aug_2007.jpg

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்திலுள்ள சிகரல அள்ளி கிராமத்தைச் சேர்ந்த 90 தாழ்த்தப்பட்ட குடும்பத்தினர், வசிக்க வீடின்றி ஓடைகளின் கரையோரங்களில் குடிசை போட்டு வாழ்ந்து வந்த நிலையில், 1980ஆம் ஆண்டு இம்மக்களுக்குத் தொகுப்பு வீடுகள் கட்டித் தரும் திட்டப்படி, சின்னப்பொண்ணு என்பவரது நிலத்தைத் தமிழக அரசு கையகப்படுத்தி, உரிய தொகையையும் அளித்துள்ளது.

ஆனால், சின்னப்பொண்ணு வகையறா தனது சாதி மற்றும் கட்சியின் பலத்தைக் காட்டி மிரட்டி, பத்தாண்டுகளாகத் தாழ்த்தப்பட்டோரை நிலத்தின் பக்கமே அண்டவிடாமல் செய்து, தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தது. மறுபுறம் இக்கும்பல் நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற முயன்று தோல்வியடைந்ததால், தாழ்த்தப்பட்ட மக்களை உருட்டி மிரட்டி பட்டாவை அரசிடமே திரும்ப ஒப்படைக்குமாறும், குடியிருக்கும் குடிசை வீடுகளை இடித்துவிட்டு அங்கேயே காலனி வீடு கட்டிக் கொள்ளுமாறும் அச்சுறுத்தி வந்தது.

 

இப்பகுதியில் இயங்கிவரும் வி.வி.மு. இக்கொடுஞ்செயலுக்கு எதிராகத் தாழ்த்தப்பட்டோரை அணிதிரட்டி '90களின் மத்தியில் போராடியபோது, இக்கும்பல் கொடிய ஆயுதங்களுடன் வெறிகொண்டு தாக்கியது. பெண்கள், முதியோர் உள்ளிட்டு பலர் இத்தாக்குதலில் படுகாயமடைந்து, பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

 

இதைத் தொடர்ந்து சாதிக் கலவரமும் சட்டம்ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படும் என்று சாக்குப்போக்கு கூறி அதிகாரிகள் இந்த ஊர்ப் பக்கமே தலைகாட்டவில்லை. கிராம நிர்வாக அலுவலர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை மனு கொடுத்துப் போராடியும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்த நியாயமும் கிடைக்கவில்லை. பின்னர் இம்மக்கள் வி.வி.மு.வின் உதவியோடு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கை மனித உரிமைப் பாதுகாப்பு மையம் (ஏகீகஇ) நடத்தி வந்தது.

 

கடந்த 12 ஆண்டுகளாக இந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம், ""பட்டா வழங்கியும் 24 ஆண்டு காலமாகத் தாழ்த்தப்பட்ட ஏழை மக்கள் அனுபவிக்க முடியாமல் இருப்பது வருந்தத்தக்கது; இது அநீதியானது'' என்று கடந்த ஜூன் 6ஆம் தேதியன்று தீர்ப்பளித்து, எட்டு வாரத்திற்குள் நிலத்தை அளந்து அத்துகாட்ட வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியருக்கும் உத்தரவிட்டுள்ளது.

 

இதற்குப் பின்னரும்கூட, ஆதிக்க சக்திகள் இக்கிராம தாழ்த்தப்பட்ட மக்களை மிரட்டி அச்சுறுத்தி வருகின்றன. அதிகார வர்க்கமோ தனது சிகப்பு நாடாத்தனத்துடன் இழுத்தடிக்கிறது. நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்குவதாகப் பீற்றிக் கொள்ளும் தமிழக அரசு, பட்டா கிடைத்தும் அதைத் தாழ்த்தப்பட்டோர் அனுபவிக்க விடாமல் தடுக்கும் ஆதிக்க சக்திகளை அதிரடிப் படையை ஏவி ஒடுக்காமல் கைகட்டி நிற்கிறது.

 

இக்கொடுமையை அம்பலப்படுத்தியும், உயர்நீதி மன்ற உத்தரவை உடனடியாகச் செயல்படுத்தக் கோரியும் உழைக்கும் மக்களை அணிதிரட்டி 19.7.07 அன்று பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தோழர் அருண் தலைமையில் வி.வி.மு. ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. வி.வி.மு.வின் உறுதியான போராட்டத்தால் நியாயமான தீர்ப்பைப் பெற்றுள்ள சிகரலஅள்ளி தாழ்த்தப்பட்ட மக்கள், பெருந்திரளாக இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதோடு, நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த அடுத்தகட்டப் போராட்டத்துக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.