07_2006.jpg

நாட்டை மீண்டும் காலனியாக்குவதில் போலி கம்யூனிஸ்டுகளின் ஆதரவோடு நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது, ஐக்கிய முற்போக்கு ஏலக் கம்பெனி. சில்லறை வியாபாரத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்குத் தாராள அனுமதி, சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் தம் விருப்பம் போல் சட்டங்கள் விதிகளை வகுத்துக் கொண்டு "கும்பினியாட்சி' நடத்தத் தாராள அனுமதி,

 இலாபமீட்டும் விமான நிலையங்கள் தனியார்மயமாக்கம், மரபீணி மாற்றம் செய்யப்பட்ட உணவு தானியங்களைச் சோதனை முறையில் இந்தியாவில் பயிரிடப் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு அனுமதி என அடுத்தடுத்து உலக வர்த்தகக் கழகத்தின் காலனியாட்சிக்குத் தரகர்களாகச் செயல்பட்டு வரும் காங்கிரசு கூட்டணி. இப்போது இலாபத்தில் இயங்கிவரும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்.எல்.சி.) மற்றும் தேசிய அலுமினிய நிறுவனம் (நால்கோ) ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் 10 சதவீதப் பங்குகளைத் தனியாருக்குத் தாரைவார்க்க முடிவு செய்துள்ளது.

 

இதுதவிர, பெட்ரோல் டீசல் விலையேற்றத்தின் மூலம் மிகப் பெரிய பொருளாதார தாக்குதலை இக்கூட்டணி அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதன் விளைவாக சரக்குக் கட்டணங்கள் உயர்ந்து, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளன. அதைத் தொடர்ந்து பணவீக்கம் யானைக்காலாக வீங்கிக் கொண்டே போகிறது. விவசாயம் நாசமாக்கப்பட்டு அரசு கொள்முதலும் நிறுத்தப்பட்டுள்ளதால் சேமிப்புக்கான உணவு தானியப் பற்றாக்குறை நீடிக்கிறது. இதைக் காட்டி, தட்டுப்பாட்டையும் விலையேற்றத்தையும் கட்டுப்படுத்துவதாகக் கூறிக் கொண்டு அரிசி, கோதுமை, சர்க்கரை ஆகியவற்றை தனியார் முதலாளிகள் இறக்குமதி செய்து கொள்ள தாராள அனுமதி அளித்துள்ளதோடு, இதற்குச் சுங்கவரி விலக்கும் அளித்துள்ளது, மைய அரசு.

 

இருப்பினும், ""நாட்டை வல்லரசாக்கும் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு இடதுசாரிகள் முட்டுக்கட்டை போட்டு வருவது வறட்டுத்தனமானது; 15 ஆண்டுகளாகியும் தனியார்மயக் கொள்கையை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை; மன்மோகன் சிங்குக்கு மார்க்சிஸ்டுகள் குடைச்சல்'' என்றெல்லாம் ஏகாதிபத்திய கைக்கூலிகளும் பத்திரிகைகளும் பீதியூட்டுகின்றனர். ஆனாலும், கடந்த ஈராண்டு காலத்தில் ஐ.மு. கூட்டணி அரசு எந்தவொரு தனியார்மய தாராளமயக் கொள்கையையும் "இடதுசாரி'களுக்கு அஞ்சி முடக்கி வைத்துவிடவில்லை. மாறாக, அதை முன்னிலும் தீவிரமாக்கி வருவதை நாடே நன்கறியும். இத்தனைக்குப் பிறகும் இந்த கைக்கூலி அரசுக்கு முட்டுக் கொடுத்து ஆதரிப்பதை போலி கம்யூனிஸ்டுகள் நிறுத்தவுமில்லை.

 

ஐ.மு. கூட்டணி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை முறியடிக்கப் போவதாக நாடகமாடும் போலி கம்யூனிஸ்டு துரோகக் கம்பெனி அடையாள எதிர்ப்பு, கண்டன அறிக்கை, நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு, அறப்போர் என்பதற்கு மேல் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதுமில்லை. பெட்ரோல் விலையேற்றத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் நடத்திய போலி கம்யூனிஸ்டுகள், ஐ.மு. கூட்டணி அரசின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பெட்ரோல் விலையேற்றம் பற்றி வாயே திறக்கவில்லை. எந்த தனியார்மயக் கொள்கைகளை எதிர்ப்பதாகச் சவடால் அடிக்கிறதோ, அவற்றையே மாநிலத்தைத் தொழில்மயமாக்குவது என்ற பெயரால் மே.வங்க போலி கம்யூனிஸ்டு ஆட்சி பகிரங்கமாகவே செயல்படுத்தி வருகிறது. சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டே, ""வால்மார்ட்'' நிறுவனத்திடம் பேரங்காடிகளைத் தமது மாநிலத்தில் தொடங்கக் கோரி பேச்சு வார்த்தை நடத்துகிறார், மே.வங்க போலி கம்யூனிஸ்டு முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா.

 

ஒருபுறம் கைக்கூலி காங்கிரசுக் கூட்டணி ஆட்சியை ஆதரித்துக் கொண்டே, இன்னொருபுறம் காங்கிரசு பா.ஜ.க.வுக்கு மாற்றாக மூன்றாவது அணி கட்ட முயற்சிப்பதாக இப்போலி கம்யூனிசத் துரோகிகள் பூச்சாண்டி காட்டுகின்றனர். ஆனால், நாட்டில் இருப்பது ஒரே துரோக அணிதான். அது மறுகாலனியாதிக்கக் கொள்கைகளை வேறுபட்ட வழிமுறைகளில் செயல்படுத்தும் ஓட்டுக் கட்சிகளின் ஓரணி. அதற்கு எதிராக நாட்டுப்பற்றும் ஏகாதிபத்திய காலனியாதிக்க எதிர்ப்பும் கொண்ட புரட்சிகர மக்கள் முன்னணியைக் கட்டியமைத்துப் போராட வேண்டியதே இன்றைய தேவையாக உள்ளது.