10_2006.jpg

வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாளையொட்டி, சி.பி.எம். கட்சியின் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கடந்த 12.9.06 அன்று திருச்சியில் அய்க்கஃப் அரங்கில் ஒரு கருத்தரங்கை நடத்தியது.

 த.மு.எ.ச. மாநிலத் துணைத்தலைவரான கவிஞர் நந்தலாலா தலைமையில் நடந்த இக்கருத்தரங்கில், ""பாதை தவறிய கால்கள்'' என்ற தலைப்பில் இந்தியப் பொருளாதாரம் உலக வர்த்தகக் கழகத்தின் இரும்புப் பிடியில் சிக்கியுள்ளதை விளக்கி, பொருளாதார ஆய்வறிஞரான பேரா. எம். ஜேசு சிறப்புரையாற்றினார். ப.சிதம்பரத்தின் பொருளாதாரப் பித்தலாட்டத்தையும், தனியார்மயம் தாராளம யத்தை முறியடிக்க வேண்டிய அவசியத்தையும் பற்றி வீராவேசமாக அவர் பேசியதைப் பார்க்கும்போது, இது த.மு.எ.ச. கூட்டமா, அல்லது புரட்சிகர அமைப்புகள் நடத்தும் கூட்டமா என்று நமக்கே குழப்பமாகி விட்டது. கடைசியில், இவையெல்லாம் வெற்றுச் சவடால்கள்தான் என்று நிரூபணமாகியது.

 

பார்வையாளர்கள், யாருடைய தலைமையில் தனியார்மய தாராளமயத்தை எதிர்த்துப் போராடுவது என்று கேட்டபோது, ""உலக சமூக மன்றத்தின் (ஙி.கு.ஊ.) தலைமையில் திரண்டு போராட வேண்டும்'' என்று ஒரே போடாகப் போட்டார், பேரா. ஜேசு. உலக சமூக மன்றம் என்பது ஏகாதிபத்தியங்களால் உருவாக்கப்பட்ட கைக்கூலி அமைப்பாயிற்றே என்று கேட்டபோது ""இப்போதைக்கு வேறு அமைப்புகள் இல்லை; இருப்பதைக் கைப்பற்றி நாம் போராடுவதுதான் சரியானது'' என்று ஏகாதிபத்திய கைக்கூலிகளுடன் கூட்டணி கட்ட உபதேசித்தார். சீனா தனியார்மயம் தாராளமயத்தை ஆதரிக்கிறதே, நாம் மட்டும் ஏன் எதிர்க்க வேண்டும் என்று கேட்டதற்கு, ""சீனா, வலிமைமிக்க வாளை மீனாக உள்ளது; இந்தியாவோ வலுவிழந்த அயிரை மீனாக இருக்கிறது. எனவே, நாம் வலுப்பெற்ற பிறகு சீனாவைப் போல இக்கொள்கைகளைச் செயல்படுத்துவதில் தவறில்லை'' என்று ஏகாதிபத்தியங்களின் மறுகாலனியக் கொள்கைக்கு வெளிப்படையாகவே பக்கமேளம் வாசித்தார் இந்தப் பேராசிரியர்.

 

வலுவிழந்த ஏழை நாடுகள் தனியார்மயம் தாராளமயத்தை எதிர்க்க வேண்டும்; வலுவான நாடுகள் ஆதரிக்க வேண்டும் என்ற பேராசிரியரின் இச்சந்தர்ப்பவாதக் கொள்கையின்படி, மாநிலத்தைத் தொழில்மயமாக்கி வலிமை பெறுவதற்காகவே நாங்கள் தனியார்மயம் தாராளமயத்தை மனித முகத்தோடு செயல்படுத்துகிறோம் என்கிறோம், மே.வங்க போலி கம்யூனிஸ்டு முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, நல்லவேளை! மே.வங்க முதல்வர் இப்படிச் செய்வது சரியா என்று யாரும் கேள்வி கேட்டு பேராசிரியரைச் சங்கடப்படுத்தவில்லை.

 

ஏகாதிபத்தியக் கைக்கூலிகளை தன்னார்வக் குழுக்களின் கூடாரம்தான் உலக சமூக மன்றம். த.மு.எ.ச.வினர் கருத்தரங்கை நடத்திய இடமோ கிறித்துவ தன்னார்வக் குழுவின் அய்க்கஃப் அரங்கம்! அங்கு உலக சமூக மன்றத்தின் கொள்கையையே தமது கொள்கையாக அறிவிக்கும் த.மு.எ.ச. வின் கருத்தரங்கம்!
தனது சொந்தக் காலில் நின்று வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு எதிராக சுதேசிக் கப்பலோட்டினார் வ.உ.சிதம்பரனார். போலி கம்யூனிஸ்டுகளோ ஏகாதிபத்தியக் கைக்கூலிகளுடன் கூட்டணி கட்டிக் கொண்டு ஏகாதிபத்திய எதிர்ப்பு காகிதக் கப்பல் விடுகிறார்கள். அடடா! எப்பேர்பட்ட புரட்சி!

 

பு.ஜ. செய்தியாளர், திருச்சி.