04_2008.jpgநாட்டின் உச்சநீதி மன்றமும், உயர்நீதி மன்றமும் பாரபட்சமின்றி அனைத்துத் தரப்புக்கும் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டும் நிறுவனங்களாக இல்லை. ஏழைஎளிய மக்கள், சிறுபான்மை மக்களின் விவகாரங்கள் என்றால், காட்டெருமைகளாக மாறி முட்டி மோதிக் குத்திக் கிழிக்கின்றன. அதிகாரபலமிக்க மேட்டுக்குடியினர் விவகாரங்கள் என்றால்,

 அவர்களின் வளர்ப்புப் பிராணிகளாக மாறி, வாலை குழைத்துக் கொண்டு அவர்களின் காலை நாவால் நக்குகின்றன. அடுத்தடுத்து எவ்வளவோ வழக்குகள் இதற்குச் சான்றுகளாக விளங்குகின்றன.


நீதிமன்றங்கள், சிறு வணிகர்களின் கடைகளுக்கு சீல் வைக்கும்படி உத்திரவு போடுகிறது; சிறு முதலாளிகளின் ஆலைகளை மூடிவிடும்படிக் கட்டளை போடுகிறது. நீதிபதிகளோ தரைக்கடை வியாபாரிகளை, தலைச்சுமை வியாபாரிகளை விரட்டுங்கள், குடிசைகளை இடித்துத் தள்ளுங்கள்; ரிக்சா இழுப்பவர்களை நகரத் தெருக்களிலிருந்து தூக்கியெறியுங்கள்; வேலை நிறுத்தங்கள், கடையடைப்புப் போராட்டங்களை ஒடுக்குங்கள் என்று சீறுகிறார்கள். நீதிமன்றங்கள் எல்லாம் நாட்டின் பரந்துபட்ட ஏழை மக்களுக்கு நீதி வழங்கும் கருவியாக இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.


அதற்கு மாறாக, நாட்டின் ஆளும் நிர்வாக அமைப்பு முழுவதையும் கட்டுப்படுத்தும் செல்வம் கொழிக்கும் கூட்டுப் பங்கு நிறுவனங்களின் நலன்களுக்குச் சாதகமாகவே நீதித்துறை சேவை செய்கிறது. ஆதிக்க சக்திகளும் அரசும் ஏழை எளிய, சிறுபான்மை மக்களுடைய உரிமைகளை அப்பட்டமாக மீறும் போதெல்லாம், அவ்வுரிமைகளை நிலைநாட்டுவதற்குப் பதிலாக, அவற்றை அடியோடு பறிக்கும் வகையிலே, அதாவது குப்புறத் தள்ளுவதோடு குழிபறிக்கும் வேலையையும் நீதிமன்றங்கள் செய்கின்றன.


ஏழைஎளிய மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நாளும் பரவலாக இழைக்கப்படும் அநீதிகள், அக்கிரமங்களுக்கு நிவாரணம் தேடி நீதிக்காகவும் உரிமைக்காகவும் எவ்வளவு முயன்றாலும் அணுக முடியாதபடி நீதிமன்றங்களின் நெடிய கதவுகள் அடைபட்டே கிடக்கின்றன. ஏழைஎளிய மக்களின் உயிர் வாழ்வுக்கான நிலம் மற்றும் பிற இயற்கை வாழ்வாதாரங்களை அரசும் ஆதிக்க சக்திகளும் பிடுங்கிக் கொள்ளும்போது, பாதிக்கப்படுபவர்கள் பலமுறை மனுப் போட்டு மன்றாடினால் கூட, நீதிமன்றங்கள் தலையிட மறுத்து விடுகின்றன. ஏழைக் குடிசைவாழ் மக்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றும்படி நீதிமன்றங்களே உத்திரவுகள் போடுகின்றன; அதேசமயம் அவர்களுக்கான மாற்றிடங்கள் பற்றி வாயே திறப்பதில்லை.


இவ்வாறு செய்யும்போது, இயற்கையான நீதியையும், வாழ்விட உரிமையையும் பற்றிய சட்டங்களுக்கு விரோதமாக, பாதிக்கப்படுபவர்களின் வாதங்களுக்கு நீதிமன்றங்கள் காது கொடுப்பதே கிடையாது. சமீபத்தில் புதுதில்லியில் குடிசைப் பகுதிகளை இராட்சத இயந்திரங்கள் கொண்டு இடித்துத் தள்ளியபோது, அந்தப் பகுதி நிலங்கள் சட்டப்படி அங்கு குடியிருந்தவர்களுக்கு உடமையானதில்லை என்று நீதிமன்றம் கூறியது; யமுனை ஆற்றங்கரையிலும், புதுதில்லியின் விளிம்பிலும் இருந்த குடிசைப்பகுதிகள் சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்றும் கூறியது. ஆனால், செல்வாக்குமிக்க ஆதிக்க சக்திகள், அதே இடங்களில் பெரும் வணிக வளாகங்களைக் கட்டியபோதும் யமுனை ஆற்றங்கரையில் அக்சார்தம் கோவிலைக் கட்டியபோதும் மேற்கண்ட கண்துடைப்புக் காரணங்களை எல்லாம் ஊதிவிட்டு, அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று அனுமதிக்கப்பட்டன.


இதேபோன்று, சட்டப்படி அனைத்துத் தரப்புக்கும் பாரபட்சமாக இல்லாது, ஏழைஎளிய மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக சிவில் உரிமை விவகாரங்களில் நீதிமன்றங்கள் உத்திரவுகள் போடுகின்றன. ஏழை நலிவுற்ற மக்கள், சிறுபான்மையினரின் பிணைக்கான மனுக்கள் பல ஆண்டுகளாகியும் நீதிமன்றங்களால் விசாரணைக்கு ஏற்கப்படுவதே இல்லை. அதேசமயம், வழக்குரைஞர் குழுமங்களினால் வாதாடப்படும் பெரும் பணமுதலைகள் மற்றும் ஆதிக்க சக்திகளின் பிணைக்கான மனுக்கள் உடனடியாகவே விசாரணைக்கு ஏற்கப்பட்டு, சாதகமான தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. பினாயக் சென் என்ற சிவில் உரிமைப் போராளியின் பிணை மனு நீதிமன்றத்தால் பகைமையோடு நடத்தப்பட்டு, பிணை மறுக்கப்பட்ட அதேசமயம், கள்ளக்கடத்தல்காரர்கள், வெள்ளைச் சட்டை மோசடிப் பேர்வழிகள் போன்ற கிரிமினல்களுக்கு மின்னல் வேகத்தில் பிணை வழங்கப்படுகிறது.


உச்சநீதி மன்றத்தின் இதுபோன்ற அநீதிஅக்கிரம அணுகுமுறையை விமர்சித்து ""மாத்ருபூமி'' என்ற மலையாளப் பத்திரிகையில் கடந்த பிப்ரவரி இரண்டாம் வாரம் மும்பையைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞரும் சிவில் உரிமைப் போராளியுமான தீஸ்தா செதல்வாட் எழுதியிருந்தார். இதற்காக அடுத்த சில நாட்களில் உச்சநீதி மன்றத்தின் ஒரு அமர்வுக்கு தலைமை ஏற்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் ஆத்திரத்தில் பொங்கி வெடித்து எரிமலையாய்ச் சீறிவிட்டார்.


2002ஆம் ஆண்டு இந்து மதவெறி பாசிச பயங்கரவாதிகள் முஸ்லீம் மக்களுக்கு எதிராக நடத்திய பாலியல் வன்முறை மற்றும் படுகொலை வெறியாட்டங்கள் அனைத்துக்கும் சாக்காக, அவர்கள் காட்டிய கோத்ரா தொடர்வண்டி எரிப்பு சம்பவத்திற்குக் காரணமானவர்கள் என்று அப்பாவி இசுலாமியர்கள் 84 பேர் கைது செய்யப்பட்டு, ""பொடா'' என்ற பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டு ஐந்தாண்டுகளாக சிறையில் சித்திரவதைப்படுகின்றனர். ஆண்டுக்கணக்கில் இவர்களுடைய பிணைக்கான வழக்கு இழுத்தடிக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி 19ந் தேதி உச்சநீதிமன்றத்தின் அமர்வுப் பிரிவின் கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது, அங்கிருந்தவர்கள் வரலாறு காணாத காட்சியைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.


கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் பிணை மனு மீது வழக்குரைஞர்கள் தமது வாதத்தைத் துவங்குவதற்கு முன்பே ஆத்திரத்துடன் எழுந்த தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் அவர்களைப் பார்த்து, ""யார் இந்த தீஸ்தா செதல்வாத்? உங்களில் யாராவது எந்த வகையிலாவது அவருடன் தொடர்புடையவர்களா? அவருடன் தொடர்புடைய எந்த மனு மீதான வாதங்களையும் இந்த அமர்வு நீதிமன்றம் கேட்க விரும்பவில்லை'' என்று அனல் கக்கினார்.


""தீஸ்தா செதல்வாட் என்ன கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் செய்தித் தொடர்பாளரா அல்லது மனுதாரர்களின் பிரதிநிதியா? ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது. அவர்களின் பிரதிநிதியாக தீஸ்தா இருந்தால், அவர்களின் மனுக்களை ஏற்று நாங்கள் விசாரணை நடத்த விரும்பவில்லை'' என்று ஆணித்தரமாகப் பிரகடனம் செய்தார்.
எப்படியாவது தங்களது பிணை மனு விசாரிக்கப்பட வேண்டும் என்ற பதைபøதப்பில், தீஸ்தா செதல்வாட்டை அவர்கள் கைவிடுவதாகப் பகிரங்கமாக நீதிமன்றத்தில் அறிவிக்கும்படி நிர்பந்திக்கப்பட்டார்கள். அதன்பிறகுதான் அவர்களின் பிணை மனுக்கள் விசாரணைக்கு ஏற்கப்பட்டன. ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் இந்த முறையும் பிணையில் விடப்படவில்லை. விசாரணை தள்ளித்தான் போடப்பட்டது.


அப்படி என்னதான் உச்சநீதி மன்ற அமர்வு பிரிவு ஆத்திரமடையுமளவு தீஸ்தா செதல்வாட் எழுதிவிட்டார்? ""வெட்கக்கேடு, நீதி கேலிக் கூத்தாக்கப்படும் வெட்கக்கேடு'' என்ற கட்டுரை எழுதி, அதில் சில கேள்விகளை எழுப்பி இருந்தார். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்து ஆறாண்டுகளாகியும் குற்றஞ் சாட்டப்பட்ட 84 இசுலாமியரும் இன்னமும் ஏன் பிணையில் விடுவிப்புப் பெற முடியவில்லை? அவர்களில் பலரும் சந்தேகத்துக்கு இடமான மோசடிக் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் கிடக்கின்றனர்; அவர்களில் ஒருவர் நூற்றுக்கு நூறு சதவீதம் பார்வையில்லாதவர்; தலைமறைவாகி விட்டவர்கள் என்று அறிவிக்கப்பட்ட 22 பேர்களில் ஒருவர் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தின்போது மராட்டிய மாநிலத்தில்தான் இருந்துள்ளார் என்று காட்டப்பட்டுள்ளது.


கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு ""பொடா'' சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது; ஆனால், பின்னர் நியமிக்கப்பட்ட ""பொடா'' மறு ஆய்வுக் கமிட்டி, இந்த வழக்கு ""பொடா'' சட்டத்தின் கீழ் வராது என்றும் அதன் காரணமாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்குப் பிணை வழங்கப்படுவதை மறுக்க முடியாது என்றும் அறிவித்தது. (இந்த முடிவின் அடிப்படையில்தான் ஈழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று கைது செய்யப்பட்ட வைகோ முதலியவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். பு.ஜ. ஆ.குழு) ""பொடா'' வின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பிணையில் செல்வதற்கு மனுபோடுவதற்கு உரிமை உண்டு என்று 2006ஆம் ஆண்டு உச்சநீதி மன்றமே அனுமதியளித்திருக்கிறது; ஆனாலும் 2004ஆம் ஆண்டிலிருந்து கோத்ரா ரயில் எரிப்பு' குற்றவாளிகளின் பிணைக்கான மனுக்கள் விசாரிக்கப்படவே இல்லை. இதையெல்லாம் தீஸ்தா செதல்வாட் தனது கட்டுரையில் விவரித்துள்ளார்.


தீஸ்தாவின் கட்டுரையில் உள்ள கருத்துக்கள் எவையும் பொய்யானவை அல்ல; அல்லது இரகசியமாக வைக்க வேண்டியவையோ, இதற்கு முன்பு அவரது பத்திரிக்கையில் எழுதாதவையோ அல்ல. ஆனாலும் உச்சநீதி மன்றம், குறிப்பாக, அதன் தலைமை நீதிபதி வெகுண்டு ஆத்திரப்பட்டதற்குக் காரணம் தீஸ்தாவின் எழுத்துக்கள் அத்தனையும் உண்மையானவை! அது, நீதி தேவன்களின் கறுப்பு அங்கியை நார்நாராகக் கிழித்து முழுக்கவும் அம்மணமாக்கிவிட்டது. பின்வருவன தீஸ்தா எழுதிய கட்டுரையின் சாரம்:


· சுதந்திர இந்தியாவிலேயே மிக மோசமான மதவெறிப் படுகொலைகளை நடத்தியவர்களும் அவற்றுக்கு மூளையாக இருந்தவர்களும் ஆறாண்டுகளாகியும் சுதந்திரமாகத் திரிவதோடு இப்போது தேர்தல்கள் மூலம் இரட்டை அதிகார உரிமையும் பெற்றுள்ளார்கள். பணபலமும், சாதிபலமும் கொண்ட அரசியல் ஆதிக்க சக்திகளான குற்றஞ்சாட்டப்பட்ட அவர்கள், 2002ஆம் ஆண்டே குஜராத் நீதிமன்றங்களால் எளிதாகப் பிணையில் விடுதலை பெற்று விட்டார்கள். இவ்வாறு பிணை பெறப்பட்ட 600 பேர்கள் பற்றிய விவரங்கள் உச்சநீதி மன்றத்தின் முன்பு நீதிக்கும் அமைதிக்குமான குடிமக்கள் அமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. இது பற்றிய பல ஆதாரங்களை ""தெஹல்கா'' வார ஏடு சமீபத்தில் அம்பலப்படுத்தியது.


· இதற்கு நேர்மாறாக, கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, சிறையிலுள்ள 84 அப்பாவிகள் ஆண்டுக்கணக்கில் இன்னமும் குஜராத் சிறையில் வதைபடுகிறார்கள். அவர்களில் பலரும் போலீசு சாட்சியங்களின்படி புனையப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்கள்; அவர்களில் நூற்றுக்கு நூறு பார்வையற்ற சிறுவனும் அடங்குகிறான். பலர் நோய்வாய்ப்பட்டுள்ளார்கள். உண்மையில் அவர்களின் குடும்பமே பஞ்சை பராரிகளாகி விட்டன. அதேசமயம் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பின்னர் கொலைவெறியாட்டம் போட்டவர்களும் அதற்கு மூளையாக இருந்தவர்களும் சுதந்திரமாகத் திரிவதோடு குஜராத்தை ஆளுவோர் தமது நடவடிக்கைகள் மற்றும் பேச்சின் மூலம் பல அற்பத்தனமான மற்றும் தொல்லைதரும் கேள்விகளை மீண்டும் எழுப்புகின்றனர். பாரபட்சமான நீதி! நமது அரசியல் சட்டம் சொல்லுபவைகளைக் கோட்பாடு ரீதியாக இந்த பாரபட்சமான நீதி அமைப்பினால் தர முடியுமா? இம்மாதிரியான அப்பட்டமான பாரபட்சமாக கிரிமினல் நீதி வழங்கும் முறையானது ஒவ்வொரு குடிமகனின் குறிப்பாக, இம்மாதிரியான அமைப்பின் தாக்குதல்களைப் பெறும் நிலையில் உள்ள சமூகத்தின் நம்பிக்கையைப் பெற முடியுமா?


· நம்முடைய குற்றவியல் நீதிமுறைமை அமைப்பைப் பொறுத்தவரை குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு பிணை விடுப்பு என்பது ஒரு இயற்கையான, சாதாரண நிவாரணம், பிணையில் விடுதலை செய்வது என்பதில் கேள்விக்கிடமுள்ள விதிமுறைகளைக் கொண்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களான கொடூரச் சட்டங்கள் கூட, இம்மாதிரி நீடித்த, நிரந்தரமான முறையில் எந்த நபரையும் வெறுமனே சிறையில் அடைத்து வைப்பதை அனுமதிப்பதில்லை. பூதாகரமான வளர்ச்சி விகிதத்தையும், மின்னும் பளபளக்கும் முன்னேற்றத்தையும் கொண்ட இந்திய ஜனநாயகம் பிளவுபட்ட நீடித்த நிறுவனமயமான ஒருதலைபட்சத்தையும் சித்திரவதையையும் எப்படி நியாயப்படுத்த முடியும்?


இந்த வெட்கக்கேடான கதையின் சில கவனத்துக்குரிய அம்சங்கள் பின்வருமாறு உள்ளன.


· கோத்ராவில் எரிக்கப்பட்ட சபர்மதி துரித வண்டியின் ஆறாம் எண் பெட்டியின் தீயால் பாதிக்கப்பட்ட இந்துக்களிலேயே கூட சிலர் வழக்கு விசாரணையை குஜராத்துக்கு வெளியே மாற்றும்படி உச்சநீதி மன்றத்திடம் கோரியுள்ளனர். இதற்கான வழக்கு 2003ஆம் ஆண்டே பதிவு செய்யப்பட்டது. இவ்வாறு ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான மக்கள் அமைப்பு மனு செய்ததைத் தொடர்ந்துதான் கோத்ரா வழக்கு விசாரணைக்கு 2003 நவம்பரில் உச்சநீதி மன்றம் தடை விதித்தது.


2004 அக்டோபர் முதலே கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முஸ்லீம்களுக்கு பிணை விடுவிப்பு உத்திரவு நீதிமன்றங்களால் வழங்கப்படவில்லை. கடைசியாக, 2004 அக்டோபர் இறுதியில் அவர்களுக்குப் பிணை விடுவிப்பை மறுத்து குஜராத் உயர்நீதி மன்றம் உத்திரவு போட்டது. அதன் பிறகு உச்சநீதி மன்றம் அவர்களின் பிணை விடுதலை கோரும் மனுக்களை வெறுமனே விசாரிக்கவே கிடையாது.


· குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் தலைமறைவானதாகக் கூறப்பட்ட 22 பேர்களில் ஒருவர் ஒரு மௌலவி; அந்த மௌலவி கோத்ரா மசூதியின் மொட்டை மாடியில் நின்று கொண்டு சதித்திட்டம் திட்டியதைப் பார்த்ததாக மற்றொரு குற்றவாளியும் சாட்சியுமான சிக்கந்தர் என்பவர் கூறியிருக்கிறார். ஆனால், அந்த நாளில் அந்த மௌலவி கோத்ராவிலேயே இருக்கவில்லை, மகாராஷ்டிராவில் இருந்தார் என்பது நிரூபணமாகி விட்டது. இம்மாதிரி, பல கைதுகளில் அப்பட்டமான பாரிய பிழைகள் முறைகேடுகள் இருப்பது குறித்து எடுத்துரைத்தும், அவை எவற்றுக்கும் அரசுத் தரப்பில் பதில் சொல்ல வில்லை.


· எல்லாவற்றிலும் மோசமானது, 2004 ஆட்சி மாற்றத்தையடுத்து, ""பொடா'' சட்டம் ரத்துச் செய்யப்பட்டதற்கும் பிறகு, மத்திய ""பொடா'' மறுஆய்வுக் கமிட்டி, கோத்ரா வழக்கு ""பொடா'' சட்டத்தின் கீழ்வராது என்று அறிவித்தது. ""பொடா'' சட்டவிதி முறைகளின் படியேகூட, அதை முறைகேடாகப் பயன்படுத்துவதையும் அதன் கொடூரமான விதிமுறைகளையும் தனித்தனி வழக்குகளில் மறு ஆய்வு செய்வதை அனுமதிக்கிறது. கோத்ரா வழக்கில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் எதற்கும் ""பொடா'' சட்டத்தைப் பிரயோகிக்ககூடியதாக இல்லை என்று 2005 மே 16ஆம் தேதியிட்டத் தீர்ப்பில் மத்திய பொடா மறு ஆய்வுக் கமிட்டி கூறியது. ஆனாலும் கமிட்டியின் முடிவை குஜராத் அரசோ, நீதிமன்றமோ, ஒரு பொருட்டாகவே கருதவில்லை. கோத்ரா வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் பிணைக்கான வழக்கில் உச்சநீதி மன்றத்தின் முன்பு இந்த விவகாரங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இவையும்கூட தாமதமாக்கப்பட்டு வருகின்றன.


· இறுதியாக, குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் பிணைக்கான ரிட் மனுவை பதிவு செய்ய உச்சநீதி மன்றம் அனுமதித்தது. இந்த பிணை விவகாரத்தில் ஆறுமுறை கேட்புக்குப் பிறகும் பிணை விடுவிப்புப் பெறமுடியவில்லை. மத்திய ""பொடா'' மறுஆய்வுக் கமிட்டியின் முடிவுகள் மீதான வழக்கு விசாரணையின் போது குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் பிணை விடுவிப்புக்காக வழக்கைப் போடுவதற்கு உச்சநீதி மன்றம் அனுமதித்த போது, ஏழு தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இருப்பினும் ஆறுமுறை கேட்புக்கு வந்தும் கூட, இன்னும் முழுமையாக விசாரணை நடத்தப்படவே இல்லை. 2008 பிப்ரவரியில் உச்சநீதி மன்றத்தின் முன்பு இந்த விவகாரம் வருகிறது. இந்த முறையாவது நீதி கிடைக்குமா?


· மீண்டும் ஒருமுறை இந்தியத் தலைமை நீதிமன்றமான உச்சநீதி மன்றத்தின் வழக்கு பதிவு அமைப்பின் சொரணையற்ற அல்லது பொறுப்பற்ற வழக்கு நடப்புக்களை முறைப்படுத்துதல் காரணமாக அடிப்படை ஆதார உரிமைகள் மறுக்கப்படுகின்றன.


இதன் விளைவாக கோத்ரா ரயிலை எரித்ததாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 84 பேர்களின் (அவர்களில் ஒருவர் முழுக்க முழுக்க பார்வையில்லாதவர்) தனிமனித சுதந்திரம் ஆறு ஆண்டுகளாக மறுக்கப்பட்டிருக்கிறது. இந்திய குற்றவியல் சட்டப்படியும் நீதித்துறையின் நாகரிகத்தின் படியும் பிணை விடுவிப்பு என்பது குற்றஞ்சாட்டப்பட்ட ஒவ்வொருவரின் அடிப்படை உரிமையிலிருந்து பிரிக்க முடியாத ஆதாரத் தேவை. இவ்வாறான ஒரு நீண்ட காலத்துக்கு விசாரணைக் கைதிகளை சிறையில் வைப்பதை அனுமதிப்பதன் மூலம், போலீசுக்கும் நிர்வாக அதிகாரிகளுக்கும் கேள்விக்கிடமற்ற அதிகாரங்களை வழங்குகிறது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம். அதுவும் கூட தீவிரமாக எதிர்த்து வழக்காடப்படுவது உண்டு.


உச்சநீதி மன்றத்தின் முன்புள்ள கோத்ரா பிணை விவகாரங்களின் கால விவரம்:


பிப்ரவரி 22, 2002 கோத்ரா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் உச்சநீதி மன்றத்தின் முன்பு பிணை விடுவிப்புக் கோரி மனுப் போடலாம் என்று ஓய்வு பெற இருந்த நீதிபதி பி.பி.சிங் ஒரு உத்திரவு போட்டார். அவர்தான் கோத்ரா வழக்கு ""பொடா'' சட்டத்துக்குப் பொருந்தாது என்று தீர்ப்புச் சொன்னவர்.


ஏப்ரல் 10, 2007: உச்சநீதி மன்றத்தின் முன்பு பிணைக்கான மனுக்கள் போடப்பட்டன.


ஏப்ரல் 19, 2007: உச்சநீதி மன்றத்தின் வழக்குப் பதிவு அலுவலகத்தால் விவகாரம் விசாரணைக்கு நாள் குறிப்பிடப்பட்டது; ஆனால், அனைத்திந்திய நீதிபதிகள் சங்க விவகாரம் கேட்புக்கு வந்ததால் கோத்ரா பிணை வழக்கு விசாரிக்கப்படவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு கோடை விடுமுறை தொடங்க இருந்தது. இதனால் கோத்ரா வழக்கு விசாரணை ஜூலை 19, 2007 அன்று ""இறுதித் தீர்ப்பு''க்கு என்று பட்டியலிட வேண்டும் என்று உச்சநீதி மன்றம் வழிகாட்டியது. அதற்குப் பிறகு என்ன நடந்தது? உச்சநீதி மன்றம் கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூலை 18, 2007 அன்று திறந்தபோதும் இந்த விவகாரம் குறித்த எந்த அசைவும் நடக்கவில்லை.


ஆகஸ்டு முதல் வாரம், 2007: இதர விவகாரங்களுக்கான நாளில் விசாரிப்பதற்காக கோத்ரா வழக்கு விவகாரம் பட்டியலிடப்பட்டது. அப்போது இப்படிச் செய்வதால் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் பிரதிநிதிகளும், வழக்கறிஞர்களும் கோத்ராவில் இருந்து சொந்த செலவில் மீண்டும் நீதிமன்றம் வரவேண்டி இருக்கும் என்பதால் விசாரணைக்காக இதர அலுவல்கள் இல்லாத நாளில் பட்டியலிடும்படியும், அப்போதுதான் இறுதி வாதங்கள் நடத்த முடியும் என்றும் சுட்டிக் காட்டப்பட்டது.


நீதிபதிகள் அரசியல் சட்ட அமர்வு பிரிவில் பங்கேற்பதால், இரண்டரை அல்லது மூன்று மாதங்கள் ஒரு பொருட்டே இல்லை என்ற அடிப்படையில் விவகாரம் பட்டியலிடப்பட்டது. அதன் பிறகு, விவகாரம் இருப்பில் இருப்பதாகக் காட்டப்பட்ட போதும் உச்சநீதி மன்றப் பதிவு அலுவலகத்தால் நவம்பர் 1819இல் பட்டியலிடப்படவில்லை.


நவம்பர் 21,2007: குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் சட்டப் பிரதிநிதிகளால் விவகாரம் மீண்டும் சுட்டிக்காட்டப்பட்ட பிறகு அதைப் பட்டியலில் சேர்க்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.


டிசம்பர் முதல்வாரம், 2007: பிணை விவகாரங்கள் ""பொடா'' மறு ஆய்வு விவகாரங்களோடு சேர்த்து மீண்டும் இதர அலுவலக நாளில் பட்டியலிடப்பட்டது; அதாவது, வாதங்கள் முடிக்கப்பட முடியாது என்றாகியது.


டிசம்பர் 12, 2007: விவகாரங்கள் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி பஞ்சால் முன்பு பட்டியலிடப்பட்டது. அதனால், விவகாரத்தை டிசம்பர் 11 அன்றே பட்டியலிடும்படி குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் பிரதிநிதிகள் கோரினார்கள்; நீதிபதி பஞ்சால் குஜராத்தைச் சேர்ந்தவர், அவரது சகோதரர் குஜராத் அரசின் அதிகாரப்பூர்வ வழக்குரைஞராக உள்ளார் என்ற காரணங்களால் அவர் முன்பு வழக்கு விசாரணை வரக்கூடாது என்பதை அவர்கள் சுட்டிக் காட்டினார். நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. மீண்டும் ஒருமுறை பதிவு அலுவலகம் என்ன செய்கிறது?


டிசம்பர் 12, 2007: இந்த விவகாரத்தின் சூழ்நிலையில் அனைத்தும் அறிந்திருந்தும் டிசம்பர் 11 அன்று வழக்கைப் பட்டியலில் சேர்த்த பதிவு அலுவலகம், நீதிபதிகள் அகர்வால் மற்றும் சிங்வி முன்பு வைத்தது. (நீதிபதி சிங்வி ஏற்கெனவே ""பொடா'' மறுஆய்வுக் கமிட்டியில் விசாரணை நடத்தியவர் என்பதால் நீதிபதி பஞ்சாலைப் போன்ற பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டி வரும்) எதிர்பார்த்தபடியே ""என் முன்பு வேண்டாம்'' என்று நீதிபதி சிங்வி அடுத்தநாள் அறிவித்தார். மீண்டும் ஒருமுறை விவகாரத்தை வாதிட்டு, பிணை விடுவிப்பு பெறும் வாய்ப்பைப் பாதிக்கப்பட்டவர்கள் இழந்தார்கள்.


டிசம்பர் 12, 2007: குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் பிரதிநிதிகள் கிளர்ச்சியடைந்து அதே நாளன்று மதியம் விவகாரத்தை தலைமைத் தளபதியின் முன்பு கொண்டு சென்றார்கள்; பதிவு அலுவலகத்தில் மீண்டும் மீண்டும் பிரச்சினை எழுவதைக் குறிப்பிட்டார்கள். விவகாரம் ஜனவரி இரண்டாம் வாரம் குறிப்பிடப்பட வேண்டும் என்று வழிகாட்டிய தலைமை நீதிபதி, அதன் பிறகு மூன்று சிறப்பு நீதிபதிகள் அடங்கிய அமர்வுப் பிரிவை அமைத்து ஜனவரி இறுதிவாரத்தில் விசாரணைக்குப் பட்டியலிடுவதாகக் கூறினார்.


ஜனவரி 17, 2008: தலைமை நீதிபதியின் உத்திரவை ஒரு பொருட்டாக மதிக்காத உச்சநீதி மன்ற பதிவு அலுவலகம் ஜனவரி 17, 2008 வியாழனன்று வழக்கு விசாரணைக்குப் பட்டியலிட்டது; அந்த நாள் ஒரு இதர அலுவல் நாளாக இல்லாவிட்டாலும் வழக்கு விவாதங்கள் அடுத்த வாரத்துக்கும் நீடிக்கும். முதலில் வழக்கு விசாரணை நீதிபதிகள் சூரஜ் பான், சின்ஹா மற்றும் மாத்தூர் முன்பு விசாரணைக்கு வரும் என்று பட்டியலில் காட்டப்பட்டது; மாலையில் தலைமை நீதிபதி ரவீந்திரன் மற்றும் பஞ்சால் முன்பு ஜனவரி 16ஆம் தேதியே விசாரிக்கப்படும் என்று மாற்றப்பட்டது. ஏற்கெனவே ஆட்சேபிக்கப்பட்டும், வழக்கை விசாரிக்க முடியாத ஒரு நீதிபதி முன்பு விசாரணை நடத்தும்படி பதிவு அலுவலகம் எப்படிப் பட்டியலிடலாம்? விவகாரம் அடுத்த வாரத்திலேயோ, அதற்கு முந்தைய தேதியிலோ விசாரணை நடக்கும் என்று ஜனவரி 17, 2008 அன்று தலைமை நீதிபதி தள்ளி வைத்தார். தனிநபர் சுதந்திரம் மீண்டும் மறுக்கப்பட்டது; நாட்டின் அதிஉயர்ந்த நீதிமன்றப் பதிவு அலுவலகத்தில் என்ன நடக்கிறது என்று கேள்வி எழுப்பப்படவே இல்லை.


உச்சநீதி மன்றத்தின் இயக்க அமைப்பு முறை குறித்து எந்தக் கேள்வியும் எழுப்ப முடியுமா?


எந்த விவகாரம் தானாக முக்கியத்துவம் பெற முடிகிறது? முக்கியத்துவம் பெற முடியாமல் போகிறது?


எந்த விவகாரம் உச்சநீதி மன்றத்தின் கால தாமதங்களாலும் இடைக்கால உத்தரவுகளாலும் பாதிக்கப்படுகிறது?


தனிநபர் சுதந்திரம், அடிப்படை உரிமைகள் மறுப்பு, பெரும்திரள் குற்றங்கள் ஆகியவற்றுக்கும் பணக்காரர்களை தண்டனைகளில் இருந்து பாதுகாப்பது, ஆதிக்க சாதிகளின் அக்கறைக்குரியவை ஆகியவற்றுக்குமிடையில் எதற்கு முன்னுரிமை வழங்குவது என்பது கிடையாதா?


கேள்வி எழுப்பாவிட்டால் நாம் பதில் பெற முடியாது.


நாட்டின் அதிஉயர்ந்த நீதிமன்றத்தின் பொறுப்புகளைக் கேள்வி கேட்கும் சமயம் வந்துவிட்டது.
இந்திய உச்சநீதி மன்றம் அதன் ஆன்மாவை இழந்து விட்டதா, அடிப்படை உரிமை மீறல்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கண்கள் குருடாகி விட்டனவா?


அப்படியானால் நாம் யாரிடம் போவது?
···
இவ்வாறு உச்சநீதி மன்றத்தின் பாராபட்சமான போக்குகளை ஆதாரத்துடன் எடுத்து வைத்து இந்தக் கேள்விகளை எழுப்பி அதை தோலுரித்துக் காட்டிவிட்டார் தீஸ்தா என்பதற்காகத்தான் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் அவர்மீது பாய்ந்திருக்கிறார்.


தமிழ்நாட்டிலே ஒரு கதை சொல்வார்கள். பிறந்தது முதல் பல ஆண்டுகள் பேசாதிருந்த குழந்தை ஏதோ புண்ணியத்தால் பேச்சு வந்து, முதலில் வாய் திறந்ததும் தாயைப் பார்த்துக் கேட்டதாம், ""எப்பம்மா தாலி அறுப்பாய்!'' அதைப் போல முதன்முறையாக ஒரு தலித் உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதியாகியிருக்கிறார் என்று பாலகிருஷ்ணன் பதவியேற்றபோது கொண்டாடினார்கள். அவர் தான் இப்போது ஒரு இந்துமதவெறி பாசிசத்தின் பாதந்தாங்கி என்பதைக் காட்டிவிட்டார்.


உச்சநீதி மன்றம் இவ்வாறான பாரபட்சத்தையும் பச்சையான பாசிச போக்கையும் காட்டுவது ஒன்றும் புதியதில்லை.


நாட்டின் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி காரே, பிரபல முதிய வழக்குரைஞர் டாண்டன் போன்றவர்களுக்கு எதிராக வெறும் 40,000 ரூபாய் இலஞ்சம் கொடுத்து குஜராத்அகமதாபாத் குற்றவியல் நீதிபதி பிரம்பட் என்பவரிடம் பிணையில் வரமுடியாத கைது வாரண்ட் வாங்கி, நீதித்துறையில் நிலவும் இலஞ்ச ஊழல் அதிகார முறைகேடுகளை அம்பலத்தினார், "ஜி' தொலைக்காட்சி பத்திரிக்கையாளர். அந்த நீதிபதியை குற்றமற்றவர் என்று குஜராத் உயர்நீதி மன்றம் தீர்ப்புக் கூறியது. உச்சநீதி மன்றத்துக்கு இந்த வழக்கு வந்து மத்தியமாநில அரசுகளுக்கும், குஜராத் உயர்நீதி மன்ற பதிவு அலுவலகத்துக்கும், குற்றவாளி பிரமபட்டுக்கும் நோட்டீசு அனுப்பிய போதும், அரசு, விசாரணை அதிகாரியை நியமிக்காது வழக்கைக் கிடப்பில் போட்டுவிட்டது. ஆனால், நீதித்துறையை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் விஜய் சேகரை நீதிமன்றத்துக்கு இழுத்து நிபந்தனையைற்ற மன்னிப்புக் கேட்டும்படி உத்திரவிட்டுள்ளது, உச்சநீதி மன்றம்.


போலி மோதல் கொலை உட்பட இந்து பாசிச வெறியாட்டத்தை நியாயப்படுத்தி மோடி போன்ற கிரிமினல் குற்றவாளிகள் பகிரங்கமாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தும்கூட, அவர்களைத் தண்டிப்பதில் எந்த வேகமும் விவேகமும் காட்டவில்லை. அதேசமயம் உச்சநீதி மன்றத் தீர்ப்பை விமர்சித்தார் என்பதற்காக அருந்ததி ராய் மீதும், முன்னாள் தலைமை நீதிபதி சபர்வாலின் அதிகார முறைகேடுகளை அம்பலப்படுத்தியத்திற்காக மும்பை ""மிட்டே'' இதழின் பொறுப்பாளர்களையும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் போட்டுத் தண்டித்தது, உச்சநீதி மன்றம்
அரசின் ஊழல் தடுப்பு அமைப்புகள் போன்ற பிற அங்கங்கள், இராணுவம் உட்பட வேறு ஏதாவது அரசு நிறுவனங்களுக்கோ, நீதிமன்றங்களுக்கோ பதில் சொல்ல வேண்டியவைகளாக, குறைந்தது சட்டப்படியாவது, இருக்கின்றன. ஆனால், உயர் மற்றும் உச்சநீதி மன்றங்கள் ஜனநாயகபூர்வமாக மக்களுக்கோ, வேறு எந்த அமைப்புக்கோ பதில் சொல்ல வேண்டியதில்லை என்பதால் பச்சை பாசிச ஆட்டம் போடுகிறது.