aug_2007.jpg

தாழ்த்தப்பட்ட சாதியினர் பழங்குடியினர் மீதான (வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் 1989ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு நாடு முழுவதும் இம்மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து இழைக்கப்படும் வன்கொடுமைச் சம்பவங்களில் மிகமிக முக்கியமானவற்றையும் வகைமாதிரிகளையும் பின்வருமாறு தொகுக்க முடியும்.

 

தமிழ்நாடு

· தூத்துக்குடி மாவட்டம், கொடியங்குளம்; ஆகஸ்டு, 1995. பள்ளர் எனப்படும் தேவேந்திர குல வேளாளர் வாழும் இக்கிராமத்துக்குள் புகுந்த அறுநூறுக்கும் மேற்பட்ட போலீசார் அம்மக்களைத் தாக்கி வன்முறை வெறியாட்டம் நடத்தி, சூறையாடினர். அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த மறவர்களாகிய ஆதிக்க சாதியினர் மீதான தாக்குதல்களுக்குக் கொடியங்குளம் தாழ்த்தப்பட்ட சாதியின் வசதி படைத்தவர்கள்தாம் காரணம் என்றும் அவர்கள் பயங்கர ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருப்பதாகவும் கூறி இத்தாக்குதல் கொலைவெறியாட்டம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் பல இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக அற்பக் காரணங்கள் கூறி மறவர், நாய்க்கர், நாடார் முதலிய ஆதிக்க சாதியினர் கொலைவெறித் தாக்குதல்களை நடத்தினர்.

 

· மதுரை மாவட்டம், மேலவளவு, ஜூன், 1997. வெளியூர் சென்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த மேலவளவு உள்ளூராட்சித் தலைவர் முருகேசனும் மற்றும் நான்கு தாழ்த்தப்பட்டவர்களும் முக்குலத்தோர் என்ற ஆதிக்க சாதிக் கொலைவெறிக் கும்பலால் பேருந்தை வழிமறித்து பட்டப்பகலில் ஓடஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்டனர். தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மேலவளவு உள்ளூராட்சித் தலைவர் தேர்தலில் ஆதிக்க சாதி எதிர்ப்பை மீறிப் போட்டியிட்டு, தலைவரானதற்குப் பழிதீர்க்கவே இந்தப் படுகொலை நடந்தது.

 

· திருநெல்வேலி மாவட்டம், ஜூலை, 1999. நெல்லையில், மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய பேரணி மீது போலீசார் நடத்திய மிருகத்தனமான தாக்குதல் காரணமாக 11 தாழ்த்தப்பட்டவர்கள் உட்பட 17 பேர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி மாண்டு போனார்கள்.


· தருமபுரி மாவட்டம், 2001ஆம் ஆண்டு. அரூர் அருகே உள்ள வாச்சாத்தி கிராமத்துக்குள் புகுந்த இருநூறுகும் மேற்பட்ட போலீசு மற்றும் காட்டிலாகா காவலர்கள் பழங்குடியினப் பெண்கள் மீது பாலின வன்முறை ஏவி வெறியாட்டம் போட்டனர். சந்தனமரக் கடத்தலில் அக்கிராம மக்கள் ஈடுபட்டிருப்பதாக அத்தாக்குதலுக்குப் பொய்க் காரணம் கூறப்பட்டது.

 

· கடலூர் மாவட்டம், புதுக்கூøரப்பேட்டை கிராமம், ஜூலை, 2003ஆம் ஆண்டு. பொறியியல் படித்த தாழ்த்தப்பட்ட இளைஞனும், வன்னிய சாதி பெண்ணும் காதலித்த ""குற்றத்திற்காக'' ஆதிக்க சாதிக் கும்பலால் மரத்தில் கட்டிவைத்து உற்றார் உறவினர் முன்னிலையில் வாயில் நஞ்சு ஊற்றிக் கொன்று எரிக்கப்பட்டனர். இக்கொடூரச் செயலில் தாழ்த்தப்பட்ட உறவினரே பங்கேற்றதாக வழக்கைப் புனைந்து சாதிவெறியர்களைத் தப்புவிக்கும் வேலையில் சி.பி.ஐ.யே ஈடுபட்டிருக்கிறது.

 

ஆந்திரப் பிரதேசம்

· குண்டூர் மாவட்டம், ஆகஸ்டு, 1991ஆம் ஆண்டு, சுண்டூர் கிராமம். ரெட்டி மற்றும் கப்பு ஆகிய ஆதிக்க சாதியினரால் எட்டு தாழ்த்தப்பட்டவர்கள் கண்ட துண்டமாக வெட்டப்பட்டு, கோணிப் பையிலே திணிக்கப்பட்டு, சாக்கடையில் வீசப்பட்டனர். 16 ஆண்டுகளாகியும் குற்றவாளிகள் இன்னமும் தண்டிக்கப்படவில்லை.

 

· பிரகாசம் மாவட்டம், ஜூலை 1985, கரம்சேடு கிராமம். தாழ்த்தப்பட்ட மக்கள் குடிநீருக்காகப் பயன்படுத்தும் குளத்தில் ஒரு ஆதிக்க சாதிக்காரன் எருமை மாட்டைக் குளிப்பாட்டியதை ஒரு பெண் ஆட்சேபித்ததற்காக கம்மா நாயுடு சாதிக்காரர்கள் கூடி ஒரு பெண்ணை பாலியல் வன்முறை செய்ததோடு, ஐந்து தாழ்த்தப்பட்டவரை துரத்தித் துரத்தி வெட்டிக் கொன்றனர். இந்த வழக்கில் 5 பேருக்கு ஆயுளும், 47 பேருக்கு பல்வேறு ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதித்தது அமர்வு நீதிமன்றம். மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம் குற்றஞ் சாட்டப்பட்ட 150 பேரையும் விடுதலை செய்தது.

 

· குண்டூர் மாவட்டம், ஜூலை, 1987, நீருகொண்டா கிராமம். கம்மா நாயுடுகளின் வீட்டு முன்பு தாழ்த்தப்பட்ட மக்கள் திருமண ஊர்வலம் சென்றதற்காக ஆதிக்க சாதியினர் நடத்திய தாக்குதலில் ஒரு தாழ்த்தப்பட்டவர் கொல்லப்பட்டதோடு மேலும் 15 பேர் படுகாயமுற்றனர்.

 

கர்நாடகா

· கோலார் மாவட்டம், கம்பலப்பள்ளி கிராமம், மார்ச், 2000. ஏழு தாழ்த்தப்பட்டோர் இரண்டு சிறிய குடிசைகளில் தள்ளிப் பூட்டப்பட்டு, உயிரோடு கொளுத்தப்பட்டனர். தாழ்த்தப்பட்டோர் அமைப்பாக திரளுவதன் காரணமாக வளர்ந்து வந்த பகைதான் இந்தக் கொலைவெறிச் செயலுக்குக் காரணம் என்றபோதும், ஒரு ரெட்டி சாதி தண்ணீர்க்காரனைக் கொன்றதாகப் பழிபோட்டு, ரெட்டிகள் கூடிச் செய்திருக்கின்றனர். கொலைக் குற்றவாளிகள் அனைவரும் கடந்த ஆண்டு இறுதியில் விடுதலை செய்யப்பட்டனர்.


· பெல்லாரி மாவட்டம், வன்னேனூர், ஆகஸ்டு, 2001. ெரம்மா என்ற தாழ்த்தப்பட்ட கூலி விவசாயப் பெண் வால்மீகி சாதியினரால் அவர் வீட்டிலிருந்து வெளியே இழுத்து வரப்பட்டு, நிர்வாணப்படுத்தி, அடித்து கிராமத் தெருவில் ஊர்வலமாக நடத்திச் செல்லப்பட்டார். தாழ்த்தப்பட்ட பையனுக்கும் வால்மீகிப் பெண்ணுக்கும் இடையிலான காதலுக்கு அவர் உடந்தையாய் இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டார். ஊர் மந்தையிலுள்ள மரத்தில் அவரைக் கட்டிப் போட்டு அடித்தனர்.

 

· பிஜாப்பூர் மாவட்டம், கடாகோல் கிராமம், ஜூலை, 2006. கிராமக் குளத்தில் குடிதண்ணீர் எடுத்ததற்காக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக, குறிப்பாக கூலி விவசாயிகளுக்கு எதிராக ஆதிக்க சாதியினர் சமூகப் புறக்கணிப்பு விதித்தனர். அந்தக் குளத்தில் துணிகளைத் துவைத்தும், கால்நடைகளைக் குளிப்பாட்டியும், மனிதக் கழிவுகளைக் கொட்டியும் ஆதிக்க சாதியினர் நாசப்படுத்தினர். அவர்கள் தங்கள் நிலங்களிலும், வீடுகளிலும் தாழ்த்தப்பட்டோருக்கு வேலை அளிக்க மறுத்ததோடு, இவர்கள் அரசுக் கடைகளில் இருந்து பொருட்கள் வாங்குவதையும் தடுத்தனர். மூன்று மாதங்கள் நீடித்த இந்தச் சமூக ஒதுக்கலை ஆதிக்க சாதியினர் கடைப்பிடித்தனர். மாவட்ட ஆட்சியினர் தலையிட்டு பஞ்சாயத்து செய்த பின்னரே விலக்கிக் கொண்டனர்.

 

மராட்டியம்

· நான்டெட் மாவட்டம், நவம்பர் 1993. கௌதம் வாக்மரே என்ற தாழ்த்தப்பட்ட இளைஞர் தீக்குளித்து இறந்து போனார். 1978ஆம் ஆண்டு மராட்டிய சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானமாகிய மரத்வாடா பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்டுவதை காங்கிரசின் மராத்தா சாதி தலைவர்களும், சிவசேனாவும், ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களும் எதிர்த்ததைத் தொடர்ந்து, பல ஆண்டுகளாகத் தள்ளிப் போடப்படுவதைக் கண்டித்துத்தான் அந்த இளைஞர் தீக்குளித்தார். அதைத் தொடர்ந்து, வடமராட்டியத்தின் பல மாவட்டங்களிலும் ஆதிக்க சாதியினரால் தாழ்த்தப்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

 

· மும்பை, ராம்பாய் நகர், ஜூலை, 1997ஆம் ஆண்டு. அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை போட்டு அவமரியாதை செய்யப்பட்டதைக் கண்டு ராம்பாய் நகர் குடிசைப் பகுதியில் திரண்ட தாழ்த்தப்பட்ட மக்கள் காலை ஏழு மணிக்கு நெடுஞ்சாலையில் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த சிறப்பு ரிசர்வ் படை, நிராயுதபாணிகளான தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வேண்டுமென்றே துப்பாக்கிச் சூடு நடத்தி 10 பேரைப் படுகொலை செய்தது. ஒரு சொகுசுப் பேருந்தைப் போராட்டக்காரர்கள் எரித்ததைச் சாக்கு வைத்து கண்ணீர்ப் புகைக் குண்டு வீசியும் தடியடி நடத்தியும் பலரைப் படுகாயமுறச் செய்தது, போலீசுப்படை. பின்னர் அமைக்கப்பட்ட விசாரணைக் கமிசன், போலீசு துணை ஆணையாளர் கதம் என்பவர் நியாயமின்றி, தேவையின்றி, வேண்டுமென்றே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றஞ்சாட்டியது. ஆனால், 10 ஆண்டுகளாகியும், அந்த அதிகாரிக்கு எதிராக வழக்கு நடத்தப்படவில்லை; பதவி உயர்வுதான் பெற்றுள்ளார்.

 

· நாக்பூர், நவம்பர், 1994ஆம் ஆண்டு. நாக்பூரில் கூடிய சட்டமன்றக்கூட்டத்தின்போது, ""கோண்ட் கோவரி'' என்று குறிப்பிடப்பட்டுள்ளதை ""கோண்ட், கோவரி'' என்று திருத்தும்படி கோரிக்கை மனுக் கொடுக்கப் போன, மலைவாழ் மக்கள் பேரணி மீது போலீசு கட்டவிழ்த்துவிட்ட காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

 

· நாக்பூர் மாவட்டம், கையர்லாஞ்சி கிராமம். செப்டம்பர் 2006ஆம் ஆண்டு. தாழ்த்தப்பட்ட சாதிச் சிறு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் பதின்வயது மகளும் நிர்வாணமாக்கப்பட்டு அடித்து இழுத்துவரப்பட்டு கிராமத் திடலில் ஆதிக்க சாதி ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் முன்னிலையில் கும்பலாக வன்புணர்ச்சி செய்து கொல்லப்பட்டனர். அப்பெண்கள் பிணமான பின்னும் வன்புணர்ச்சி செய்து பிறப்பு உறுப்புக்களை கம்புகளால் குத்திக் கிழித்தனர். அக்குடும்பத்தின் இரு இளைஞர்களைத் தம் தாயோடும் சகோதரியோடும் வன்புணர்ச்சி செய்யும்படி கொடுமைப்படுத்தினர். அவர்கள் மறுக்கவே அவர்களின் ஆண் உறுப்புகளை கல்லால் அடித்து நசுக்கிக் கொல்லப்பட்டனர். நால்வரின் உடல்களும் கால்வாய்க ளில் வீசப்பட்டன. சம்பவத்துக்கு போலீசு உடந்தையாக இருந்ததோடு குற்றவாளிகளைக் காக்கவே முயன்று வருகிறது.

 

பீகார்

·போஜ்பூர் மாவட்டம், பதானி தோலா, ஜூலை, 1996. ரன்வீர் சேனா எனப்படும் பூமிகார் ஆதிக்க சாதித் தனிப்படையினால் 19 தாழ்த்தப்பட்ட மக்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர். இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (மாலெ) தலைமையில் அணிதிரண்டு, ஆதிக்க சாதியினரின் நிலவெளியேற்றத்துக்கு எதிராகப் போராடியதற்காக இந்தப் படுகொலைகள் நடந்தன. இதைத் தொடர்ந்து மேலும் பல கிராமங்களில் இம்மாதிரியான தொடர் படுகொலைகள் நடந்தன.

 

· ஜெகனாபாத் மாவட்டம், லக்கிம்பூர் பாதே கிராமம், டிசம்பர் 1997. பீகாரின் வரலாற்றில் நடந்த மிகப் பெரிய படுகொலைச் சம்பவம். ரன்வீர் சேனா வெறியர்களால் 16 குழந்தைகள் உட்பட 63 தாழ்த்தப்பட்ட மக்கள் படுகொலை கொல்லப்பட்டனர். அவர்களில் ஐந்து பதின்வயது பெண்கள் பாலியல் வன்முறை செய்து சுட்டுக் கொல்லப்பட்டனர். மூன்று மாதத்திற்குப் பிறகு 250 ரன்வீர் சேனா குண்டர்கள் மீது வழக்குப் போடப்பட்டிருந்தாலும் பத்தாண்டுகளாகியும் யாரும் தண்டிக்கப்படவில்லை.

 

· ஜெகனாபாத் மாவட்டம், சங்கர் பிகா கிராமம், ஜனவரி 1999. தாழ்த்தப்பட்ட மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு எதிராக சந்தா மற்றும் சௌராம் கிராமங்களின் ரன்வீர் சேனா குண்டர்கள் 11 பேரை மாவோயிச கம்யூனிச மையம் என்ற புரட்சிகர அமைப்பு அழித்தொழித்தது. அதற்கு பழிவாங்கும் செயலாக சங்கர் பிகா கிராமத்துக்குள் புகுந்த ரன்வீர் சேனா, உறங்கிக் கொண்டிருந்த 23 தாழ்த்தப்பட்டவர்களைச் சுட்டுக் கொன்றது. அடுத்த மாதமே நாராயன்பூர் கிராமத்தில் இதேபோல 11 தாழ்த்தப்பட்டவர்களைச் சுட்டுக் கொன்றது.

 

· ஜெகன்னாபாத் மாவட்டம், பெல்சி கிராமம், ஜனவரி 2006. ஒரு நிலப்பிரச்சினை காரணமாக குர்மி மற்றும் யாதவர்கள் ஆகிய ஆதிக்க சாதிக்காரர்களால் 6 தாழ்த்தப்பட்டவர்கள் உயிரோடு கொளுத்தப்பட்டனர்.

 

அரியானா

· ஜஜ்ஜார் மாவட்டம், துலியானா, அக்டோபர் 2002. கிராம போலீசு சாவடிக்கு முன்பாகவே ஐந்து தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் வெட்டிக் கொல்லப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டனர். மாவட்ட நிர்வாக நீதிபதி, வட்டார வளர்ச்சி அதிகாரி மற்றும் போலீசு துணைக் கண்காணிப்பாளர் முன்னிலையில் இக்கொடூரம் நடந்தது. அருகிலுள்ள நகரில் இருந்து வியாபாரத்துக்காக கால்நடைத் தோலை லாரியில் ஏற்றி வந்த அந்த இளைஞர்கள் பசுக்களைக் கொன்றதாக (பசுவதையாம்!) பழிபோட்டு தசரா விழாவிலிருந்து திரும்பிய ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த இந்துமதவெறியர்கள் இக்கொடூரத்தை நிகழ்த்தினர்.

 

· ரோடக் மாவட்டம், பிராவார் கிராமம், அக்டோபர் 2003. இக்கிராம பஞ்சாயத்துத் தலைவரான தாழ்த்தப்பட்டவர் காணாமல் போய் நான்காண்டுகளுக்கு மேலாகிறது. புறம்போக்கு மேய்ச்சல் நிலத்தை ஆதிக்க சாதியினர் கைப்பற்றிக் கொள்வதை எதிர்த்ததற்காக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று புகார் கொடுத்தும், போலி கம்யூனிஸ்டுகள் தலைமையில் ""தலித்'' அமைப்புகள் முறையிட்டும் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்போதைய ஆளும் தேசிய லோக்தள், காங்கிரசு மற்றும் பா.ஜ.க. ஆகிய ஆதிக்க சாதிக்கட்சிகள் இதற்காகக் கூடிய பேராயத்தைப் புறக்கணித்தனர்.

 

· சோனேபட், கோகனா கிராமம், ஆகஸ்டு 2005. தாழ்த்தப்பட்ட வால்மீகி இளைஞர் ஒரு ஆதிக்கசாதி இளைஞனைக் கொலை செய்ததாகக் கூறி இக்கிராமத்தின் ஐம்பது வால்மீகிகள் வீடுகள் கொளுத்தப்பட்டன. போலீசு முன்னிலையில் நடந்த இந்த வெறிச் செயலின் பின்னணியில் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் இருந்துள்ளார்.

 

· கர்னல் மாவட்டம், மகமத்பூர் கிராமம், பிப்ரவரி 2006. இரவிதாசரின் பிறந்தநாள் விழா ஊர்வலத்தை ஆதிக்க சாதியினர் வாழும் தெருவழியாக நடத்தியதாகக் கூறி, ஆதிக்க சாதியினர் கூடி தாழ்த்தப்பட்ட மக்களைத் தாக்கி அவர்களின் வீடுகளைச் சூறையாடினர். உண்மையான காரணம் என்னவென்றால், உள்ளூராட்சித் தேர்தலில் ஆதிக்க சாதி வேட்பாளர்களை ஆதரிக்க மறுத்ததற்காக பழிவாங்கும் செயலாக இத்தாக்குதல் நடந்துள்ளது.

 

· ஜுந்த் மாவட்டம், கிலாஜா ஃபார்கர் கிராமம். தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் நடத்திய கலாச்சார நிகழ்ச்சியின்போது தகராறு செய்த ஆதிக்க சாதி இளைஞர்களைத் தட்டிக் கேட்டவர்களை தாக்கி 75 தாழ்த்தப்பட்டோர் வீடுகளை சூறையாடினர். தாழ்த்தப்பட்டவர் குடும்ப உறுப்பினர்களும் தாக்குதலுக்கு இலக்காகினர். பல குடும்பங்கள் ஊரைவிட்டே ஓடும்படி நேர்ந்தது. ஆதிக்க சாதியினருக்கு எதிரான புகார்களை விலக்கிக் கொள்ளும்படி செய்து, மீண்டும் கிராமத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.

 

— மேற்கண்டவை எல்லாம் வகைமாதிரிகளுக்காகத் தொகுக்கப்பட்ட ஒரு சில வன்கொடுமைச் சம்பவங்கள் தாம்! மலத்தைத் திண்ண வைப்பது, வாயிலே சிறுநீர் கழிப்பது, நிர்வாணப்படுத்திக் கும்பலாகப் பாலியல் வன்முறை செய்வது என்று எவ்வளவோ கொடுமைகள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிராக நாளும் தொடர்ந்து நடைபெறுகின்றன.

 

எ கல்விவேலை வாய்ப்பிலும், உள்ளூராட்சி முதல் சட்டமன்ற நாடாளுமன்ற அமைப்புகளிலும் இடஒதுக்கீடு போன்ற சீர்திருத்தங்களால் அரசியல், சமூக, பொருளாதாரம், பண்பாடு கல்வி ஆகியவற்றில் படிப்படியான முன்னேற்றம் அடைவதன் மூலம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும்.

 

எ உலகமயமாக்கம் என்ற புதிய பொருளாதாரத்தின் தாக்கம் காரணமாக முதலாளியத்திற்கு முந்தைய வடிவமான சாதிய முறையானது கட்டுடைந்து சிதையத் தொடங்கும்.

 

— என்ற பழைய, புதிய சீர்திருத்தவாதிகளின் எதிர்பார்ப்பும் மதிப்பீடும் முற்றிலும் தவறாகி வருவதையே மேற்கண்ட சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன. சாதியக் கொடுமைகள் பற்றிய கடந்த இருபதாண்டுகளின் புள்ளி விவரங்கள் காட்டுவதென்னவென்றால், அவை எல்லா வகைகளிலும் மேலும் மேலும் பெருகி வருகின்றன. உலகமயமாக்கமோ, வன்கொடுமைச் சட்டமோ அவற்றைக் குறைத்துவிடவில்லை.

 

இந்த விவரங்கள் இரண்டு உண்மைகளை வெட்டவெளிச்சமாக்குகின்றன. சாதிய அட்டூழியங்கள் நடைபெறும் போதெல்லாம் நடவடிக்கைகள் எடுப்பதுபோல நாடகமாடும் அரசு, குற்றவாளிகளைக் காப்பதிலும், சாதிய சமரசம் செய்வதிலும், ஆதிக்க சக்திகளுக்குத் துணைபோவதுமாக உள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களின் பெயரால் நடத்தப்படும் அரசியல் இயக்கங்கள் ஓட்டுக் கட்சி அரசியல் என்ற மைய அரசியல் நீரோட்டத்துக்குள் இழுக்கப்பட்டு, தலித்திய அரசியல் திவாலாகிப் போயுள்ளதையும் காட்டுகின்றன.


தொடரும்