08_2006.jpg

ஆளும் வர்க்கங்களும் ஊடகங்களும் சொல்லும் பொருளாதார வளர்ச்சியானது, நாட்டின் மிக அற்பமான முதலாளித்துவப் பிரிவினரின் வளர்ச்சியைத்தான் குறிக்கிறது என்பதை ""வல்லரசாகும் இந்தியா'' கட்டுரை செறிவாக விளக்கியுள்ளது. எனினும், உழைக்கும் மக்கள் வாழ்க்கைத் தரம் அதலபாதாளத்திற்கு வீழ்ந்துள்ளதைப் புள்ளிவிவர ஆதாரங்களுடன் தொகுத்தளித்து எழுதப்படாததால் இக்கட்டுரை முழுமையைத் தரவில்லை.

ஜீவா, சென்னை.

 

இட ஒதுக்கீடு விவகாரத்தில், தமிழினவாதிகளும் சமூக (அ)நீதிக்காரர்களும் செய்துவரும் அவதூறு பொய்ப்பிரச்சாரத்துக்குப் பதிலடி கொடுப்பதாக ""சாதி இந்துக்களுக்கு வக்காலத்துதான் சமூக நீதியா?'' என்ற கட்டுரை எடுப்பாக அமைந்துள்ளது. கடந்த 16.7.06 அன்று தோழர் ஆனந்த் தலைமையில் நடந்த வாசகர் வட்டக் கூட்டத்தில், தோழர் எழில்மாறன் இடஒதுக்கீடு பற்றியும் மீண்டும் தலைதூக்கும் பார்ப்பனத் திமிரை முறியடிக்க வேண்டிய அவசியம் பற்றியும், புரட்சிகர அமைப்புகளின் நிலைப்பாட்டையும் எளிய உதாரணங்களுடன் விளக்கிச் சிறப்புரையாற்றினார். பழைய புதிய வாசகர்கள் தமது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு தெளிவு பெற உதவுவதாக இக்கூட்டம் அமைந்தது.

வாசகர் வட்டம், பரமக்குடி

 

பேரழிவில் புதைந்து கொண்டிருக்கும் பாலஸ்தீனம் பற்றிய கட்டுரை அமெரிக்க இஸ்ரேலிய பயங்கரவாதத்தையும் மக்களின் அவலத்தையும் கண்ணெதிரே படம் பிடித்துக் காட்டியது. இன்றைய உலகமய மறுகாலனிய சூழலில் குட்டி முதலாளிய தலைமையில் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்பதை இக்கட்டுரை படிப்பினையாக உணர்த்துகிறது.

தூயவன், நல்லம்பள்ளி.

 

சாதி இந்துக்களின் ஆதிக்கத்துக்கு வக்காலத்து வாங்கும் தமிழினப் பிழைப்புவாதிகளின் சந்தர்ப்பவாதத்தையும் அவதூறுகளையும் அம்பலப்படுத்திக் காட்டி, புரட்சியாளர்களின் நிலைப்பாட்டைச் செறிவாகத் தொகுத்துக் கூறியது சிறப்பு. கொத்தடிமைக் கூடாரமாகும் தமிழகம் எனும் கட்டுரை நம் கண்ணெதிரே நடந்து வரும் கொடுமையை விளக்கி, போராட வேண்டிய அவசியத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

இரா. கணேசன், சாத்தூர்.

 

"இடஒதுக்கீடு என்பது நீதிக்கட்சியினரோ, திராவிடர் கழகத்தினரோ போராடிப் பெற்ற உரிமையல்ல் ஆங்கிலேய காலனியவாதிகள் முதல் இன்றைய ஆட்சியாளர்கள் வரை இத்தகைய நிறுவனமயமாக்கும் ஏற்பாட்டைச் செய்துள்ளனர்' என்ற பு.ஜ.வின் நிலைப்பாட்டைப் படித்த சில தமிழினப் பிழைப்புவாதிகள், இதற்கு என்ன ஆதாரம் என்று எம்பிக் குதித்தனர். நாம் ஆதாரங்களைக் காட்டியதும் வாயடைத்துப் போயினர்.

வாசகர்கள், திருப்பூர்

 

நாடு வல்லரசாவதைக் கனவு காணும் கலாம் ரசிகர்களுக்கு அட்டைப்படம் சவுக்கடி. ஈராக்கில் ஹதிதா கிராமத்தில் அமெரிக்க இராணுவம் நடத்திய கொலைவெறியாட்டம் பற்றிய கட்டுரையில் வியட்நாமில் மைலாய் கிராமத்தில் அமெரிக்கா நடத்திய கொடூரத்தை விளக்கி ஒப்பிட்டுக் காட்டியிருக்கலாம்.

பகத், பென்னாகரம்.

 

இந்தியாவின் உண்மை நிலையை புள்ளிவிவர ஆதாரங்களுடன் கொடுத்த அட்டைப்படக் கட்டுரை அதிர்ச்சியைக் கொடுத்தது. வாசகர் வட்டத்தில், ஈழப் பிரச்சினை தீராத நெருக்கடியில் சிக்கியுள்ளதையும் ஏகாதிபத்திய மேலாதிக்கவாதிகளின் சூழ்ச்சிகளையும் விளக்கி பாய்லர் பிளாண்ட் தொழிலாளர் சங்கப் பொதுச்செயலாளர் தோழர் நாராயணசாமி ஆற்றிய சிறப்புரை தோழர்களுக்குப் புதிய பார்வையை அளிப்பதாக அமைந்தது.

வாசகர் வட்டம், திருச்சி.