10_2006.jpg

ரலாறு படைக்கிறார் மே.வங்க போலி கம்யூனிச முதல்வர் புத்ததேவ் பாட்டாச்சார்யா. மே.வங்கத்தில் 22,500 ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரிய சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவி வரும் வரலாறு, வரலாறு கண்டிராத வகையில் மே.வங்கத்தின் அடிக்கட்டுமானத் துறையை மேம்படுத்த இந்தோனேஷிய சலீம் குழுமத்துடன் ரூ. 40,000 கோடி மதிப்பீட்டுக்கான ஒப்பந்தம் போட்டுள்ள வரலாறு,
 இந்தியாவிலேயே ஜப்பானிய முதலீட்டை மிக அதிகமாகப் பெற்றுள்ள மாநிலம் என்று மே.வங்கத்தை முன்னணிக்குக் கொண்டு வந்த வரலாறு, அன்னிய நேரடி முதலீட்டில் மகாராஷ்டிரா, தமிழகத்துக்கு அடுத்த மூன்றாவது இடத்துக்கு மே.வங்கத்தை இழுத்து வந்த வரலாறு, எங்கள் கொள்கைகளை 180 டிகிரிக்கு தலைகீழாக மாற்றிவிட்டோம் என்று வாக்குமூலமளித்து செயல்படுத்தி வரும் நேர்மையின் வரலாறு என புத்ததேவின் சாதனைகளைப் பட்டியல் போட்டு மாளாது. ""சிவப்பிலிருந்து செல்வச் செழிப்புமிக்க மாநிலமாக மே.வங்கத்தை புத்ததேவ் மாற்றி வருகிறார்'' என்று ஆளும் வர்க்க ஊதுகுழலான ""இந்தியா டுடே'' வார இதழே சிறப்புக் கட்டுரை வெளியிடுமளவுக்கு அவர் ஏகாதிபத்திய சேவையில் புதிய வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறார்.

இப்படி, மாநிலத்தைத் தொழில்மயமாக்குவது என்ற பெயரால் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து சிறப்புப் பொருளாதார மண்டலத்தை மே.வங்க அரசு நிறுவிக் கொண்டிருக்கும்போது, சி.பி.எம். கட்சியின் தலைவர்களோ, சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராக வீரவசனம் பேசுகிறார்கள். மகாராஷ்டிரா மாநிலத்தில் அமையவுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்தை எதிர்த்து நடந்த விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற சி.பி.எம். கட்சித் தலைவர்களுள் ஒருவரான எச்சூரி, விவசாயிகளின் வாழ்வைப் பறிக்கும் இத்தகைய திட்டங்களை ஒருக்காலும் அனுமதிக்க மாட்டோம் என்று சூளுரைக்கிறார்.

 

சிறப்புப் பொருளாதார மண்டலத்தை சி.பி.எம். கட்சி ஆதரிக்கிறதா அல்லது எதிர்க்கிறதா என்று புரியாமல் அக்கட்சி அணிகளே குழம்பிப் போனார்கள். ஒருவழியாக, சி.பி.எம். கட்சியின் பொதுச்செயலாளரான பிரகாஷ் காரத் தமது கட்சியின் "புரட்சிகர' நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி விட்டார். ""சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை; ஆனால், கண்மூடித்தனமாக விவசாய நிலங்களை ஆக்கிரமித்து இத்தகைய மண்டலங்களை அமைக்கக் கூடாது. இதனால் விவசாயமும் விவசாயிகளும் பாதிக்கப்படுகிறார்கள். மேலும், ஆலை அமைப்பதற்கும், அடிக்கட்டுமான தேவைகளுக்கும் எவ்வளவு நிலம் தேவையோ அதை வரையறுத்து அதற்கேற்ப நிலங்களைக் கையகப்படுத்த வேண்டும். தொழிற்சாலை அல்லாமல் வீட்டு மனைக்காக நிலங்களை ஆக்கிரமிப்பதை எதிர்க்கிறோம்'' என்கிறார் காரத்.

 

""கையகப்படுத்தப்படும் நிலங்களில் 50% இடத்தை தொழிற்சாலைக்கும் 25% இடத்தை அடிக்கட்டுமானத் தேவைக்கும் 25% இடத்தை இதர தேவைகளுக்கும் என வரையறுத்து உரிய சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும்; முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு வரைமுறையின்றி வரிச்சலுகைகள் அளிப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நிலத்திலிருந்து வெளியேற்றப்படும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணமும் மறுவாழ்வும் தரப்பட வேண்டும்'' என மனிதமுகம் கொண்ட சிறப்புப் பொருளாதரா மண்டலத்தை நிறுவவேண்டும் என்றும் இல்லையேல் போராடுவோம் என்றும் விளக்குகிறார் காரத். மே.வங்கத்தில் நிறுவப்படும் இத்தகைய மண்டலங்களை முன்மாதிரியாகக் கொண்டு மைய அரசும் பிற மாநில அரசுகளும் செயல்பட வேண்டும் என்றும் உபதேசிக்கிறார்.

 

முன்மாதிரியாகச் சித்தரிக்கப்படும் மே.வங்க சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் யோக்கியதை என்ன? சலீம் குழுமத்தின் ஆலைகள் மற்றும் அடிக்கட்டுமான தேவைகளுக்காக, விவசாய நிலங்களை மே.வங்க அரசு பறிமுதல் செய்து வருகிறது. ஹூக்ளி மாவட்டத்தில் சங்கூர் அருகே நிறுவப்படவுள்ள டாடா கார் தொழிற்சாலைக்காக இருபோகம் சாகுபடியாகும் நஞ்சை நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால், அங்கு விவசாயிகள் போராடி வருகிறார்கள். அரசியல் ஆதாயம் கருதி எதிர்க்கட்சியான திரிணாமுல் காங்கிரசு, மே.வங்க அரசின் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதும், அக்கட்சித் தலைவியான மமதாபானர்ஜியை "இடதுசாரி' அரசு கைது செய்தது. இதைக் கண்டித்து அக்கட்சி சாலைமறியல் தர்ணா போராட்டம் நடத்த, அதற்கு சோனியாவின் காங்கிரசு ஆதரவு தெரிவிக்கிறது.

 

மே.வங்க "இடதுசாரி' அரசோ, ""கையகப்படுத்தப்படும் நிலங்கள் ஒருபோக சாகுபடி செய்யப்படும் மானாவாரி நிலங்கள்தாம். பெரும்பான்மையான விவசாயிகள் நிலத்தை விற்கச் சம்மதித்த பிறகே கையகப்படுத்தியுள்ளோம். இந்நிலங்களுக்கு உரிய விலையும் நிவாரணமும் அளித்துள்ளோம்'' என்று நியாயவாதம் பேசுகிறது.
இப்படித்தான் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும் மாநிலங்களின் ஆட்சியாளர்கள் அனைவரும் விளக்கமளித்து வருகிறார்கள். அரசியல் ஆதாயத்துக்காக எதிர்க்கட்சிகள் விவசாயிகளைத் தூண்டிவிட்டு தேவையற்ற போராட்டம் நடத்துவதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். கடைசியில், தங்கள் ஆட்சி செய்யும் மாநிலத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் உள்ளிட்டு அனைத்து மறுகாலனியாதிக்கக் கொள்கைகளையும் தீவிரமாகச் செயல்படுத்தி நியாயப்படுத்துவது; எதிர்கட்சியாக உள்ள மாநிலங்களில் இத்தகைய மண்டலங்கள் கொள்கைகளுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தி சவடால் அடிப்பது என்பதே அனைத்து ஓட்டுக் கட்சிகளின் எழுதப்படாத கொள்கையாகிவிட்டது. இக்கொள்கையை போலி கம்யூனிஸ்டுகள் செங்கொடி ஏந்தி நடைமுறைப்படுத்துகிறார்கள் என்பதுதான் ஒரே வித்தியாசம்.

 

மு பச்சையப்பன்