும் மொத்த நிதியில் 9,000 கோடி ரூபாயை வெட்டியிருக்கிறார், ப.சிதம்பரம். இந்தியாவெங்கும் கிராமப்புறத்தைச் சேர்ந்த ஏழைகளும், பழங்குடியின மக்களும் அரைப்பட்டினி நிலையில் வாழ்க்கையை ஓட்டும் பொழுது, ரேசன் கடைகளின் மூலம் வழங்கப்படும் உணவுப் பொருட்களுக்குக் கொடுக்கப்படும் மானியத்தில் 2,000 கோடி ரூபாயை வெட்டியிருக்கிறார்.

            அதேசமயம், புளித்த ஏப்பக்காரர்களான மேட்டுக்குடி கும்பல் வாங்கி உண்ணும் ஐஸ்கிரீம், குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களுக்கு கலால் வரி குறைக்கப்பட்டுள்ளது.

            உரத்திற்கு வழங்கப்படும் மானியம் இந்த பட்ஜெட்டில் 1,017 கோடி ரூபாயில் இருந்து 985 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு உரத்தின் விலை எகிறிவிடும். அதேபொழுதில், சிறிய இரக கார்களின் மீது விதிக்கப்படும் கலால் வரி பட்ஜெட்டில் குறைக்கப்பட்டிருப்பதால் மாருதி காரின் விலை 16,000 ரூபாயும்; ஹுண்டாய் காரின் விலை 23,000 ரூபாயும் குறையும்.

            நெல், கோதுமை, கரும்பிற்கு அரசாங்கம் தரும் ஆதார விலையைக் கூட்டித் தர வேண்டும் என விவசாயிகள் கோருகிறார்கள். இதற்குச் சம்மதிக்காத ப.சிதம்பரம், இந்திய விவசாயிகளுக்கு கோதுமைக்குத் தரும் ஆதார விலையை விட, ஒரு டன்னுக்கு முன்னூறு ரூபாய் கூடுதலாகக் கொடுத்து, ஆஸ்திரேலியாவில் இருந்து 5 இலட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்திருக்கிறார். மேலும், உணவு மானியத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவே, இந்த ஆண்டு 40 இலட்சம் டன் கோதுமை குறைவாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

            இந்த பட்ஜெட்டில் வெறும் 6,000 கோடி ரூபாய் அளவிற்குத்தான் புதிய வரிகள் விதிக்கப்பட்டிருப்பதாகப் பீற்றிக் கொள்கிறார், ப.சிதம்பரம். உண்மையில், நடுத்தர வர்க்கம் உள்ளிட்டு பெரும்பாலான உழைக்கும் மக்களின் மீது அளவுக்கு அதிகமான வரிச்சுமையை ஏற்றி வைத்துள்ளது இந்த பட்ஜெட். குறிப்பாக, சேவை வரியை 10 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அதிகரித்திருப்பதன் மூலமும்; சேவை வரி விதிக்கப்படும் இனங்களின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதன் மூலமும் வரிச்சுமையை மக்களின் மீது ஏற்றி வைத்துள்ளார், ப.சிதம்பரம். கடந்த ஆண்டு சேவை வரியின் மூலம் 23,000 கோடி ரூபாய் வசூலித்த மைய அரசு, இந்த பட்ஜெட்டில் 34,500 கோடி ரூபாய் வசூலிக்கத் திட்டம் போட்டுள்ளது.

            இதற்கு நேர்மாறாக, தரகு முதலாளிகளுக்கு வழக்கம் போலவே வரிச் சலுகைகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. முதலாளித்துவ நிறுவனங்களின் வருமானத்தின் மீது விதிக்கப்படும் வரி 35 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. பங்கு பரிவர்த்தனையின் மீது வெறும் 10 சதவீத அளவிற்கு மூலதன இலாப வரி விதித்தாலே, அரசுக்கு ஆண்டொன்றுக்கு 7,800 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். பங்குச் சந்தையில் நுழைந்துள்ள அந்நிய நிதி முதலீட்டு நிறுவனங்களின் கோபத்தைச் சம்பாதித்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே, இந்த வரி விதிப்பை கருத்தளவில் கூட ப.சிதம்பரம் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். உலக வர்த்தகக் கழகத்தின் கட்டளைக்கு ஏற்ப, அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது விதிக்கப்படும் சுங்கவரி, 15 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

            தரகு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் மைய அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி பாக்கி ஏறத்தாழ ஒரு இலட்சம் கோடி ரூபாயைத் தொட்டுவிட்டது. இதில் வெறும் 10,000 கோடி ரூபாயை இந்த நிதியாண்டில் வசூலித்தால் போதும் என்று வரி ஏய்ப்பு பேர்வழிகளுக்குச் சலுகை காட்டப்பட்டுள்ளது.

            தாராள இறக்குமதி, பன்னாட்டு நிறுவனங்களின் போட்டியில் இருந்து சிறு தொழில்துறையைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, சிறு தொழில் துறைக்காக ஒதுக்கப்பட்டிருந்த 184 பொருட்களை இனி தரகு முதலாளிகளும் கூடத் தயாரிக்கலாம் என்ற சலுகை வழங்கப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகள் மூலம் விற்கப்படும் அரசாங்க கடன் பத்திரங்களில் அந்நிய நிதி நிறுவனங்கள் முதலீடு செய்யவும்; நிலக்கரி சுரங்கத் தொழிலைத் தனியார்மயமாக்கும் முடிவுகளும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.

              பட்ஜெட் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வு அறிக்கையில், ""நெல், கோதுமை, பருத்தி போன்ற விவசாய விளைபொருட்களுக்கு அரசு தரும் ஆதார விலையையும், அரசாங்கக் கொள்முதலையும் கைவிடுவது; சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய்க்குக் கொடுக்கப்படும் மானியத்தை நிறுத்துவது; ஓய்வூதிய நிதியைத் தனியார்மயப்படுத்துவது'' உள்ளிட்டுப் பல தனியார்மய நடவடிக்கைகளை விரைந்து எடுக்கப் போவதாக மைய அரசு உறுதியளித்திருக்கிறது.

            அதாவது, பட்ஜெட் வெறும் கண்துடைப்பு நடவடிக்கை என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் இருக்க முடியாது. ஆனால் "மார்க்சிஸ்டு'களோ, சமூக நலத்திட்டங்களுக்கு பட்ஜெட்டில் கூடுதலாக நிதி ஒதுக்காமல் இருப்பதுதான் பிரச்சினை எனப் புலம்பி, உண்மையை மூடி மறைக்கிறார்கள். ஒருபுறம் தாராளமய  தனியார்மய நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திக் கொண்டு, இன்னொருபுறம் சமூகநலத் திட்டங்களுக்குக் கூடுதலாக நிதி ஒதுக்கிவிட்டால் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்பதைவிட மோசடித்தனம் வேறெதுவும் இருக்க முடியாது.

            தரகு முதலாளிகளோ இன்னும் ஒருபடி மேலே போய், பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் சமூக நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் தனியாரையும் அனுமதிக்க வேண்டும் எனக் கோருகிறார்கள். அதாவது, அரசாங்கத்தின் பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தையும் தனியார்மயமாக்கு என்பதுதான் இதன் பொருள். இதற்கு "மார்க்சிஸ்டு'களின் பதில் என்னவாக இருக்கும்? ""ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குறைந்தபட்ச பொது வேலைதிட்டத்தில் இக்கோரிக்கையை சேர்த்துவிட்டால் எங்களுக்கு ஆட்சேபணையில்லை'' என்பதாகத்தான் இருக்கும்!

மு ரஹீம்