04_2008.jpgவிவசாயிகள் விடுதலை முன்னணியின் பட்டுக்கோட்டை வட்டாரச் செயற்குழு உறுப்பினரான அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தோழர் கோவண்ணா என்கிற கோவிந்தராஜ் கடந்த 15.3.08 அன்று நடந்த எதிர்பாராத விபத்தில் மரணமடைந்து விட்டார்.


தோழர் கோவண்ணா அதிகம் படிக்காத கூலித் தொழிலாளி. வர்க்க உணர்வும் புரட்சிகர உணர்வும் கொண்ட அவர், தனது இளமைக் காலத்தில் இடது, வலது கம்யூனிஸ்டு கட்சிகளில் இணைந்து செயல்பட்டு, பின்னர் அக்கட்சிகளின் துரோகத்தையும் பித்தலாட்டத்தையும் கண்டு வெறுப்புற்று, இக்கட்சிகளின் உள்ளூர் தலைவர்களின் நடத்தைகளையும் மக்கள் விரோதச் செயல்பாடுகளையும் அம்பலப்படுத்தி விட்டு, அக்கட்சிகளிலிருந்து வெளியேறி வி.வி.மு.வில் தன்னை இணைத்துக் கொண்டு ஊக்கமுடன் செயல்பட்டு வந்தார். மக்களுடன் எளிதில் ஐக்கியப்பட்டு அவர்களை அமைப்பாக்குவதிலும், போராட்டத்தில் முன் நிற்பதிலும் அவர் எப்போதும் முன்னுதாரணமாகச் செயல்பட்டு வந்தார். படிப்பறிவு குறைவாக இருந்தபோதிலும், தனது வர்க்கப் போராட்ட அனுபவ அறிவைக் கொண்டு போலீசையும் அதிகார வர்க்கத்தையும் கதிகலங்க வைக்கும் போராளியாகச் செயல்பட்டதை இவ்வட்டார மக்கள் நன்கறிவர்.


அதிராம்பட்டினம் நகர் இதுவரை கண்டிராத வகையில், சாதி


மதச் சடங்குகள் ஏதுமின்றி பாட்டாளி வர்க்க உணர்வோடு நடந்த இறுதி ஊர்வலத்திலும், அதன்பின்னர் நடைபெற்ற நினைவஞ்சலிக் கூட்டத்திலும் திரளாகத் தோழர்களும் ஊர் பஞ்சாயத்தார்களும் பல்வேறு அரசியல் கட்சியினரும் பங்கேற்று தோழர் கோவண்ணாவின் உயரிய கம்யூனிசப் பண்புகளை நினைவுகூர்ந்து வீரவணக்கம் செலுத்தினர்.


தோழர் கோவண்ணாவின் எளிய வாழ்வு, கடின உழைப்பு, போர்க்குணம், புரட்சியின் மீதான பற்றுறுதி ஆகிய உயரிய கம்யூனிசப் பண்புகளை உறுதியாக நெஞ்சிலேந்தி, புரட்சிப் பாதையில் தொடர்ந்து முன்னேறுவோம்!


— விவசாயிகள் விடுதலை முன்னணி,
பட்டுக்கோட்டை.