june_2007.jpg

சிதம்பரம் நடராசர் கோயிலில் அருட்பா பாடச் சென்ற வள்ளலாரை இழிவுபடுத்தி, பார்ப்பனர் அல்லாத யாரும் "அருட்பா' பாட இயலாது என்று விரட்டியடித்தது தீட்சிதர் கும்பல். யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரைத் தமது கையாளாகக் கொண்டு "மருட்பா' எழுதி வெளியிட்டு, வள்ளலார் மீது வழக்கும் தொடர்ந்தது. வடலூரில்

 உத்தரஞான சிதம்பரம் என்ற சபையை நிறுவி 1872 முதல் ஏழைகளுக்கு உணவளித்து வந்த வள்ளலார், பார்ப்பனச் சடங்குகளையும், சாதிக் கொடுமையையும் மறுத்து புதியதொரு மார்க்கத்தை உருவாக்கினார். தீட்சிதர் கூட்டத்தால் அனுப்பி வைக்கப்பட்ட ஆடூர் சபாபதி குருக்கள், வள்ளலார் கொள்கையை ஏற்பதாக நடித்து, அவர் மறைவுக்குப் பின், சைவ ஆகம நெறியைப் புகுத்தி சபையைப் பார்ப்பனமயமாக்கும் சதியைத் தொடங்கினார்.

 

சிவலிங்க வழிபாடு, பிரதோஷ பூசை, பூணூல் அணிந்த அர்ச்சகர், வள்ளலாருக்கே நெற்றியில் பட்டை போடுவது, சபைக்கு சொந்தமான நிலத்தை ஏப்பம் விட்டு சொத்து சேர்ப்பது என்று வள்ளலாரின் சன்மார்க்கத்தை ஒழித்து "சைவ மார்க்கத்தை' வளர்த்தார் தற்போதைய பூசகர் சபாநாத ஒளி. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பொள் ளாச்சி மகாலிங்கத்தின் பின்புலத்தை வைத்துக் கொண்டு, தட்டிக்கேட்ட வள்ளலார் நெறியாளர்களை மிரட்டினார். இதற்கெதிராக வள்ளலார் நெறியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

 

இப்போராட்டத்தை ஆதரித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணித் தோழர்கள் பிரச்சாரம் செய்தனர். இதனையொட்டி பெரியார் தி.க. ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டதுடன் மாவட்டமெங்கும் சுவரொட்டிப் பிரச்சாரமும் செய்தனர். ""பார்ப்பன மதத்தை மறுத்து வாழ்ந்த வள்ளலாரை பார்ப்பனமயமாக்கும் சதியை முறியடிப்போம்!'' என்ற தலைப்பில் பு.மா.இ.மு. வெளியிட்ட துண்டறிக்கை, பெரும் வரவேற்பைப் பெற்றது. தைப்பூசத்திற்குப் பல்லாயிரக்கணக்கில் வடலூருக்கு வரும் மக்களிடமும், மாதந்தோறும் பூசத்தன்று திரளும் வள்ளலார் நெறியாளர்களிடமும் இந்தப் பார்ப்பனமயமாக்கத்தை எதிர்த்துப் போராடுமாறு செஞ்சட்டை அணிந்த எமது தோழர்கள் திரளாக நின்று பிரச்சாரம் செய்தனர். துண்டறிக்கையை வரவேற்ற சன்மார்க்க சங்கத்தினர் தாமே முன்வந்து அதனை ஆயிரக்கணக்கில் அச்சிட்டுப் பரப்பினர்.

 

பார்ப்பனமயமாக்கத்துக்கு எதிரான வள்ளலார் நெறியாளர்களின் போராட்டம் மே 17ஆம் தேதி வெற்றி பெற்றது. சபாநாத ஒளி சிவாச்சாரியார் அறநிலையத் துறையால் வெளியேற்றப்பட்டார். வள்ளலார் வகுத்த வழியில் வடலூரில் மீண்டும் வழிபாடு தொடங்கியிருக்கிறது.