puja_apri_07.jpg

பேட்டை ரவுடிகளும் கிரிமினல் பேர்வழிகளும் சமூக விரோத கொலை பாதகச் செயல்கள் பலவற்றில் ஈடுபட்டுக் கொண்டே, தம்மைச் சுற்றியுள்ள ஏழைகளின் திருமணம், காதுகுத்தல், கோயில் திருவிழாக்கள் முதலானவற்றில் முக்கியப் பிரமுகராகக் கலந்து கொண்டு

 ""மொய்'' எழுதி, தமது ஆதரவு வட்டத்தைப் பெருக்கிக் கொள்வது வழக்கம். ஆட்டோ சங்கரிலிருந்து அயோத்திக்குப்பம் வீரமணி வரை எல்லாவகை பேட்டை ரவுடிகளின் கதையும் இதுதான். தற்போது பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களும் இதே உத்தியைப் பின்பற்றத் தொடங்கியுள்ளன. இதனை பெருந்தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு என்று அவர்கள் பெருமையுடன் குறிப்பிடுகின்றனர். கொலைகார கோகோ கோலாவும் இந்த வழியில் "சமூக சேவை' செய்யக் கிளம்பியுள்ளது.

 

சென்னை ரோட்டரி கிளப்பும் கோக் நிறுவனமும் இணைந்து சென்னையைச் சுற்றியுள்ள மாநகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் வழங்கப் போவதாக அறிவித்துள்ளன. முதற்கட்டமாக 100 பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு பள்ளியிலும் ரூ. 60,000 செலவில் நீரைச் சுத்திகரிக்கும் எந்திரங்கள் நிறுவப்படுமாம். இந்தப் பாதுகாப்பான குடிநீரை ஏழை மாணவர்கள் வீட்டுக்கும் எடுத்துச் சென்று குடிக்க வசதியாக 1 லிட்டர் பிளாஸ்டிக் தண்ணீர் குடுவையும் வழங்கப்படுமாம்.

 

திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் விரிவுபடுத்தி, மகளிர் பள்ளிகளுக்கு முன்னுரிமை அளித்து, ""வாழ்வின் அமுதம்'' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த மூன்றாண்டுத் திட்டத்தின் தொடக்கவிழா கடந்த மார்ச் 5ஆம் தேதியன்று சோஷியல் சர்வீஸ் லீக் பள்ளியில், அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடந்தது. விழாவில் பேசிய அமைச்சர் ""மாநிலம் முழுவதிலும் 6,103 பள்ளிகளில் குடிநீர் வசதியில்லை; அரசால் மட்டும் இந்த வசதியைச் செய்து தர இயலாது. பெருந்தொழில் நிறுவனங்களும் தன்னார்வ நிறுவனங்களும் இதற்கு உதவிட வேண்டும்'' என்று கோரி, பள்ளி மாணவர்களுக்குக் குடிநீர் வழங்க வேண்டிய அரசின் பொறுப்பைத் தட்டிக் கழித்துள்ளார். இதைச் சாதகமாக்கிக் கொண்டு பள்ளி மாணவர்களுக்கு குடிநீர் சேவை என்ற பெயரில், அடித்தட்டு உழைக்கும் மக்களை தனக்கு ஆதரவாகத் திரட்டிக் கொள்ளும் புதிய உத்தியுடன் கொலைகார கோக் கிளம்பியுள்ளது.

 

யாருக்கு யார் தானம் தருவது? நமது நாட்டின் இயற்கை வளமாகிய நிலத்தடி நீரையும் ஆற்று நீரையும் ஒட்ட உறிஞ்சி குடிநீர்ப் பஞ்சத்தைத் தோற்றுவித்தும், கேரளத்தின் பிளாச்சிமடாவைச் சுடுகாடாக்கியும், நெல்லை கங்கைகொண்டானின் கம்சனைப் போல உலகெங்கும் பலநூறு பேர்களைக் கொன்றும், நாட்டைச் சூறையாட வந்துள்ள கோக், இப்போது ஏழை மாணவர்களுக்காகக் கசிந்துருகுகிறது. கோக்கின் சமூக விரோதக் கொடுஞ்செயல்களையும் கொலைவெறியாட்டங்களையும் அமெரிக்கப் பல்கலைக் கழக மாணவர்கள் ""கொலைகார கோக்'' (தீதீதீ.டுடிடூடூஞுணூஞிணிடுஞு.ணிணூஞ்) என்ற இணையதளத்தின் மூலம் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றனர். புதிய உத்தியுடன் கிளம்பியுள்ள கொலைகார கோக்கின் தருமதுரை வேடத்தை உழைக்கும் மக்களிடம் அம்பலப்படுத்தி முறியடிக்க, புரட்சிகர ஜனநாயக சக்திகள் இன்னும் முனைப்பாகச் செயல்பட வேண்டியுள்ளது.